நமக்கு நிலையான மகிழ்ச்சியைத் தருவது எது? சண்டையா? சமாதானமா?

What gives us lasting happiness?
Life style story
Published on

னைவரும் விரும்பும் ஒரு விஷயம் மகிழ்ச்சி. நமது மனமானது ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாகவே வாழ விரும்புகிறது. சண்டையா ? சமாதானமா? எது சிறந்தது? வாருங்கள் நண்பர்களே. இந்த பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.

சிலர் எப்போதும் எதற்கெடுத்தாலும் பிறரிடம் வாக்குவாதம் செய்து சண்டையிட்டுக்கொண்டே இருப்பார்கள். கடினமான வார்த்தைகளால் போர் தொடுப்பார்கள். பேராயுதங்களை விட ஆபத்தானது கடினமான வார்த்தைகள் என்பதை நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும். இவ்வாறு எதற்கெடுத்தாலும் வார்த்தைகளால் பிறரை காயப்படுத்துபவரை சண்டைக்கோழி என்று அழைப்பது வழக்கம்.

எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் முதலில் மனம்விட்டுப் பேசி அதற்குத் தீர்வு காணவேண்டும். இருதரப்பினரும் இறங்கி வந்து பேசினால் மனம் மாறாதவர்கள் என யாருமே இருக்க மாட்டார்கள். பிரச்னையும் சுலபமாகத்தீரும். இரு தரப்பினருக்கும் இடையே நல்லுறவு நீடிக்கும்.

இந்த சமூகத்தில் அனைவரின் ஆதரவும் அரவணைப்பும் நமக்கு நிச்சயம் தேவை என்று உணரவேண்டும். நம் வாழ்க்கையில் எப்பொழுது பிரச்னை தலைகாட்டும் என்று சொல்லவே முடியாது. அத்தகைய சமயத்தில் நமக்காக நான்கு பேர்கள் இருந்தால் ஒரு ஆறுதல் கிடைக்கும். நமக்கு நல்லது நினைப்பவர்கள் பிரச்னையில் தலையிட்டுப் பேசி பிரச்னையை சுமூகமாகத் தீர்த்து வைப்பார்கள். சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் இந்த நிலைமைதான் இருந்தது.

ஒருவரிடம் சண்டையிட்டுப் பாருங்கள். உங்கள் நிம்மதி பறிபோய் விடும். அவருடைய நிம்மதியும் பறிபோய்விடும். உங்கள் நட்பிலும் உறவிலும் நிரந்தரப் பகை ஏற்படும். சண்டையின் மூலம் உருவாகும் பகை என்பது உடைந்த கண்ணாடியைப் போன்றது. பிறகு நீங்கள் மனம் மாறி எவ்வளவு முயற்சித்தாலும் உடைந்த உறவுக்கண்ணாடியை ஒட்ட வைக்கவே முடியாது. சண்டையிடுவதற்கு பதிலாக சமாதானமாகப் பேசிப் பாருங்கள். உங்கள் பிரச்னைக்கு சுமூகமாகத் தீர்வு கண்டுப்பாருங்கள். இருதரப்பினரின் மனதிலும் மகிழ்ச்சி நிலவும். எதிராளி உறவினரானாலும் நண்பரானாலும் உங்கள் உறவு இன்னும் பலப்படும்.

இருதரப்பினர் சண்டையிடும்போது சமாதானம் செய்கிறேன் பேர்வழி என்று சிலர் மூக்கை நுழைப்பார்கள். இந்த சந்தர்ப்பத்திற்காகவே சிலர் காத்துக் கொண்டிருப்பார்கள். இது இன்னும் சிக்கலை ஏற்படுத்தி நிரந்தரப் பகை உருவாக வழிவகை செய்யும். உங்களுக்குள் பிரச்சினை இருக்கும்போது அதில் மூன்றாவது நபர் தலையிடுவதை எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கவே அனுமதிக்காதீர்கள்.

இதையும் படியுங்கள்:
மனதை கட்டுக்குள் வைத்தால்தான் உங்கள் முழு திறமையும் வெளிப்படுத்த முடியும்!
What gives us lasting happiness?

உங்கள் பிரச்னையின் போது ஒருவர் உங்களிடம் கோபமான வார்த்தைகளை பயன்படுத்தினால் நீங்கள் அமைதியாக இருந்து விடுங்கள். நீங்களும் ஏதாவது உடனுக்குடன் கோபமான வார்த்தைகளை உதிர்த்தால் மற்றவர் இன்னும் அதிகமாக கோபப்பட்டு அவரும் கடினமான வார்த்தைகளை உதிர்த்துக் கொண்டே இருப்பார். எவரேனும் ஒருவர் அமைதி காத்து நில்லுங்கள். அந்த அமைதி காப்பவர் எப்போதும் நீங்களாகவே இருங்கள். மௌனம் பல பிரச்னைகளை சுலபமாகத் தீர்க்கும் வல்லமை படைத்தது.

எப்போதும் எந்த சூழ்நிலையிலும் நீங்களே விட்டுக் கொடுப்பவராக இருங்கள். இந்த மனது உங்களுக்கு இருந்தால் எல்லா செல்வங்களும் உங்களைத் தேடிவரும். இறைவன் அமைதியானவரின் மனதிலே குடியிருப்பதை விரும்புபவர். இறைவன் உங்கள் மனதில் குடியிருந்தால் அப்புறம் உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாது. உங்களிடம் சண்டையிட வருபவர் கூட மனம் மாறி உங்கள் முன்னால் பணிந்து நிற்பார். அன்பை விட சிறந்த ஆயுதம் இந்த உலகத்தில் இருக்கிறதா என்ன? அன்பே பேராயுதம். சண்டையிட்டுக் கிடைக்கும் வெற்றியானது தற்காலிகமானது என்பதை நாம் ஒவ்வொருவரும் உணரவேண்டும்.

சமாதானமும் அன்பும் அமைதியுமே நமது வாழ்வை செழிக்கச் செய்யும் பேராயுதங்களாகும். இவற்றைப் பின்பற்றி வாழ்ந்தால் உங்கள் வாழ்வில் எப்போதும் அமைதி நிலவும். வெற்றிகள் உங்களைத் தேடிவரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com