நாம் தினமும் மற்றவர்களிடம் பேசும் வார்த்தைகளில் நல்ல சொற்களும் உள்ளது, கெட்ட சொற்களும் உள்ளது. ஆனால், நாம் பேசும் வார்த்தைகளை மற்றவர்களிடம் எப்படி உபயோகிக்கிறோம் என்பதைப் பொருத்தே அது நல்லதாக மாறுகிறதா அல்லது கெட்டதாக மாறுகிறதா? என்பது உள்ளது. இதை தெளிவாக புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையைக் காண்போம்.
ஒருநாள் அரசன் ஒருவனுக்கு தன்னுடைய பற்கள் எல்லாம் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதுபோல கனவு வந்ததாம். காலையில் எழுந்ததும் பயந்துபோன அரசன் ஒரு ஜோதிடரை உடனே அழைத்து தன் கனவிற்கான பலனைக் கேட்டாராம். அந்த ஜோதிடரும் எல்லா ஓலைச் சுவடிகளையும் புரட்டி பார்த்துவிட்டு சொன்னார், 'அரசே! உங்கள் சொந்த பந்தங்கள், மனைவி, மக்கள் எல்லோரும் உங்களுக்கு முன்பே இறந்துபோய் விடுவார்கள்’ என்று கூறினார். இதைக் கேட்டு கோபம் அடைந்த அரசர் அந்த ஜோதிடரை பிடித்து சிறையில் அடைத்து விட்டார்.
ஆனாலும் அரருக்கு மனசே ஆறவில்லை. சரியென்று இன்னொரு ஜோதிடரைக் கூப்பிட்டு அந்த கனவிற்கான பலனைக் கேட்டார். அவரும் பல ஓலைச் சுவடிகளை புரட்டிவிட்டு, ‘அரசே! உங்கள் சொந்தபந்தம், மனைவி, மக்கள் எல்லோரையும் விட நீங்கள் அதிக நாட்கள் வாழ்வீர்கள்’ என்று கூறினார். அரசர் மிகவும் மகிழ்ந்து அவருக்கு வேண்டிய எல்லா பரிசுகளையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.
இந்த கதையில் வந்த இரண்டு ஜோதிடர்கள் சொன்னது ஒரே விஷயமாக இருந்தாலும், பயன்படுத்திய வார்த்தைகள் வேறு. ஒரு கெட்ட விஷயமாக இருந்தாலும் அதை நாம் எப்படி எடுத்துக் கொள்கிறோம். அடுத்தவர்களை அது பாதிக்காத வண்ணம் எப்படி கையாளுகிறோம் என்பது மிகவும் முக்கியம்.
வார்த்தைகளில் கவனம் இருந்தால், நிச்சயமாக வாழ்க்கையில் ஜெயிக்கலாம். எனவே, நாம் சொல்லப்போகும் விஷயம் நல்லதோ, கெட்டதோ அதை எந்தெந்த வார்த்தைகளை பயன்படுத்தி சொல்கிறோம் என்பது மிகவும் முக்கியம். வார்த்தைகளிலும் நல்ல வார்த்தை, கெட்ட வார்த்தை என்பது உண்டு. வார்த்தைகளுக்கும் சக்தி உண்டு என்பதை மறக்க வேண்டாம். இதை புரிந்துக் கொண்டு நடந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.