வெற்றி வேண்டுமா? இந்த பத்து விஷயங்களை மறந்திடுங்க!

வெற்றி வேண்டுமா? இந்த பத்து விஷயங்களை மறந்திடுங்க!

ம் பிறப்புக்கும் இறப்புக்கும் ஒரு அர்த்தம் வேண்டும் எனில், வெற்றிகரமான மனிதராக இருக்க வேண்டும் என்பதையே அனைவரும் கருத்தில் கொண்டு வாழ்ந்து வருகிறோம். அவரவர் துறையில் தனித்தன்மையுடன் விளங்கி மாபெரும் வெற்றியாளராக மாலைகள் சூட வேண்டும் என்பதே ஒவ்வொருவரின் லட்சியம் எனலாம். ஆனால் இதற்காக நாம் முனைந்து சில விஷயங்களை கடைபிடிக்க வேண்டியுள்ளது. இடையறாத முயற்சி, ஈடுபாடுடன் கூடிய ஆர்வம், அயராத உழைப்பு இவை எல்லாம் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்களில் சில.

ஆனால் நாம் மறந்து விடக் கூடிய சில விஷயங்களும் உண்டு. அதைப்பற்றி  இங்கே பார்ப்போம்.

சமீபத்தில் நடந்த தசரா விழாவின் நாயகனான ராவணனுக்கு 10 தலைகள் என்று கேள்விபட்டுள்ளோம். ஆனால் உண்மையில் ஒரு மனிதனுக்கு பத்து தலைகள் இருக்கிறதா? நிச்சயம் இல்லை. மறந்துவிடக் கூடிய விஷயங்கள் என்று சொன்னேன் அல்லவா. அந்த விஷயங்கள் ஒரு மனிதனின் வெற்றிக்கு இடையூறாக அமைந்துவிடக் கூடிய அந்த விஷயங்களைத்தான் பத்து தலைகளாக உருவகம் செய்து நமது முன்னோர் அவற்றை தீமைகளாக ஒதுக்கி வைத்துள்ளனர். 10 தலைகள் கொண்ட ராவணன் அழிந்தது போல் இந்த பத்து விஷயங்கள் ஒரு மனிதனை அழித்துவிடும் என்பதே பத்து தலைகள் சொல்லும் தாத்பர்யம்.

அவைகள் என்ன? பெருமை, பேராசை, கோபம், காமம், மாயை, பொறாமை, எதிர்மறை, சுயநலம், வெறுப்பு, ஈகோ இவைகளே அந்த 10 விஷயங்கள்.


பெருமை - ஒரு மனிதனுக்கு பெருமை இருக்க வேண்டியதுதான். ஆனால் அந்த பெருமையே வாழ்க்கையாக ஆகிவிட்டால் அவனது வெற்றி அங்கே தடைபடும்.


ஆசை  - மிதமான ஆசையே வெற்றியை நோக்கி முன்னேற வைக்கும். ஆனால் அதுவே பேராசையாக மாறிவிட்டால் தோல்விதான் மிஞ்சும்.


கோபம் - தேவைப்படும் நேரத்தில் அளவான கோபம் அவசியமே. ஆனால் அதீத கோபம் என்பது மனிதனின் உடல் நலத்துக்கும் ஆபத்து வாழ்க்கைக்கும் ஆபத்து.


காமம் -  இயற்கை வகுத்த நியதிகளுக்கு உட்பட்டு இருக்கும் வரைதான் காமம் நல்லது. மீறினால் வாழ்க்கைக்கு கெடுதல்.


மாயை - இல்லாத ஒன்றுக்காக ஏங்கி அதன் பின்னால் ஓடும் மாயை வெற்றிக்கு தடையாகவே அமைந்து விடும். இருப்பதை முன்னேற்றுவதே சிறந்தது.


பொறாமை -  பொறாமை குணம் ஒரு மனிதனை எந்த அளவுக்கு வீழ்த்தும் என்பது நாம் காணும் மனிதர் களிடமிருந்தே கற்றுக் கொள்ளலாம். ஒருவருக்கு பொறாமை வந்துவிட்டால் அவர் செய்யும் செயல்கள் எல்லாம் பின்னடைவையை தரும் அடையும்.


எதிர்மறை - ஒரு மனிதனின் வெற்றிக்கு நேர்மறையான எண்ணங்களே மிக முக்கியம். இது முடியுமா முடியாது? இது செய்யலாமா வேண்டாமா? இது போன்ற சந்தேகத்துடனான எதிர்மறை எண்ணங்களை விலக்கி  என்னால்  இது முடியும் இந்த நேரத்தில் முடித்து விடுவேன் அல்லது இந்த காலத்திற்குள் நான் ஜெயித்து விடுவேன் என்ற நேர்மறையான சிந்தனைகள் வெற்றியை விரைவில் தரும்.


சுயநலம் - நமது குடும்பத்திற்காகவும் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் சந்தோஷத்துக்காகவும்  நமது வெற்றி பயன்பட வேண்டும். அதுதான் வெற்றிக்கு அழகு. சுயநலத்துடன் நாம் மட்டும் மூன்றுவேளை அறுசுவை உணவு உண்டு பட்டு மெத்தையில் உறங்கி எழுவதல்ல வாழ்க்கை. உற்சாகமான அன்புடன் வாழ்வதே வாழ்க்கை. பொதுநலம்  என்பது வெற்றிக்கு சிறந்த வழி.


வெறுப்பு - சிறு வயதில் இருந்து நாம் ஏதோ ஒன்றின் மீது வெறுப்பைக் கொண்டிருப்போம். இது இயற்கை. ஆனால் அந்த வெறுப்பானது தொடர்ந்து கொண்டே இருந்தால் நம்மால் வெற்றியின் மீது கவனம் செலுத்தவே முடியாது. ஆகவே வெறுப்பை விட்டு விலகுவதுதான் வெற்றிக்கு விருப்பமானது.


ஈகோ -  நான் எனும் ஈகோ பெரும்பாலானவரின் வாழ்க்கையை வீணடித்து விடுகிறது. உறவுகளிலும் அலுவலகங்களிலும் மற்றும் பிற இடங்களிலும் இந்த ஈகோ நுழைந்து விட்டால் நமது வெற்றி சாத்தியமே இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஈகோவை விட்டுத் தள்ளி அனுசரியுங்கள் வெற்றி உங்களைத்தேடி வரும்.
இவ்வளவுதாங்க...இந்த 10 விஷயங்களை மறந்துடுங்க... கண்டிப்பா வெற்றி நமக்குத்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com