நோயில்லாத உடல், பேராசை இல்லாத மனம் எப்பொழுதுமே லேசாக இருக்கும். நேர்மறை எண்ணம் கொண்ட நண்பர்களுடன் பழகுவது, எதிர்மறை எண்ணங்களை தவிர்ப்பது, முடிந்தவரை டேக் இட் ஈசி பாலிசியை கடைபிடிப்பது போன்றவை மனதை லேசாக வைத்துக் கொள்ள உதவும்.
நோய் நொடி இல்லாத உடல் எப்பொழுதும் மன அழுத்தம் இல்லாமல் இருக்க உதவும். அதற்கு நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தினமும் சிறிதளவு உடற்பயிற்சி, தியானம், காலாற சிறிது நேரம் நடப்பது, சத்துள்ள உணவை எடுத்துக் கொள்வது போன்றவற்றை செய்ய மனம் லேசாகும்.
அன்றாட வேலைகள் அலுப்பு சலிப்பு இல்லாமல் நடக்க ஏதேனும் ஒரு நல்ல பொழுதுபோக்கை வைத்துக் கொள்வது நம் மனதை லேசாக்கும். நல்ல புத்தகங்களை படிப்பது, நகைச்சுவை நிறைந்த காட்சிகளை பார்ப்பது, இனிமையான பாடல்களை கேட்பது, உடல் வியர்க்கும் அளவுக்கு ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுவது, வார இறுதியில் அருகில் உள்ள ஏதேனும் இடத்திற்கு சுற்றுலா செல்வது போன்றவை நம் உடலையும் மனதையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.
ஏதேனும் பிரச்னை என்றால் அதைப் பற்றியே நினைத்து புழுங்கிக் கொண்டிராமல் இதுவும் கடந்து போகும், இந்த நிலையும் மாறும் என்றெண்ணி மனதை போட்டு அதிகம் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. கள்ளம் கபடமற்ற குழந்தைகளுடன் விளையாடுவது, கதை பேசுவது, மனம் விட்டு சிரிப்பது போன்றவை மனதை மிகவும் லேசாக்கும். வீட்டில் செல்லப் பிராணிகள் இருந்தால் அவற்றுடன் விளையாடுவது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
எதற்காகவும் கோபப்படாமல் இருப்பது நல்லது. கோபப்படும் பொழுது ரத்த ஓட்டம் அதிகரித்து மன அழுத்தத்தை உண்டு பண்ணுவதுடன் நம் மன நிம்மதியையும் கெடுக்கும். முடிந்தளவு கோபத்தை குறைப்பது அல்லது தவிர்ப்பது நல்லது. எந்தப் பிரச்னை வந்தாலும் கோபப்படாமல் நேரம் ஒதுக்கி எதனால் இந்தப் பிரச்னை வந்தது என்று தனிமையில் சிந்திக்க நம்மால் அதற்கான விடையைக் காண முடியும். அதனை தீர்க்க முடியுமா, முடியாதா என்று யோசித்து தீர்க்க முடியாததாக இருந்தால் அதைப் பற்றி யோசிப்பதோ, கவலைப்படுவதோ, கோபப்படுவதோ பயனில்லை என்றெண்ணி, இதுவும் கடந்து போகும் என்ற மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளலாம். தீர்க்கக் கூடியதாக இருந்தால் அதற்கான முயற்சியை எடுக்கலாம்.
பேராசை என்னும் பெருங்கடலில் அகப்பட்டு சிக்கிக் கொள்ளாமல் நிறைவேற்ற முடியாத எண்ணங்கள், ஆசைகளை மனதிலிருந்து அப்புறப்படுத்தி விட வேண்டும். இல்லாவிடில் அவை வெறுப்பு, விரக்தி, ஏமாற்றம் போன்ற உணர்வுகளை உண்டு பண்ணி நம் மனதை கெடுத்து விடும். "வாய்விட்டு சிரிக்க நோய் விட்டுப் போகும்" என்பார்கள். மனதை லேசாக வைத்துக் கொள்ள பல சிறந்த வழிகள் உள்ளன. நல்ல தூக்கம், சாத்வீகமான எண்ணங்கள், சத்தான ஆகாரம், யாரையும் அன்புடன் அணுகுதல், மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்வது, அத்துடன் முக்கியமாக எதையுமே எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப்போக்கு ஆகியவை மனதை எப்பொழுதும் லேசாக வைத்துக் கொள்ள உதவும்.
பொதுவாகவே மனம் பல சிந்தனைகளில் அலை பாய்ந்து, குழப்பமடைந்து, நிம்மதியற்று இருப்பதற்கு காரணம் மற்றவர்களை திருப்திபடுத்த நினைப்பதுதான். அது ஒருபோதும் நடக்காது. மனிதனின் மனம் மற்றவர் களுக்காகவே வாழ நினைக்கிறது. இதுவும் தவறு. நாம் நமக்காக வாழ முயற்சிக்க வேண்டும். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனை தேவையில்லாதது. நம் மனதிற்கு உண்மையாக இருந்தாலே போதும். மனம் அமைதி அடையும், லேசாகும், மகிழ்ச்சி கொள்ளும்.
என்ன நான் சொல்வது சரிதானே நண்பர்களே!