

அழகு என்பது உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளிலும், மற்றவர்களுக்கு உதவும் செயல்களிலுமே வெளிப்படுகிறது. அது தோற்றத்தைச் சார்ந்தது அல்ல. அன்பான இதயம் மற்றும் நல்ல குணங்களிலுமே தங்கி உள்ளது. இதற்கு உதாரணமாக ஒரு குட்டி கதை:
அழகான இளம் பெண் ஒருவர் விமானத்தில் நுழைந்தார். விமானப்பணி பெண் அவரை இன்முகத்துடன் வரவேற்று அவருக்கான இருக்கையை காட்டினார். அதை பார்த்து அவர் திடுக்கிட்டார். இரண்டு கைகளும் இல்லாத நடுத்தர வயது மனிதர் ஒருவர் அந்த பெண்ணின் இருக்கைக்கு பக்கத்தில் உள்ள சீட்டில் அமர்ந்திருந்தார். இந்த மனிதன் அருகில் உட்கார இளம் பெண்ணுக்கு பிடிக்கவில்லை.
அப்பெண் விமானப் பணிப் பெண்ணை அழைத்து, "எனக்கு வேறு இருக்கை ஒதுக்கி தாருங்கள்" என்று கேட்டார். அதற்கான காரணத்தை பணிப்பெண் கேட்டார். பக்கத்து இருக்கைப் பயணியை சுட்டிக்காட்டிய இளம்பெண், "எனக்கு இப்படிப்பட்ட மனிதர்களை பிடிக்காது. இவருக்கு பக்கத்தில் உட்கார்ந்து பல மணி நேரம் பயணம் செய்ய வேண்டும் என்பதை நினைத்தாலே கஷ்டமாக இருக்கிறது" என்று கோபமாக சொன்னார்.
நன்கு படித்து உயர்ந்த குடும்பத்தை சேர்ந்த நாகரீகம் தெரிந்த பெண் இப்படி பேசியது விமான பணிப்பெண்ணுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
"விமானத்தில் எல்லா இருக்கைகளும் நிரம்பியுள்ளன. எகானமி கிளாஸ், பிசினஸ் கிளாஸ் இரண்டிலும் இடம் இல்லை. பயணிகள் திருப்தியுடன் பயணம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் நிறுவனத்தின் இலக்கு நீங்கள் சில நிமிடங்கள் பொறுமையாக இருங்கள் வேறு எதாவது வாய்ப்பு இருக்கிறதா? என நான் பைலட்டிடம் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று சொல்லி விட்டுப் போனார் பணிப்பெண். இளம்பெண் நின்றபடியே காத்திருந்தார்.
சில நிமிடங்களில் திரும்பி வந்த பணிப்பெண், "ஒட்டு மொத்த விமானத்திலும் முதல் வகுப்பில் ஒரே ஒரு இருக்கை மட்டுமே காலியாக இருக்கிறது. அது கிட்டத்தட்ட படுத்துக்கொண்டே பயணம் செய்ய முடிகிற சொகுசு இருக்கை. எங்கள் நிறுவன வரலாற்றில் முதல் முறையாக எகானாமி கிளாஸ் டிக்கெட் எடுத்த ஒருவரை முதல் வகுப்பு இருக்கைக்கு மாற்றுகிறோம்" என்றார்.
இளம்பெண்ணுக்கு மிக மகிழ்ச்சி. அவர் பதில் சொல்வதற்கு முன்பாக பக்கத்து இருக்கை மனிதரை அணுகிய விமான பணிப்பெண், "சார்! நீங்கள் தான் முதல் வகுப்பு இருக்கைக்கு போகிறீர்கள். நாகரிகம் தெரியாத ஒரு பெண்ணுக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்யும் துயரம் உங்களுக்கு வேண்டாம்" என்றாள் பணிப்பெண்.
நடந்தவற்றை பார்த்துக் கொண்டிருந்த மற்ற பயணிகள் இதனை பாராட்டி கைதட்டி வரவேற்றனர். அந்த இளம் பெண் அவமானத்தில் தலை குனிந்தார். கைகளை இழந்திருந்த அந்த மனிதர் நெகிழ்ச்சியுடன் எழுந்து நின்று பேசினார். "நான் முன்னாள் ராணுவ வீரன். எல்லையில் நடந்த போரில், எதிரியின் குண்டு வீச்சுக்கு என் கைகளை இழந்தேன். முதலில் இந்த இளம்பெண் என்னைப் பற்றி பேசியதை கேட்டபோது, 'இப்படிப்பட்ட மனிதர்களுக்காகவா, நான் உயிரைப் பணயம் வைத்து போரிட்டேன்' என விரக்தி ஏற்பட்டது.
ஆனால் நடந்த எல்லாவற்றையும் பார்த்த பிறகு, "உங்கள் கைதட்டல், ஓசை பாராட்டையும் கேட்டபின் என்னை மதிக்கும் என் தாய் நாட்டுக்காக என் கைகளை இழந்ததில் பெருமைப்படுகிறேன்" என்றார் அந்த ராணுவ வீரர்.
அழகு (The real beauty) என்பது தோற்றத்தில் இல்லை. சிந்தனை செயல்களிலும் தான் அது வெளிப்படுகிறது. ஒவ்வொருவரிலும் தனித்துவமான அழகை குணத்தை, நல்ல மனங்களைய உடையவர்களிடம் இருப்பதால் அவர்களை என்றென்றும் பாராட்டுவோம்.