எது வெற்றி? எது தோல்வி?

எது வெற்றி? எது தோல்வி?

-டாக்டர் பே.நா.நாராயண ராஜா

ல நேரங்களில் மனிதர்கள் தங்கள் தனிமனித முன்னேற்றத்தின் ஒரு கோணத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, (உதாரணத்திற்கு பொருளாதாரத்தில்) வாழ்வில் மேன்மையடைய வேண்டுமென்ற குறிக்கோளை மட்டும் கொண்டு, வாழ்க்கையின் மற்ற கோணங்களைப் புரிந்துகொள்ளாமலேயே விரக்தி அடைந்து விடுகின்றனர். தனிமனித வாழ்வின் முன்னேற்றக் கோணங்கள் எவை? எது வெற்றி? எது தோல்வி? பார்ப்போம்...

னிமனித முன்னேற்றம் என்பது ஆறு வகையான வெற்றிப் பாதைகளைக் கொண்டுள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இந்த ஆறு வகையான வெற்றிப் பாதைகளுக்குமான குறிக்கோள்களை அமைத்துச் செயல்படுவதே நமது வாழ்வின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் உதவிகரமாக இருக்கும்.

1. உடலைச் சார்ந்த குறிக்கோள்கள்

பொருளை ஈட்டுவதிலேயே குறியாக இருந்து,  தனது உடல் நிலையைப் பற்றிய அக்கறை கொள்ளாது அல்சர், தீராத தலைவலி, இதய அடைப்பு என்று சிக்கிக்கொள்வது பரவலாகிவிட்டது. மாறி வரும் உணவுப் பழக்கங்கள் பெரிய காரணங்களாக இருந்தாலும், அதனைப் புரித்துகொண்டு தங்களது உடலைச் சார்ந்த வெற்றிக்குரிய குறிக்கோள்களை தீட்டிக்கொள்வது அவசியமாகிறது. இந்த விழிப்புணர்வே அவனது மற்ற வெற்றிக் கோணங்களைத் தாண்டிச் செல்ல அடித்தளமாக அமையும். 'ஊனுடம்பு ஆலயம் அல்லவா? உடலைச் சீராக வைத்துக்கொள்ள உதவும் பழக்க வழக்கங்களைக் கையாண்டால் உங்களது உடலைச் சார்ந்த வெற்றிக் குறிக்கோள்களை எளிதாகத் தீர்மானம் செய்ய இயலும்,

2. மனம், புத்தியைச் சார்ந்த குறிக்கோள்கள்

உடல் மட்டும் நன்கு அமைந்தால் போதாது. மனமும், புத்தியும் திண்மை வாய்ந்ததாக அமைந்தால் மட்டுமே அவை நமது வாழ்வின் வெற்றிக்கு உதவுவதாக அமையும். நமது மனமும் புத்தியும் தெளிவடைய கல்வியும் நமது அனுபவங்களும் கருவியாக அமைகின்றன. நவீன கல்வி நிறைய விஷயங்களை நமக்கு எடுத்துக் கூறினாலும் புத்தியின் வளர்ச்சிக்குப் பெரிதாக உதவுவது இல்லை: கல்வி வேறு, அறிவு வேறு. கற்றவற்றிலிருந்து அறிவு பல நேரங்களில் வளர்ச்சி பெறுவதில்லை. சான்றாக 'மதுப்பழக்கம் உடலுக்குத் தீங்கு' என்ற கல்வி. கற்ற கல்வி, புத்தியை வளர்க்காத காரணத்தினாலேயே அவர்கள் மது அருந்துகின்றனர். நமது மனமும் புத்தியும் வெற்றிக்கு அடித்தளம் என்ற அறிவே வெற்றிக்கான பாதையாக அமையும்.

3. குடும்ப உறவுகள் சார்ந்த குறிக்கோள்கள்

குடும்பம், பாரத கலாசாரத்தின் ஆணி வேர். குடும்ப உறவுகளை உருவாக்குவதும் தக்கவைத்துக் கொள்வதும் சீராக வளர்த்துக் கொள்வதும் தனிமனித வெற்றியின் மூலப்பொருள் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். மனிதனுடைய உடல், மனம், புத்தியை இளமைக் காலத்தில் செம்மைப்படுத்த குடும்ப பந்தங்கள் மிகவும் உதவிகரமாக இருந்து வருகின்றன. இன்றைய உலகில் உறவுகளை பொருளாதார நிலைகளை வைத்து உரசிப் பார்ப்பதால் உறவுகளின் நெருக்கம் குறைந்து வருகிறது. இந்த உறவுகள் எவ்வாறு பலமடையச் செய்வது? இந்த உறவுகள் பலவீனமாக உள்ளன என விமர்சித்தால் பலவீனத்துக்கு என்ன காரணம்? எந்த மாதிரி திட்டமிட்டால் பலவீனத்தை, பலமாக்க முடியும் என யோசித்தால் அந்த முயற்சியின் முடிவே குடும்ப உறவுகளைச் செம்மையடையச் செய்யும். உங்கள் குறிக்கோள்களை எளிதாக நிர்ணயம் செய்யவும் உதவும்.

