நாம் மகிழ்ச்சியுடன் வெற்றிபெற வேண்டுமானால் பிறரைப்போல நடிக்கவும், காப்பி அடிக்கவும் கூடாது. முக்கியமாக வெற்றியின் உறுதிக்கு இவை இரண்டும் கெடுதல் விளைவிப்பவையாக இருக்கின்றன.
நம்மில் பலரின் துன்பங்களுக்குக் காரணம், பிறர் போன்று நடிக்க முயன்று தோல்வியுறுவதுதன். நாம் நாமாக இருக்காமல் வேறுபட்டவராக இருக்க விரும்புவது முறையல்ல; முன்னேற்றத்திற்குத் தடை போடும்.
என்னதான் ஏற்படினும் நாமாக இருக்க வேண்டும் என்ற கொள்கையை பின்பற்றினால் இந்த நோய் இருந்த இடம் தெரியாமல் பறந்துவிடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
ஆனால் நாம் இதனை ஒரு நோய் என்று கருதாமல் பண்பாடு, கலாசாரம் என்று எண்ணி விடுகிறோம். பெருமைக் கண்ணுடன் பார்க்கக் கூடியவற்றை அப்படியே நம்முடைய வாழ்க்கையிலும் பாவனை செய்து பிரதிபலிக்கச் செய்து விடுகிறோம்.
இது எந்த அளவு நம்முடைய அடிமைப் புத்தியைக் காட்டுகிறது; தகுதியைச் சிறியதாக்கி விடுகின்றது என்பதை உணர்வதில்லை. மற்றவர்களைக் காப்பி அடிக்கும் தன்மை நம்முடைய அறிவை அடகு வைத்தது போலாகிவிடும்.
காப்பி அடிப்பதில் உள்ள அதிசயம் என்னவென்றால் பிறருடைய தீமைகளின் தன்மைகள் அப்படியே நம்மை ஒட்டிப்பிடித்துக் கொள்கின்றன. ஆனால் நல்ல தன்மைகளோ அதே போன்று நம்முடன் இணைந்துவதில்லை.
ஒவ்வொருவருமே அவரவருக்கு என்று தனிப்பட்ட தன்மைகளுடன் உருவாக்கப்பட்டிருக்கிறோம். மற்றவர்களால் மாற்ற முடியாத இயல்பு உடையவராகவும், மற்றவர்களால் ஆற்ற இயலாத செயலைச் செய்வதற்குமே படைக்கப்பட்டு இருக்கிறோம்.
உலக உற்பத்தியில் இருந்து இன்றுவரை ஒருவரைப் போன்றே ஒருவர் படைக்கப்படவில்லை என்பதை என்றும் நினைவில் வைக்கவேண்டும்.
வாழ்வில் வெற்றி பெற்ற பெரியவர்கள் எல்லாரும் தங்களின் வாழ்க்கைக்கு முன் மாதிரியாக குறிக்கோளாக ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொண்ட போதிலும் அவரைக் காப்பி அடிக்கவில்லை என்பதை அறிய முடியும். அப்படி அவர்கள் காப்பி அடித்திருந்தால் அறிஞர்களாக இருக்க முடியாது .
சேக்ஸ்பியரை மில்டன் பெரிதும் புகழ்ந்தார். அதற்காக அவரை மில்டன் காப்பி அடிக்கவில்லை அவரைப் போன்று காப்பி அடித்திருப்பின் மில்டன் ஒரு போலி ஷேக்ஸ்பியர் போன்று ஆகியிருப்பாரே அன்றி ஷேக்ஸ்பியர் போன்று இணை ஆகிஇருக்க முடியாது.
எல்லாரும் அரசர்களாகவும் தலைவர்களாகவும் அறிஞர்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்க இயலாது. நமக்கென்று ஒரு வேலை நிச்சயம் உள்ளது. அதனை கண்டுபிடித்து விடாமல் செய்து வெற்றி பெறவேண்டும்.