
‘நம்முடைய வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் கஷ்டங்களை போக்க ஏதேனும் வழிகள் இருக்கிறதா?’ என்று யோசித்துப் பார்த்தால் கண்டிப்பாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். அதுதான் பிரச்னைகளை எதிர்த்து போராடி ஜெயிப்பதாகும். இதைப் புரிந்துக்கொள்ள ஒரு குட்டி கதையை பார்ப்போம்.
ஒருநாள் கஷ்டங்களால் வாழ்க்கையை வெறுத்த இளைஞன் ஒருவன் ஒரு முனிவரை சந்தித்து கஷ்டங்களை போக்க வழிக்கேட்கிறான். அந்த முனிவரோ வழியை சொல்லாமல் கதையை சொல்கிறார். அந்த கதை என்னவென்றால், ஒரு ஏரியில் நிறைய மீன்கள் இருந்தது. ஒருநாள் அந்த ஏரியில் உள்ள பெரிய மீன் எந்த உணவுமே இல்லாமல் ஒரு சிறிய மீனை சாப்பிட வந்தது.
அப்போது அந்த சிறிய மீன் கேட்டது, ‘நான் உனக்கு என்ன பாவம் செய்தேன். என்னை பார்த்தால் பாவமாக இல்லையா?’ என்று நியாயம் கேட்டது சிறிய மீன். அதற்கு அந்த பெரிய மீன் சொன்னது, ‘உனக்கு பாவம் பார்த்தால் பசியால் நான் இறந்துப் போய்விடுவேன். உனக்கு இப்போது இரண்டே வழிகள்தான் உள்ளது. ஒன்று இங்கிருந்து தப்பித்து ஓடிவிடு அப்படியில்லை என்றால், தோல்வியை ஒப்புக்கொண்டு வாய்க்குள்ளே போய்விடு’ என்று கூறி வாயைப் பிளந்துக் காட்டியது அந்த பெரிய மீன்.
அது வாயை திறந்ததும் கீழே கிடந்த குச்சியை கொண்டு வந்து அதனுடைய வாயில் வைத்து வாயை மூட முடியாதப்படி செய்துவிட்டது சிறிய மீன். இப்படி கதையை சொல்லி முடித்துவிட்டு, ‘இந்தக் கதையில் இருந்து உனக்கு என்ன புரிந்தது?’ என்று முனிவர் கேட்க அதற்கு அந்த இளைஞர் கூறினான், ‘கஷ்டங்களை போக்க இன்னொரு வழிக்கூட இருக்கிறது. அதுதான் பிரச்னைகளை எதிர்த்து போராடுவது’ என்று சொல்லிவிட்டு தன்னம்பிக்கையுடன் சென்றான் அந்த இளைஞன்.
இந்தக் கதையில் சொன்னதுபோல, நம்முடைய கஷ்டங்கள் கண்டு பயப்படாமல் எதிர்த்துப் போராட துணியும்போது அதை சரிசெய்ய ஆயிரம் வழிகள் நமக்கு கிடைக்கும். இதைப் புரிந்துக்கொண்டால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். முயற்சித்துப் பாருங்களேன்.