
Motivation Psychology: மோட்டிவேஷன் சைக்காலஜி என்பதை ஒரு செயலை செய்ய உந்துதலாக இருக்கும் உளவியல் என்று பொருள் கொள்ளலாம். ஒருவர் தன் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்பினால் அவருக்கு மூன்று விதமான உந்துதல்கள் (மோட்டிவேஷன்) தேவைப்படுகிறது.
மூன்று விதமான உந்துதல்கள்:
முதலாவதாக, நமது உடலின் அடிப்படைத் தேவைகள் மற்றும் மூளை செயல்பாடு போன்ற உயிரியல் காரணிகள். இரண்டாவதாக எண்ணங்கள், உணர்ச்சிகள், நம்பிக்கைகள் போன்ற உளவியல் காரணிகள., மூன்றாவதாக சுற்றுச்சூழலில் உள்ள இலக்குகள், வெகுமதிகள் போன்றவை. இந்த மூன்று காரணிகளும் ஒன்று இணைந்து ஒருவர் எவ்வாறு முன்னேறுகிறார் என்பதை தீர்மானிக்கின்றன.
1. உயிரியல் காரணி:
நாம் உயிர் வாழவும் ஆரோக்கியமாக இருக்கவும் உணவு, நீர் போன்ற சில அடிப்படைத் தேவைகள் இருக்கின்றன. பசிக்கும் போது வயிறு காலியானதைப் போன்ற உணர்வு வரும். அதே சமயம் வயிறு மூளைக்கு சில சிக்னல்களை அனுப்பி, 'எனக்குப் பசிக்கிது, ஏதாவது உள்ளே போடு' என்ற உணர்வை உருவாக்குகிறது. சாப்பிட்டவுடன் பசி அடங்கி , வயிறும், மூளையும் திருப்தியடையும். இது நாம் உயிர் வாழ்வதை உறுதி செய்வதற்காக பல மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உடலுக்குள்ளே உருவாகியிருக்கும் ஒரு உந்துதல் ஆகும்.
2. உளவியல் காரணி:
உடல் தேவைகளுக்கு அப்பால் மனிதர்கள் பிறரால் பாராட்டப்பட வேண்டும், திறமையை வெளிக் காட்ட வேண்டும், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதற்காக குறிப்பிட்ட ஒரு இலக்கு வைத்து, அதை அடைய திட்டம் தீட்டி, உற்சாகமாக அதில் ஈடுபட்டு சாதிக்கும்போது மனம் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைகிறது. இவை அனைத்தும் உளவியல் ரீதியான உந்துதல்களை ஒரு மனிதனுக்கு அளிக்கின்றனர்.
3. சுற்றுச்சூழல் காரணிகள்:
ஆசைப்பட்ட வேலை கிடைத்தவுடன் அதில் பிரமோஷன் கிடைத்தால் இன்னும் அதிகமான சம்பளம் கிடைக்கும். அதிகாரம், பதவி உயர்வு போன்ற வெகுமதிகள் கிடைக்கும். இதற்காக ஒரு மனிதன் கடுமையாக உழைக்கத் தயாராகிறான். அதன் பலனாக பதவி உயர்வும், சம்பள உயர்வும் கிடைப்பதோடு, பிறரிடமிருந்து அதற்கான பாராட்டு, அங்கீகாரம் போன்றவையும் கிடைக்கும். இவை அனைத்தும் சுற்றுச்சூழல் காரணிகள்.
உந்துதலை உளவியல் காரணிகள் எவ்வாறு மோட்டிவேட் செய்கின்றன?
அறிவாற்றல் காரணிகள்:
ஒவ்வொரு மனிதனுக்கும் உந்துதலாக இருந்து உதவி செய்வது உளவியல் காரணிகளே. ஒரு மனிதனின் ஆசையை எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவர் தன்னை நம்ப வேண்டும். உதாரணமாக பைக் ஓட்ட கற்றுக் கொள்ள முடியும் என்று அவர் ஆசைப்பட்டால் தன்னால் பைக் ஓட்ட முடியும் என்று நம்ப வேண்டும். ஒரு பி.எம்.டபிள்யூ காரை வாங்க வாங்க ஒரு மனிதன் விரும்புகிறார் என்றால் அதற்கு நிறையப் பணம் தேவை. தான் செய்து கொண்டிருக்கும் வேலையை விட பெரிய வேலையை தேடலாம். அதில் நிறைய ஊதியம் பெற்று அதன் மூலம் அவர் தான் விரும்பிய காரை வாங்கலாம். இதற்கு அறிவாற்றல் காரணிகள் உதவுகின்றன.
உணர்ச்சி காரணிகள்:
ஒருவர் தான் ஆசைப்பட்டதை செய்ய வேண்டும் என்று விரும்பினால் உணர்ச்சிகள் அவருக்கு மிகவும் முக்கியம். கார் ஓட்டக் கற்றுக்கொள்ள விரும்பினால் அதைப்பற்றி உற்சாகமான நினைத்து அதில் ஈடுபட்டால் மட்டுமே அவர் மிக விரைவில் கார் ஓட்ட கற்றுக்கொள்ள முடியும். ஆனால், கார் ஓட்டினால் எங்கேயாவது இடித்து விடுவோமோ என்று ஒருவர் நினைத்துக் கொண்டே ஓட்டினால் கண்டிப்பாக அவர் விபத்தை சந்திக்க நேரிடும். நல்ல உணர்வுகள் மனதை உற்சாகப்படுத்தி நேர்வழியில் செலுத்துவது போல எதிர்மறை உணர்வுகளும் எதிர்மறையான விளைவுகளைத் தருகின்றன.
சமூக காரணிகள்:
உறவினர்களில் எல்லோரும் நன்றாக படித்தவர்கள் என்றால், நீங்களும் படித்து பெரிய பதவியில் அமரவேண்டும் என்று விரும்புகிறீர்கள். அதற்கு உறுதுணையாக குடும்பத்தினர், நண்பர்கள் உதவி செய்து ஆதரவு தரும்போது அது பெரிய உந்துதலாக இருக்கும்.