பிரச்னைகளை அடக்கி ஆளும் சக்தி நம்மிடம் உள்ளது!

motivation article
motivation articleImage credit - pixabay
Published on

வாழ்க்கை என்பது ஓர் அனுபவம். ஆளுக்கு ஆள் மாறுபடும். சுகமோ துக்கமோ அனுபவம் நம்மை பலப்படுத்துகிறது. காயப்படுத்துகிறது, சிரிக்க வைக்கிறது, அழவைக்கிறது. முடிவில் இதில் எது வாழ்க்கை என்று சிந்திக்க வைக்கிறது.

சிந்திக்கும் மனிதன் தெளிவடைந்தானா என்றால் அதுதான் இல்லை. மேலும், மேலும் குழம்பி முடிவில் தற்கொலையில் வாழ்வை பறிகொடுக்கிறான். இறைவனால் இவ்வுலகில் படைக்கப்பட்ட மற்ற ஜீவராசிகளுக்கு வாழ்க்கையை பற்றிய ஆராய்ச்சி எதுவுமில்லை. விலங்குகள் தற்கொலை செய்து கொள்வதுமில்லை. காரணம் அவைகளுக்கு முடிவை பற்றிய பயமில்லை. அந்த வகையில் அறியாமை ஒரு வரம்.

தான் அறிவாளி என்று கர்வப்படும் மனிதனால் வாழ்க்கையில் ஜெயிக்க முடிவதில்லை. காரணம் அறிவு மட்டும் வாழ்க்கைக்கு போதாது. அதற்கு மேலும் ஒன்று தேவைப்படுகிறது. அது என்ன? தன்னம்பிக்கை. மனோபலம் உள்ளவனுக்கு மட்டுமே அது சாத்தியமாகும்.

வாழ்க்கையை பற்றி தீர்மானமான விளக்கம் எதுவும் இல்லாவிட்டாலும், வாழ்க்கையின் பிரச்னைகளுக்கு மனோபலம் ஒன்று மட்டுமே தீர்வாக அமைகிறது. ஒவ்வொருவரின் வாழ்க்கை அனுபவங்களே அவர்களின் வழிகாட்டி. அனுபவங்களிலிருந்து அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அப்படி கற்றுக் கொண்டவன் ஜெயிக்கிறான். கற்றுக் கொள்ளாதவன் தவிக்கிறான்.

துன்பம் துரத்தும்போது ஆன்மிகமும், அறிவியலும் அவனுக்கு துணை போவதில்லை. தோல்விக்கு பின்பு கிடைக்கும் வெற்றிக்காக காத்திருக்க அவனுக்கு பொறுமையில்லை. தோல்வியே வாழ்க்கை என்று முடிவுசெய்து, தனக்கு சோகமான முடிவைதேடிக் கொள்கிறான். தோல்விகள் நமக்கு நல்ல அனுபவங்களை தந்து, நம்மை பலசாலியாக்குகிறது.

நம்பிக்கை எனும் வானவில் நம்மிடம் எப்போதும் இருக்கவேண்டும். வானவில் தோன்றும்போது வானம் அழகாகிறது. நம்பிக்கை தோன்றும்போது வாழ்க்கை அழகாகிறது. ஒவ்வொரு மனிதனின் கையிலும் அழகான வாழ்க்கை இருக்கிறது. அதை வளப்படுத்தும் நம்பிக்கை எனும் வானவில்தான் தோன்ற மறுக்கிறது. அப்போது வாழ்க்கை வெறுமையாகிறது. அந்த வெறுமையை நிரப்ப யாராலும் முடியாது.

இரவும், பகலும் வருவதுமில்லை. போவதுமில்லை. அவை பூமி சுழலுவதால் ஏற்படும் மாற்றங்கள். சுகமும், துக்கமும் வருவதுமில்லை. போவதுமில்லை. நாம் வாழ்வதால் வரும் மாற்றங்கள். பூமி இரவுக்காக வருந்துவதுமில்லை, பகலுக்காக மகிழ்வதுமில்லை. அது ஓர் கர்மயோகியைப் போல தன் பணியை செய்துக் கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நன்றை செய்க... அதை இன்றே செய்க!
motivation article

இன்றைய அவசர மனிதனிடம் விடியலுக்காக காத்திருக்கும் பொறுமையில்லை. கல்வியறிவு அதிகமில்லாத காலத்தில் கூட இருந்திராத மனச்சுமை, டென்ஷன், தற்கொலைகள், இப்போதுதான் அதிகமாகி வருகிறது. எந்த அறிவியல் வளர்ச்சியும் இவர்களை வாழவைப்பதில்லை. இந்த நவீனயுகத்தில் தற்கொலை தடுப்பு மையங்கள் ஆங்காங்கே உருவாகி வருவது வரமா? சாபமா?

தோல்வியை கண்டு மிரண்டு போய் வாழ்க்கையை தொலைத்து விடுகிறோம். ஏன் இந்த அவசரம். தோல்விக்கு பின் வெற்றி என்ற வாக்கு பொய்யா, மெய்யா என்று பொறுத்திருந்து பார்க்கலாமே.

நம்மைவிட உடலில் பலசாலி யானை. நம்மைவிட வேகத்தில் சிறந்தது குதிரை.  நம்மை விட உழைப்பில் சிறந்தது கழுதை. இப்படி மிருகங்கள் நம்மைவிட பல மடங்கு பலசாலிகளாக இருந்தாலும், நாம்தான் இவைகளை அடக்கி ஆள்கிறோம். காரணம் மனிதன் மட்டுமே மனோபலம் கொண்டவன். நமக்கு ஏற்படுகிற பிரச்னைகளும் அப்படித்தான். அதனை அடக்கியாளும் சக்தி நம்மிடம் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com