4. சமூக உறவுகள் மேம்பாட்டுக் குறிக்கோள்கள்

குடும்ப உறவுகளைப் போன்றே, சமூக உறவுகளும் உங்களது வெற்றிக்கு உதவியாக இருக்கும். மனிதனின் சமூக அந்தஸ்து அவன் காத்து வைத்துள்ள சமூக உறவுகளைச் சார்ந்தே அமைகின்றது. பக்கத்து வீட்டு மனிதனிடம் உறவு வளர்க்கத் தெரியாத ஒருவனால் சமூக உறவுகளின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ள இயலாது. பல்வேறு  சமூக அமைப்புகளில் உறுப்பினராகி தவறாது கூட்டங்களில் கலந்து கொள்வதும் சமூக உறவுகளை வளர்த்துக்கொள்ளும் உத்தியே ஆகும். தனிமனிதனின் முன்னேற்றத்துக்கு சமூக உறவுகள் உறுதியாகவும் பக்கபலமாகவும் அமையும். சமூக உறவுகள் உங்களுள் சுய கண்ணோட்டத்தை வளர்ப்பதோடு, இச் சமூகத்தில் உங்கள் நிலை என்ன என்பதையும் தெளிவாக உணர்த்தும். சமூக உறவுகளில் நிகழ்கால நிலையைப் புரிந்துகொண்டு எதிர்கால நிலையைத் திட்டமிட்டு,  அதற்கேற்ப உங்களது குறிக்கோள்களை முடிவு செய்வது உங்களது வெற்றிக்கு உரமாகும்.

5. பொருளாதார மேம்பாட்டுக் குறிக்கோள்கள்

னிமனித வளர்ச்சிக் கோணத்தின் முக்கியப் பகுதி பொருளாதார மேம்பாடு. 'பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லை'. இது உண்மையே! பொருளை எந்தளவு ஈட்ட வேண்டுமென்பது தனி நபர்களின் வாழ்க்கைக் குறிக்கோளையொட்டி வேறுபடும். சிலருக்குப் பணம் சுயதேவையைப் பூர்த்தி செய்யவும், சிலருக்குத் தன் பின்னுள்ள நான்கு பரம்பரை மனிதர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், சிலருக்கு தான் வளர்ந்ததுபோல இன்னும் சிலர் வளர வேண்டுமென்ற சமூக சிந்தனையைப் பொறுத்தும் பொருளீட்டும் அளவு வேறுபடலாம். எது எப்படியோ The glory of earning is in worthful spending', என்பதை மட்டும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். பகிர்தல் அன்பு செலுத்துவதன் அடையாளம் என்பதை நினைவில்கொண்டால் பல தனிமனித, சமூகப் பிரச்னைகளுக்கு விடை கிடைக்கும்.  பொருளை ஈட்ட திடடமிட்டுக் குறிக்கோள்களை நிர்ணயம் செய்பவர்கள், அந்தப் பொருளை உயர்ந்த வழியில் செலவிடத் திட்டமிட்டுக் குறிக்கோள்களை முடிவு செய்துகொள்ள வேண்டும்.

6. ஆன்மிகக் குறிக்கோள்கள்

ன்மிகம் என்பது தன்னுள்ளே இருக்கும் 'ஆன்மாவை'ப் புரிந்துகொள்ள நாம் எடுக்கும் முயற்சியே. ஆன்மிகப் பயணமென்பது மதத்திற்கு அப்பாற்பட்டது. 'தன்வினைக்குத் தானே பொறுப்பு' அந்த வினைகளின் காரண காரியங்களைத் தெளிவாக அறிந்துகொள்ள மனிதனுக்கு ஆன்மிகப் பயணம் தேவைப்படுகின்றது. ஆன்மிகப் பயிற்சிகளை எல்லா மதமும் அவரவர்கள் நம்பிக்கைக்கு ஏற்ப, வழங்குகிறது. அந்தப் பயற்சிகளின் தேவைகளைப் புரிந்த அதனை நாமும் அடைய நமக்குள்ளே சரியான குறிக்கோள்களை முடிவு செய்வது வெற்றிக்கு உதவும்.

பின்குறிப்பு:-

மங்கையர் மலர்  ஏப்ரல்  2006 இதழில் வெளியானது இக்கட்டுரை. இங்கு கல்கி ஆன்லைன் களஞ்சியத்திலிருந்து மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது. சில விஷயங்கள் நமக்கு நன்கு அறிமுகமாகி யிருந்தாலும், தெரிந்திருந்தாலும்... அவற்றை நாம் மீண்டும் மீண்டும் படித்து பயனடையக்கூடிய தகவல்களாக... எவர்க்ரீன் செய்திகளாக நினைவுபடுத்திக் கொள்வது நல்லதுதானே தோழிகளே!

- ஆசிரியர், கல்கி ஆன்லைன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com