
எதையும் திறந்த மனதோடு பார்க்கவேண்டும். பார்த்ததை வைத்து நன்மை தீமைகளை அனுபவித்து உணரவேண்டும். நம் கண்ணில் பட்டதை நாம் பார்த்துதான் ஆகவேண்டும். அதை விட்டு விட்டு "நான் என்ன பாவம் பண்ணேனோ. படக்கூடாதது, தெரியக்கூடாதது எல்லாம் என் கண்ணில்படுகிறது. இதற்கு கண் என்ன பாவம் செய்ததோ" என்று குறை கூறக்கூடாது.
அதே நிலைதான் காதுகளுக்கும். கேட்பதைத் தவிர காதால் வேறெந்த செயலையும் செய்ய முடியாது. காதுகளுக்கு நல்லது கெட்டது தெரியாது. எந்த ஒலியானாலும் சத்தத்தை காது தவிர்க்க முடியாது. நல்லது எது கெட்டது எது, வேண்டியது எது, வேண்டாது எது என்பதையெல்லாம் தீர்மானித்துப் பிரித்தெடுத்து நம் மனம்தான். மனத்தால்தான் இக்காரியத்தைச் செய்யமுடியும்.
எனவே நாம் காதில் விழுகின்ற ஒவ்வொரு ஒலியையும் கேட்டுத்தான் ஆகவேண்டும். கேட்ட பின் கேட்டதில் இருந்து நமக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு வேண்டாததை விட்டுவிட வேண்டும். அடுத்தடுத்து கேட்க வேண்டிய விஷயங்களை காதுகளால் கேட்டுக்கொண்டே போகவேண்டும் அதை விடுத்து காதுகளை குறைகூறக்கூடாது.
அடுத்து வாயினுடைய செயல் பேசுவது, சாப்பிடுவது, அருந்துவது போன்றவைதான். இன்று மனித இனத்தை ஒற்றுமையாக வைத்திருப்பதும், பிரித்துச் சீர் குலைய வைப்பதும், வாழ்த்துவது, சபிப்பது, புகழ்வது, இகழ்ந்து இந்தப் பேச்சு மூலம்தானே! அதனால் சிலர் பேசவேண்டிய நேரத்தில் பேசவேண்டிய பேச்சை, சொல்ல வேண்டிய உண்மையை, கொடுக்க வேண்டிய கருத்தை, அறிவிக்க வேண்டிய அறிவை, பகிர்ந்துகொள்ள வேண்டிய உண்மையை பகிர்ந்துகொள்ள முடியாமல் தங்களைத் தாங்களே தடுத்தி நிறுத்திக் கொள்கின்றார்கள்.
எங்கே வாயைத் திறந்துவிட்டால் பிரச்னை வந்துவிடுமோ, வம்பாகிவிடுமோ, கெட்ட பெயர் வந்து விடுமோ என்று சிலர் உணர்ந்தும் உணராவர்போலும், தெரிந்தும் தெரியாதவர் போலும் ஊமைகளாய் இருந்து விடுகிறார்கள். இவர்கள் வாய் கொண்ட ஊமைகள். வாய்க்கு நல்லது கெட்டது தெரியாது. ஆனால் எதையும் பேசி முடித்த பின்தான் நல்லது எது கெட்டது எது என்று தெரியும்.
சில சமயங்களில் பேசுவதற்கு முன் சரியாகப்பட்டது, பேசிய பின் தீமையாகிப் போகலாம். அதுபோல் தீமையாகும் என்பது பேசிய பிறகு நன்மையாக அமையலாம். எனவே பேசவேண்டிய பேச்சை இடம் பொருள் ஏவல் தெரிந்து பேசித்தான் ஆகவேண்டும்.
அதே போன்றுதான் செயல்களும். நாம் ஏதாவது செய்தால் தீமையாகிவிடுமோ என்ற பயத்தினால் செயலிலேயே இறங்காமல் விடுகிறோம். உடலால் செய்ய வேண்டிய பல காரியங்களை செய்ய முடியாமல் உடல் இருந்தும் முழுமையாக செயலாற்ற முடியால் செயலற்று இருப்பவர்கள் உடல் இருந்தும் ஊனர்கள்.
கண்களை முழுமையாக திறந்து பார்த்த பின்தான், காதுகளைய முழுமையாகத் திறந்து கேட்ட பின் தான், வாயை முழுமையாக திறந்து பேசிய பின்தான், உடலால் முழுமையாக காரியங்கள் செய்த பிறகுதான் நல்லது கெட்டது எது, நன்மை தீமை எது என்பதெல்லாம் தெரியவரும்.
நன்றாகத் திறந்து மனதுடன் முழுமையாகக் கண்டு, பேசி, செயலாற்றி அதன் வழி நன்மையானவற்றை ஏற்றுக் கொண்டு, தீமையானவற்றை விட்டு விட்டு தொடர்ந்து காரியங்களை பற்றிக் கொண்டு போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான் ஒவ்வொரு மனிதனின் தலையாய பொறுப்பு.