‘ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன்’ என்று சொல்வதுண்டு. நம் வாழ்வில் நமக்கு எண்ணற்ற நண்பர்கள் இருந்தாலுமே, நமக்கு கஷ்டம் என்று வரும்போது யார் உதவி செய்ய வருகிறார்கள் என்பதைப் பொருத்தே உண்மை எது போலி எதுவென்பதை கண்டறிய முடியும். இதைப் பற்றி விரிவாக இந்தப்பதிவில் காண்போம்.
ஒரு ஊரில் அப்பா மற்றும் மகன் வாழ்ந்து வருகிறார்கள். அன்று அப்பாவுடைய ஆபிஸில் அவருக்கு பிரமோஷன் கிடைத்ததால், அன்று இரவு வீட்டில் விதவிதமான உணவுகள் சமைக்கிறார். இதைப்பார்த்த மகன் நம் இரண்டு பேருக்காக ஏன் இவ்வளவு சமைக்கிறீர்கள்? என்று கேட்கிறான்.
அதற்கு அப்பா, ‘இது நமக்கு மட்டும் கிடையாது நம்முடைய நண்பர்களாகிய பக்கத்து வீட்டுக்காரர் களுக்கும் சேர்த்துதான் சமைக்கிறேன்’ என்று கூறுகிறார். ‘நீ போய் நமக்கு வேண்டியவர்களை கூட்டிக்கொண்டு வா!’ என்று சொல்லி மகனை அனுப்பி வைக்கிறார்.
இப்போது தெருவிற்கு வந்த அந்த பையன், ‘எங்கள் வீட்டில் தீ பிடித்துக்கொண்டது. யாராவது வந்து உதவி செய்யுங்கள்’ என்று கத்துகிறான். இந்த பையனின் குரலை கேட்டு வெகுசிலரே உதவி செய்ய வீட்டை விட்டு வெளியே வருகிறார்கள். நிறைய பேர் அவன் கத்துவதைக் கேட்டும் கேட்காததுப் போலவே இருந்தார்கள்.
இப்போது யாரெல்லாம் உதவி செய்ய வெளியே வந்தார்களோ, அவர்களை மட்டும் அந்த பையன் விருந்துக்கு வீட்டிற்கு அழைத்து சென்றான். இரவெல்லாம் சாப்பிட்டு, பேசி சிரித்துவிட்டு சிறிது நேரத்தில் எல்லோரும் கிளம்பிவிட்டனர். இப்போது அப்பா பையனை பார்த்து, ‘நீ கூட்டி வந்தவர்களில் சிலபேரை மட்டுமே எனக்கு தெரியும். மற்றவர்களெல்லாம் எங்கே?’ என்று கேட்டதற்கு அந்த பையன் என்ன சொன்னான் தெரியுமா?
இப்போது நம் வீட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் நமக்கு ஏதோ பிரச்னை என்று நினைத்து உதவி செய்ய வந்தார்கள். சாப்பிட்டு போவதற்காக வரவில்லை. அப்படியென்றால், இவர்கள்தான் நம்முடைய உண்மையான நண்பர்கள் என்று அந்த பையன் கூறினான்.
இந்த கதையில் வந்ததுப்போலத்தான் நம் சந்தோஷத்தில் மட்டுமே பங்கெடுப்பவர்கள் உண்மையான நண்பர்கள் கிடையாது. நம்முடைய கஷ்டத்திலும் நம்முடன் இருந்து உதவி செய்ய வருபவர்களே உண்மையான நண்பர்கள். இதை புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.