நம் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக இருப்பது நம் திறமை. ஆனால், அந்த திறமையை வளர்த்துக் கொள்வதில் நமக்கு திறமை மீது நம்பிக்கை வேண்டும் அந்த நம்பிக்கை இல்லை என்றால் நம்மால் எந்த காரியமும் செய்ய முடியாது.
நமக்கு இருக்கும் திறமை மீது நாம் முழு நம்பிக்கை கொண்டு எந்த ஒரு காரியம் செய்தாலும் சரி அந்த காரியம் நிச்சயமாக வெற்றி பெறும். இதில் எந்த சந்தேகமும் இல்லை. நம்மிடம் திறமை இருக்கு இது நடக்குமா நடக்காதா சரி வருமா சரி வராதா என பலமுறை யோசித்தால் அது நிச்சயமாக நமக்கு வெற்றியை தேடி தராது. வாழ்க்கையில் உயர்வையும் தராது.
ஒவ்வொரு வெற்றியாளர்களின் பின்னாலும் அவர்கள் சொல்லும் பொழுது நான் என் திறமை மீது நம்பிக்கை வைத்தேன். அதனால் வெற்றி அடைந்தேன் என்றுதான் கூறுவார்கள் இதை உணர்த்தும் ஒரு சின்ன கதை இப்பதிவில்.
வானொலியில் அறிவிப்பாளராக இருந்த ஆர்தர் கார்டன் லிங்க்லெட்டர் என்பவர் இளம் வயதில் ஒருசமயம் அந்தப் பணியிலிருந்து நீக்கப்பட்டார். வீட்டை அடைந்த அவர் சற்றும் மனம் தளராமல் தன் மனைவியிடம் தனக்குப் புதிதாக ஒரு தொழில் தொடங்க வாய்ப்புக் கிடைத்துள்ளது என்று கூறிவிட்டு வேலையிலிருந்து நீக்கப்பட்டதையும் தெரிவித்தார். தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு தானாகவே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கினார்.
'மக்கள் வேடிக்கையானவர்கள்' என்று அமைந்த அந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சிக்குப் பலத்த வரவேற்புக் கிடைத்தது. அதன்பிறகு தொலைக்காட்சிகளின் பிரபலங்கள் வரிசையில் பல ஆண்டுகள் முதல் நபராகத் திகழ்ந்தார் ஆர்ட் லிங்க்லெட்டர். YES, YOU CAN (ஆம், உங்களால் முடியும்) என்ற புகழ்பெற்ற புத்தகத்தைத் தன் வாழ்வில் சந்தித்த சவால்களை, வென்றெடுத்த நிகழ்வுகளைத் தந்து நம்பிக்கையூட்டியுள்ளார்.
தனது திறமையின் மீது தளராத நம்பிக்கை கொண்டதால்தான் ஆர்ட் லிங்க்லெட்டர் புதிய முயற்சியைத் தைரியமாகத் தொடங்கி, வெற்றியும் பெற்றார். மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பதைவிட நமது மதிப்பு நமக்குத்தான் நன்கு தெரியும்.
"எப்போதும் தோல்வியை மட்டும் தனியாகப் பிரித்துப் பார்க்காதீர்கள். அது வெற்றியின் ஒரு அம்சம் என்பதை உணருங்கள்."