
நாம் முதலில் நம் மீது, நம் செயல் மீது, நாம் எடுக்கும் முடிவுகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும். என்னால் முடியாது, நான் எதற்கும் லாயக்கில்லை, அதிர்ஷ்டம் இல்லாதவன் என எதிர்மறை சிந்தனை கொண்டிருந்தால் நம் மூளையும் அதையே உண்மை என எடுத்துக் கொள்ளும். நம் பலம் நமக்கு தெரியாத வரை நம்மால் எதையும் சாதிக்க முடியாது.
உதாரணத்திற்கு யானை மிகவும் பலம் மிக்கது. காட்டில் இருக்கும்போது அதன் செயல் அளப்பரியது. அதையே நாம் கால்களில் சங்கிலி போட்டு கட்டி பழக்கப்படுத்தி விட்டால் அது தன் பலம் தெரியாமல் அந்த சின்ன வட்டத்திலேயே சுற்றிக் கொண்டிருக்கும். சிறிது காலம் கழித்து சங்கிலிகளை அவிழ்த்து விட்டால் கூட அதனால் தன் பலத்தை உணர முடியாது. அதுபோல்தான் நாமும். நம்மால் முடியாது என நினைத்துவிட்டால் எந்த செயலையும் வெற்றிகரமாக செய்ய முடியாது.
எனவே, நம்மை நாமே நம்புவது தான் வெற்றியின் முதல் படி. அதற்காக நம்மை நம் தகுதிக்கு மீறி நம்புவதும் அகங்காரத்திற்கு வழி வகுக்கும்.
நம்மை நாமே நம்புவதற்கு நம் முந்தைய வெற்றிகளை நினைவு கூர்ந்தாலே நம் நம்பிக்கை அதிகரித்துவிடும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
நம்மால் எதையும் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை வேண்டும். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தாலே நம்மால் எதையும் சாதித்து விட முடியும்.
எதையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை, புத்தி கூர்மை, நம்மை நாமே முழுவதுமாக நம்புதல், மனதை ஒருமுகப்படுத்தி செயல்களை செய்தல், தோற்று விடுவோமோ என்ற பயமோ சந்தேகமோ இன்றி செயல்படுதல் வேண்டும்.
நம் திறமைகளை நாம் குறைத்து மதிப்பிடாமல் இருந்தாலே போதும். நம் எண்ணமே வாழ்க்கையாகும். முதலில் நாம் நம்மை நேசிக்க பழக வேண்டும். நம் எண்ண ஓட்டங்களுக்கு நிறைய சக்தி உண்டு.
ஒரு அறிவியல் துணுக்கு செய்தி. ஒரு மனிதனுக்கு ஒரு நாளில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் எண்ண ஓட்டங்கள் எழுமாம். இதில் பெரும்பாலானவை ஒரே எண்ணத்தின் வெவ்வேறு வெளிப்பாடுகளாம். எனவே நாம் நம் மீது நம்பிக்கையோடு அதாவது தன்னம்பிக்கையோடு இருந்தால் அந்த எண்ண ஓட்டம் மீண்டும் மீண்டும் தோன்றி நம்மை முன்னேற வைக்குமாம்.
ஊக்கத்துடனும் நம்பிக்கையோடும் செயல்பட்டு வாழ்க்கையில் மேன்மேலும் வெற்றி அடைய முதலில் நம்மை நாமே நம்புவது அவசியம்.