நம் வெற்றி நம் கையில்தான் உள்ளது என்பதை மனதார நம்பி நம் செயல்களுக்கு பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும். பொறுப்பெடுக்கும் இயல்பு வெற்றிக்கான பல நற்குணங்களை நம்முள் வளர்க்கும் சக்தி படைத்தது. நல்ல பழக்கங்களை வாழ்க்கை ஆக்குவது, தினமும் உடற்பயிற்சி செய்வது, எழுச்சி தரும் புத்தங்களைப் படிப்பது, தியானிப்பது, புதிய திறன்களைக் கற்பது, அரிய இலக்கினைத் தீர்மானிப்பது, அந்த இலக்கினை அடைய உழைப்பது. சுகபோகங்களை மறப்பது, மற்றவர்களுக்கு உதவுவது இவை அனைத்தும் நம் கையில் உள்ளது.
நம்மால் மட்டுமே செய்யக்கூடியது. இவற்றைத் திறம்பட தினமும் சோம்பலுக்கு இடம் தராமல் செய்வது வெற்றியின் பாதையில் நம்மை அழைத்தும் செல்லும். இதன் காரணமாக நம் வெற்றி நம் கையில் உள்ளது என்பது தெளிவாகிறது. எந்த மாற்றம் நம் வாழ்வில் நிகழவேண்டும் என்று தீர்மானித்தாலும், அம்மாற்றம் நிகழ உழைக்க வேண்டும். அந்த மாற்றத்தை அடைய முடியும் என்ற நம்பிக்கையில், அம்மாற்றத்திற்கான முயற்சிகளைச் செய்ய பொறுப்பெடுக்க வேண்டும்.
வாழ்க்கை என்ற வாகனத்தை எப்படி ஓட்ட வேண்டும் என்று அறிந்து, சரியான பாதையில், சரியான வேகத்தில், சரியான இலக்கு நோக்கி நாம்தான் ஒட்டியாக வேண்டும். நம் இலக்கை அடைய மற்றவர்களை நம்பி இருப்பது வெற்றி பெறும் வாய்ப்பினை வெகுவாகக் குறைத்துவிடும். பயணத்தில் தடைகளையும் தற்காலிக இடர்களையும் எதிர்கொள்வது தவிர்க்க முடியாதது. எதிர்படும் தடைகளைத் தாண்டி இறுதி இலக்கினை அடைவது நம் கையிலேயே உள்ளது. நமக்கு நாமே பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்து தம் செயல்களுக்குப் பொறுப்பெடுத்துக் கொள்வோம்.
நாம் சந்திக்கின்ற சூழல்களையும். பருவகாலங்களையும் சந்திக்கின்ற மனிதர்களையும் நம்மால் மாற்ற முடியாது. உலகில் நம் கையில் உள்ளது நம்முடைய மனம், குணம், எண்ணம் ஆகியன. வெற்றிக்கு ஏற்றாற்போல் நம் மனதையும், குணத்தையும் எண்ணத்தையும், செயலையும் நம்மால் மாற்ற முடியும். மாற்றவேண்டும் என்ற உறுதியுடன் முயன்றால் மாற்றம் நிகழத்தான் செய்யும்.
நம் செயல்களுக்கு மற்றவர்களைப் பொறுப்பாக்குவது நம்மை எங்கும் கொண்டு செல்லாது. மன அழுத்தத்தையும், மன வருத்தத்தையுமே தரும். தோல்விக்குக் காணும் சாக்குப் போக்குகளைக் களைந்து, நம் வெற்றி தோல்விக்கு நாமே காரணம் என்று துணிவுடன் பொறுப்பெடுத்துக் கொள்வோம் எதை மாற்ற வேண்டுமோ அதை மாற்றி, எதைக் கற்கவேண்டுமோ அதைக் கற்று, எதைச் செய்ய வேண்டுமோ அதைச் செய்யும்போது தோல்விவெற்றிக்கு வழிவிடும்.
மற்றவர்கள் மீது பழி சுமத்துவது வெறும் நேரத்தை விரையம் செய்யும் செயல். மற்றவர்கள் மீது எவ்வளவு குறை கூறினாலும் அதன் மூலம் நமக்கு முன்னேற்றம் வருவதில்லை அது நம்மை மாற்றப் போவதும் இல்லை. எனவே, வெற்றிகளை வாழ்வில் குவிக்க வேண்டுமெனில், உங்கள் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பெடுத்துக் கொள்ளுங்கள்.