வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிப் பார்த்தோம் என்றால் வெற்றி பெற்றவர்களின் வரலாறு ஏராளமாக இருக்கும். இவர்கள் அனைவரிடமும் காணப்பட்ட பொதுவான அம்சம் காலத்தை கண்ணாக கருதியது. காலந்தவறாமையைக் கடைசி மூச்சு உள்ளவரை கடைப்பிடித்தவர்கள் நிறைய வெற்றிகளைச் சாதித்திருக்கின்றார்கள்.
மாவீரன் நெப்போலியன் தனது படைவீரர்களில் ஒருவனிடம் குறிப்பிட்ட பணி ஒன்றைக் கொடுத்து விரைவில் முடிக்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தார். காலையில் கொடுத்த பணியை அந்த வீரன் எவ்வளவு தூரம் முடித்திருக்கிறான் என்பதை ஆய்வு செய்வதற்காக மாலை மங்கிய நேரம் பணியிடத்துக்கு வந்தார். பாதியளவுகூட அவர் அளித்த வேலை முடிக்கப்படவில்லை.
பணியின் நிலைமையைப் பார்த்ததும் அந்த வீரனைப் பார்த்து ஏன் இன்னும் பணி முடியவில்லை? என்று கேட்டார்.
அதற்கு அவன் "பகல் முழுவதும் முயற்சித்தேன் முடிக்க முடிய வில்லை. நாளை எப்படியும் முடித்துவிடுவேன்' என்று சொல்லி முடிப்பதற்குள், நெப்போலியனின் அடுத்த கேள்வி அம்பாக அந்த வீரனை நோக்கிப் பாய்ந்தது -
'இரவு எங்கே போனது? எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்கச் செல்லக்கூடாது' என்று உத்தரவிட்டு விட்டுச் சென்றார். நேரத்தை அவ்வளவு முக்கியமாகக் கருதியதால்தான் நெப்போலியன் மாவீரனாகவும் சிறந்த அரசனாகவும் திகழ்ந்தார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
இதைத்தான் நாமும் பின்பற்ற வேண்டும். வாழ்க்கைக்குத் தேவை யான மிக முக்கியமான அறிவுரை இதுதான். இந்த உலகத்தில் மீண்டும் கிடைக்காதவை மூன்றே மூன்றுதான்.
ஒன்று மனித உயிர், இரண்டாவது வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தை, மூன்றாவது கடந்து சென்ற காலம். இந்த மூன்றிலும் மிக மிக முக்கியமானது காலம்தான். ஏனெனில் காலம்தான் மனிதனின் வாழ்க்கையை தீர்மானிக்கிறது. மாற்றியமைக்கிறது. அவனுக்குப் பொன்னையும் புகழையும் சேர்க்கிறது. வாழ்வின் உயர்வு தாழ்வைத் தீர்மானிக்கிற விஷயமாகவும் காலம்தான் இருக்கிறது.
நேற்று என்பதை இழந்து விட்டோம். நாளை எப்படியிருக்கும் என்பதும் தெரியாது. இன்று மட்டும்தான் நமது கைகளில், நமது கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் நாம் கடந்த காலத்தைப் பற்றி வருத்தப்படுவதிலோ, பெருமைப்பட்டுக் கொள்வதிலோ அர்த்தமே இல்லை. அதேபோன்று வரப்போகிற காலத்தைப் பற்றி சந்தேகப்பட்டுக் காலத்தை வீணடிப்பதும் அர்த்தமற்றதுதான்.
காலத்தை எப்படிப் பிரித்துக் கையாளுவது என்பதை முதலில் கற் றுக்கொள்ள வேண்டியது அவசியம். பள்ளிப் பருவத்திலேயே இப் படிப் பிரிப்பதைப் பார்த்திருக் கிறோம். காலாண்டுத் தேர்வுக்கான பாடங்கள், அரையாண்டுத் தேர்வுக்கான பாடங்கள் என்று முடித்த பிறகு ஆண்டுத் தேர்வுக்கான பாடங்களைப் படிப்பதுபோல ஒவ்வொரு நாளையும் தாம் பிரித்துக் கொண்டு நமது பணிகளை அதற்கேற்றாற்போல அமைத்துக் கொள்ள வேண்டும்.
நமது வாழ்வின் லட்சியத்தை அடைவதற்கு முழுமையான ஒரு திட்டத்தை வடிவமைத்துக்கொண்டு அதை அனிச்சை செயலாக மாற்றிக்கொள்ள முயற்சித்துப் பார்க்க வேண்டும். இதை மட்டும் சாதித்துவிட்டால் நமது லட்சியங்களை அடைவது மிகவும் எளிதான காரியம் ஆகிவிடும்.