மாறிவரும் சூழலுக்கு ஏற்ப மனிதனின் தேவைகள் பெருகிக்கொண்டே செல்கின்றன. எல்லாவற்றிற்கும் ஒரு எல்லை வைத்து அந்த எல்லைக்குள் வாழும் மனிதர்கள் பணத்தை சேர்ப்பதில் மட்டும் வானத்தைக் கூட எல்லையாக எடுத்துக் கொள்ள விரும்புவதில்லை என்றே சொல்லலாம். எந்த அளவுக்கு 99% சதவீதம் மக்கள் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கே அல்லல்பட்டு மாய்கிறார்களோ அதே அளவுக்கு 1% சதவீதம் மக்கள் தேனில் விழுந்து கிடக்கும் ஈக்களைப் போல சுகபோகத்திலும், ஆடம்பர வாழ்க்கையிலும் திளைத்து மகிழ்கிறார்கள்.
இப்படி சென்று கொண்டிருக்கும் மனித வாழ்க்கையில் முன்பெல்லாம் தவறு செய்தவர்கள் வாழ்க்கையைக் கண்டு பயந்து வாழ வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இன்று அதுவே தலைகீழாக மாறி நேர்மையாக இருப்பவர்கள் பயந்து வாழ வேண்டிய சூழலுக்கு உள்ளாகி இருப்பது காலத்தின் மிகப்பெரிய அவலம் என்று சொல்லலாம். நேர்மையாக மனசாட்சிக்கு உட்பட்டு உழைப்பவர்களுக்கு இந்த உலகம் கொடுக்கும் பரிசு வாழத் தெரியாதவர்கள் என்பதே. அந்த அளவுக்கு எல்லா இடங்களிலும் பணத்தின் சித்து வேலைகள் செழித்து வருகின்றன என்று சொல்லலாம்.
அப்படி நேர்மையாக இருப்பதால் என்னதான் சாதித்து விடுகிறீர்கள் என்ற கேள்வி நம் முன் வைக்கப்படுமேயனால் அப்போது நாம் தாராளமாக பதில் சொல்லலாம். நிச்சயம் மன நிறைவு என்று. மனித வாழ்க்கையில் உள்ள பொது நியாயங்களை தாண்டி, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட நியாய தர்மங்கள் உள்ளன. சிலருக்கு எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும் இழிவான செயல்களை செய்ய அவர்களுக்கு ஒரு போதும் மனம் வருவதில்லை. இதையே ஆகச் சிறந்த அறங்கள் என்று நம் இலக்கியங்கள் கூறுகின்றன.
மனிதர்களாகிய நமக்கு விலங்குகளை போல் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்து விடலாம் என்ற கட்டுப்பாடு அற்ற வாழ்க்கை இருப்பதில்லை. இந்த வாழ்க்கையை இப்படித்தான் வாழ வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் உள்ளன. அவற்றிற்குட்பட்டு நாம் வாழ முற்படும்போது வாழ்வின் இறுதிக் கட்டங்களில் நாம் சிறப்பாக வாழ்ந்தோம் என்ற மன நிறைவு நமக்கு இருக்கும். நாம் செய்யும் தவறுகள் நாம் வாழ்வின் மிக இக்கட்டான காலகட்டங்களில் நிற்கும் வரை நமக்கு பெரிதாக தெரிவது இல்லை. ஆனால் ஏதோ ஒரு காலகட்டத்தில் மனசாட்சி எனும் நீதிபதியின் முன் நாம் நிச்சயம் குற்றவாளிகளாக நிற்க வேண்டியது வரும். அந்த காலகட்டங்களில் நாம் வாதிடுவதற்கு நம்மிடம் எந்த ஒரு கருத்தும் இல்லாமல் போய்விடலாம்.
ஒவ்வொரு மனிதனுக்கும் மனம் என்பது ஒரு கோவிலை போன்றது. நம்முடைய எண்ணங்களாலும் செயல்களாலும் நாம் அந்த கோவிலை எவ்வளவு சுத்தமாக வைத்துக் கொள்கிறோமோ அந்த அளவுக்கு நம் மனதும் (பொருளாதார ரீதியான பற்றாக்குறைகள் இருப்பினும்) நிறைவான ஒரு வாழ்க்கையை நோக்கி நகரத் தொடங்குகிறது. கோவிலை அசுத்தம் செய்துவிட்டு (பொருளாதார ரீதியான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து ) குப்பைகளை சேர்த்துக்கொண்டே போகும்போது ஒரு காலகட்டத்தில் அந்த கோவில் அதன் புனித தன்மையை இழந்து மனக்கோவிலின் தெய்வமான மனசாட்சியின் முன் நாம் மண்டியிட்டு வாழ வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறோம். அப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் நம்முடைய வாழ்க்கை அதன் மகத்துவத்தை இழந்து அத்தமற்றதாய் மாறிப் போகிறது.
மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக கூறப்படும் அறக்கருத்துக்களிலும், முக்தி அடைவதற்காக சொல்லப்படும் சொர்க்கம் போன்ற கருத்துக்களிலும் எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்தாலும், அதனை உறுதிப்படுத்துவதற்கான தகவல்கள் இப்போது வரை இல்லை. எனவே நாம் அனைவரும் நாம் வாழும் காலத்தில் எப்படி வாழ்கிறோம் என்பதே ஒரு முழுமையான வாழ்க்கையே தவிர மரணம் அடைந்த பின் எப்படி வாழ போகிறோம் என்பது இங்கு யாருக்கும் புலப்படாத ஒரு விஷயமாகத்தான் இன்று வரை இருந்து வருகிறது.
யாரும் பார்க்கவில்லை என்றாலும் நாம் செய்யும் தவறுகள் தவறுகளே. தவறு செய்யும் போது பிறர் பார்வையில் இருந்து தப்பி விட்டால் அது நிச்சயம் சரியான செயல்பாடுகளில் சேர்ந்து விடாது. நாம் ஒவ்வொருவரும் உலகத்திற்கு முன் நல்ல மனிதர்களாக வாழ்வதற்கு முன் நம்முடைய மனசாட்சிக்கு கட்டுப்பட்டு அறச்செயல்களுக்கு எதிரான காரியங்களை செய்யாமல் வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் நம்மால் மனசாட்சியின் முன் மண்டியிடாத ஒரு வாழ்க்கையை வாழ முடியும்!
நம்முடைய வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளால், நமக்குள் ஏற்படும் குற்ற உணர்ச்சியை அவ்வளவு எளிதில் கடந்து வர முடியாது. நம்முடைய மனம் எனும் கோயிலையே அழிக்கக்கூடிய வல்லமை இந்த கொடிய குற்ற உணர்ச்சிக்கு மட்டுமே உண்டு. ஒரு முறை தான் மனித வாழ்க்கை, எனவே வாழும் ஒவ்வொரு நாளையும் இந்த சமூகத்திற்கு மிகவும் பயனுள்ள வகையில் வாழ முயற்சி செய்ய வேண்டும்!