வீட்டில் நாம் எதையாவது ஒரு செயலை செய்ய முற்படும்போது எப்பொழுதும் எண்ணத்தை ஒருமுகப்படுத்தி செய்யத் துவங்குவோம். எப்பொழுதாவது கவனக் குறைவாக தேங்காய் எண்ணெயை எடுத்து கையில் ஊற்றும் பொழுது சில நேரங்களில் கீழே வழிந்துவிடும். நாம் அதை கையில் எடுக்கும்போது குளிர்காலம்தானே உறைந்துபோய் இருக்கும் என்று எடுப்போம். சில நேரங்களில் அது நீர்த்துபோய் இருப்பது தெரியாமல் சாய்க்கும் பொழுது வழிந்துவிடும். ஒரே ஒரு நிமிட கவனக் குறைவால் வழிந்த பாட்டிலை துடைத்து, பிறகு தரையைத் துடைத்து, துணிகளில்பட்டால் அவற்றை மாற்றி என்று சிறிது நேரம் கவனக்குறைவால் பல்வேறு வேலைகளை செய்ய வைத்துவிடும்.
வீட்டில் உள்ள பெரியவர்களும் கோபப்பட தொடங்குவார்கள். எல்லாம் கவனக்குறைவால் வருவதுதான். கவனத்தை எங்கே வைச்சிருக்கே மனதை ஒருநிலைப்படுத்தி வேலையைச் செய் என்று அதட்டுவார்கள். பிறகு நாம் மனம் ஒன்றிய நிலையில் வேலைகளைச் செய்யத் தொடங்குவது அன்றாட நிகழ்வு.
முதல் உலகப் போரின்போது முசோலினி உடலில் பல குண்டு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்து குண்டுகளை அகற்ற வேண்டி இருப்பதால் மயக்க மருந்து அளிக்க முனைந்தனர்.
ஆனால், முசோலினியோ, மயக்க மருந்து வேண்டாம். என் கையில் ஒரு புத்தகத்தை கொடுத்துவிட்டு நீங்கள் அறுவை சிகிச்சையை முடியுங்கள். முடிந்து விட்டதும் சொல்லுங்கள் என்றாராம். பிறகு அறுவை சிகிச்சை முடிந்து விட்டது என்றதும் தான் புத்தகத்தை கீழே வைத்தாராம் முசோலினி.
முசோலினி அறுவை சிகிச்சை முடியும்வரை தன் மனதை புத்தகத்திலேயே குவித்திருந்தார். எனவேதான் அறுவை சிகிச்சையின் வலி தெரியாமல் துண்டுகளை அகற்ற முடிந்தது. முசோலினியின் மனதை ஒருமுகப்படுத்தும் திறன்தான் பிற்காலத்தில் அவரை இத்தாலிய அதிபர் ஆகியது.
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர்நீச்சல் என்று சும்மாவா சொன்னார்கள். அலைபாயும் மனதை ஒருமுகப்படுத்துதல் என்பதுதான் இங்கு எதிர்நீச்சல். மனதுக்கு போடப்படும் கடிவாளம் தான் அது. நாமும் மனதை ஒருமுகப்படுத்தி செய்யும் செயலை வெற்றிகரமாக முடிக்க எதிர்நீச்சல் போடுவோமாக!