2023 முடிவுக்கு வந்துவிட்டது, பெரும்பாலும் உங்களில் பலர் அடுத்த ஆண்டு என்ன செய்யலாம் என்பதற்கான இலக்குகளை லிஸ்ட் போட்டு வைத்திருப்பீர்கள். 2023 உங்களுக்கு எவ்வளவு மோசமானதாக இருந்திருந்தாலும், 2024ல் உங்கள் வாழ்க்கையை மாற்றும் பல விஷயங்களை நீங்கள் செய்ய முடியும் என்பதை முழுமையாக நம்புங்கள். 2024 புதிய இலக்குகளுடன் காலடி எடுத்து வையுங்கள். இந்த பதிவில் உலகின் மிகச் சிறந்த நபர்களாகப் பார்க்கப்படும் டாப் 1% நபர்களைப் போல நீங்களும் மாற என்ன செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம்.
கடினத்தை தேர்வு செய்யுங்கள்: இதைக் கேட்பதற்கு உங்களுக்கு முரண்பாடாகத் தெரியலாம். ஆனால் வாழ்வில் நமக்குக் கிடைக்கும் மிகப்பெரிய பாடங்கள் கடினமான விஷயங்களை நாம் தேர்வு செய்வது மூலமாகவே கிடைக்கிறது. எளிதான வாழ்க்கை எவ்விதமான முன்னேற்றத்தையும் நமக்கு ஏற்படுத்தாது. எனவே நீங்கள் உங்கள் வாழ்வில் விரும்பியதை அடைய, நீங்கள் பயந்து கொண்டிருக்கும் கடினமான விஷயங்களை தேர்வு செய்யுங்கள். இன்று நீங்கள் தேர்வு செய்யும் விஷயங்கள் நாளை உங்களுடைய எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும். எனவே கவனமாகத் தேர்வு செய்யுங்கள்.
தேவையின் மீது கவனம் செலுத்துங்கள்: சிறு சிறு மகிழ்ச்சிக்காக ஏங்கி தவறான திசைக்கு செல்லாமல், உண்மையிலேயே எது உங்கள் வாழ்க்கைக்கு தேவையோ அதன் மீது முழு கவனத்தை செலுத்தி செயல்படுங்கள். நீங்கள் தற்போது எந்த நிலையில் வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் சரியானவற்றின் மீது கவனம் செலுத்தி முயற்சி செய்தால், நிச்சயம் நீங்களும் சாதிக்கலாம். எதை செய்வதாக இருந்தாலும் அது உங்களுக்கு தேவைதானா என ஒருமுறை சிந்தியுங்கள்.
வாழ்க்கைக்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள்: உங்கள் வாழ்வில் நடக்கும் எல்லா விஷயங்களுக்குமான பொறுப்பை ஏற்றுக் கொண்டு, உங்களை சிறப்பாக மாற்றுவதை நோக்கி தொடர்ந்து பயணியுங்கள். தேவையில்லாமல் கஷ்டமான சூழ்நிலை நினைத்து வருத்தப்பட்டு வாழ்வை வீணடிக்காமல், எதுவாக இருந்தாலும் அதிலிருந்து நம்மால் மீண்டு வந்து சாதிக்க முடியும் என்பதை முழுமையாக நம்புங்கள். இது மட்டுமே உங்களை வாழ்வில் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்திச் செல்லும்.
யாருடைய அனுமதிக்காகவும் காத்திருக்க வேண்டாம்: உங்கள் வாழ்வில் எதையாவது புதிதாக முயற்சிக்க வேண்டும் அல்லது தொடங்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், பிறர் என்ன நினைப்பார்களோ என சிந்தித்துக்கொண்டு எதையும் முயற்சிக்காமல் இருக்காதீர்கள். எதுவாக இருந்தாலும் நம்மை நாம் மட்டுமே காத்துக் கொள்ள வேண்டும். பிறருடைய அனுமதிக்காக காத்திருந்தால் எதையுமே நம்ம செய்ய முடியாது. எல்லா தருணங்களிலும் உங்கள் வாழ்க்கைக்கான முடிவுகளை நீங்கள் எடுங்கள்.