எதிரிகள் நம்மைப் பற்றி கூறும் குறைகள் நம் நன்மைக்கே!

Motivation Image
Motivation Image

நாம் எதிரிகளே இல்லாத வாழ்க்கை வாழ விரும்புகிறோம். அது தவறு. எதிரிகள் நமக்குப் பல விஷயங்களைக் கற்றுத் தருவார்கள். அவைகளை நாம் கற்றுக் கொண்டால்தான் பலம் பெற முடியும்.

கபீர்தாஸ் என்ற துறவி, ‘எதிரிகள் தான் எனக்கு ஆசான்கள். என்னை நானே திருத்திக் கொண்டு, நான் முழுமையாக மனித வாழ்க்கை வாழ அவர்கள் என்னைத் தூண்டு கிறார்கள். அதனால் எதிரிகள் இல்லாத உலகத்தில் நான் வாழ விரும்பவில்லை’ என்றார். இந்தக் கூற்று, மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தும். நமக்கு எதிரிகள் இல்லாவிட்டால் நமது குறைகளே நமக்குத் தெரியாது.

எந்த நேரம் நம்மைப் பற்றி என்ன விமர்சனம் வருமோ என்று நாம் விழிப்புடன் இருக்க நமது எதிரிகள் தான் உதவுகிறார்கள். அதனால் நாம் செய்யும் ஒவ்வொரு செயலிலும் நமக்கு விழிப்புணர்வு ஏற்படுகிறது. நம்மையும் சிலர் உற்று நோக்குகிறார்கள் என்ற எண்ணம் நம்மை ஒவ்வொன்றிலும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.

அந்த வகையில் நம் திறமைகளைப் பெருக்கிக் கொள்ள எதிரிகள் ஒரு தூண்டுகோலாக இருக்கிறார்கள். நம் ஒவ்வொருவருக்கும் எப்போதும் ஒரு தூண்டுகோல் தேவை. நாம் எங்கேயாவது சோர்ந்து உட்கார்ந்து விடாமல் இருக்க அந்தத் தூண்டுகோல்தான் உதவுகிறது.

எதிரிகளை சந்திக்கத் தயாராக இல்லாதவர்களால் வெற்றியை எட்டவே முடியாது. பெரிய தொழிலதிபர்களிடம் கேட்டால் அவர்கள் எதிரிகளைப் பற்றித்தான் நிறைய தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்களைப் பற்றித்தான் நிறைய கதைகளைச் சொல்வார்கள்.

நாடகக் கொட்டகையில் டிக்கெட் கிழித்துக் கொண்டு இருந்தவர் உலகம் போற்றும் நாடக எழுத்தாளரானது அவரது எதிரிகளால் தான் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அவர் ஒரு நாடகத்தை பார்த்து விட்டு சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்தார். அதனால் கடுப்பாகிப்போன பிரபல நாடக நடிகர்,

 'உனக்கு என்ன தெரியும்? நீ என்ன பெரிய நாடக எழுத்தாளரா?’ என்ற கேள்வியை எழுப்பி, அவரை குறை சொன்னார். அந்த எதிரியால் தான் அவருக்குள்ளே இருந்த எழுத்தாளர் வெளிப்பட்டார். அவர் யார் தெரியுமா? அவர்தான் ஷேக்ஸ்பியர்!

இதையும் படியுங்கள்:
வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான 10 உபயோகமான டிப்ஸ்!
Motivation Image

ஆனால் ஒரு உண்மையை எல்லோரும் ஒத்துக் கொண்டு தான் ஆக வேண்டும். யாராலும் எதிரிகளை நேசிக்க முடியாது. அவர்களை அழைத்து, உங்களால்தான் நான் உயர்ந்தேன் என்று விருந்து வைக்கவும் முடியாது.

எதிரிகள் என்பவர்கள் தோற்கடிக்கப்பட வேண்டியவர்கள் அல்ல.. உணர்ந்து கொள்ளப்பட வேண்டியவர்கள். எதிரிகளை இதுவரை உணரவில்லை என்றால் தேடுங்கள். அவர்கள் கற்றுக் கொடுக்கும் பாடங்களைப் படிக்க ஆரம்பியுங்கள். எதிரிகளை நினைத்து வேதனைப் படாமல், தற்போது இருப்பதை விட சிறப்பாக அவர்கள் முன்னால் வாழ்ந்து காட்டுவேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள்.

அப்படி உறுதி எடுத்துக் கொள்ளும்போது பலவிதமான புதிய வழிகள் தோன்றும். முயற்சி நம் முன்னே வந்து நிற்கும். அதுதான் வெற்றிக்கான வழி. நாம் செய்யும் செயல்களில் எப்படியும் குறைகள் இருக்கத்தான் செய்யும். நம்மைச் சுற்றியிருக்கும் நண்பர்கள் அந்தக் குறைகளைக் கூறத் தயங்குவார்கள்.

ஆனால் எதிரிகள் அந்த குறைகளைத் தயங்காமல் கூறுவார்கள். அதை நினைத்து வருத்தப்படாமல் குறைகளை நிவர்த்தி செய்ய முயற்சி செய்வோம் என்றால் நம்மை நாமே செம்மைப்படுத்திக் கொள்ளலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com