- சுடர்லெட்சுமி மாரியப்பன்
‘இன்று நீ என்னை தலைகுனிந்து பார்த்தால் நாளை நான் உன்னை தலைநிமிர செய்வேன்’ என்ற புத்தகத்தின் கூற்றுக்கு ஏற்றவாறு நாம் பள்ளி முதல் கல்லூரி வரை புத்தகத்தைக் கையில் தூக்கினால் மட்டுமே நல்ல பணியில் அமர முடியும் என்ற சொல்லும், 'நான்தான் படிக்கல நீயாச்சு நல்ல படிச்சு பெரிய உத்தியோகத்தில் இருக்கனும்' என்ற பல பெற்றோர்களின் கனவும் இந்தப் பிரபஞ்சத்தில் நிறைந்திருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை அல்லவா?
ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி கனவு என்பது ஒன்றே... தனக்குப் பிடித்த நல்ல பணியில் அமர்ந்து நிம்மதியான ஒரு வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவருக்கும் உள்ள தனிப்பட்ட ஆசை. வெற்றியோ தோல்வியோ முயற்சியின் வழியாகத்தான் அடைய முடியும். நம்முடைய திறமைகள் மூலம் பற்பல முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே இறுதியில் நமக்கான இலக்கை அடைய முடியும்.
அந்த வகையில், ஒவ்வொருவருக்கும் தொடக்கப் பள்ளி முதல் கல்லூரி படிப்பு வரை மாணவர் என்ற பருவத்தை முடித்து இளைஞர் என்ற பருவம் தொடங்கும் தருணம் தான் வாழ்க்கையின் முதல்படி. அதன்பின் தன் வாழ்க்கைக்கான சிறந்த பணியைத் தனக்கு பிடித்த வகையில் தேர்ந்தெடுப்பது என்பது மிக முக்கிய முடிவு.
பலர் தங்கள் வாழ்க்கைக்காக வெளியூர் சென்று படிப்பது, அரசுத் தேர்வுகளை எழுதுவது, பணிக்கான நேர்முக தேர்வு, வெளிநாட்டு வேலை என பல முறைகளைக் கையாண்டு பணியில் அமர்கின்றனர். ஆனால், பலரும் பிடித்த வேலையில் இருக்கின்றனரா என்பது கேள்விக்குறியே? தேவைகள் அதிகமாக ஆக சம்பாதிக்க வேண்டும் என்றுதான் குறிக்கோளாக இருக்கின்றனரே தவிர பிடித்த வேலையில் திருப்திகரமாக இருக்கின்றோமா என்றில்லை.
இவ்வாறு ஏற்பட முக்கியக் காரணம் என்ன? தங்கள் கற்றலில் எடுக்கும் முடிவு மற்றும் தங்கள் பணியைத் தேர்வு செய்யும் முறைதான். அதாவது சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணி எந்தப் பணியாக இருந்தாலும் சரி வேலை கிடைத்தால் போதும் என்று சிலர் கிடைத்த பணியில் இறங்கி அதிக மனச்சோர்வு, மனஅழுத்தம், சந்தோஷமின்மை, எரிச்சல், வெறுப்பு என மாட்டிக் கொள்கின்றனர்.
உண்மையில் தாங்கள் என்ன ஆகவேண்டும் என்று ஒரு குறிக்கோள் கொண்டு செயல்பட்டால் அதற்கான வழியில் சிறந்த முறையில் செல்ல முடியும். ஆனால், பலபேர் செய்யும் தவறு எந்த ஒரு குறிக்கோளும் இன்றி கல்லூரி வாழ்க்கையில் கால் வைப்பதுதான். பின் ஏதோ சம்மந்தம் இல்லா பணியில் வேலை செய்கின்றனர். பொதுவாக ஒருவரின் வாழ்க்கை மாற அவரேதான் காரணம் ஆகிறார்.
சிறந்த குறிக்கோள் கொண்டு செல்லும்போது அதற்கான பாதையை மட்டும் தேர்வுசெய்து ஒரே பாதையில் செல்லமுடியும். அதில் எத்தனை தோல்விகள் வந்தாலும் ஒரு நாள் வெற்றிக்கொடியை அடைந்துதான் ஆகவேண்டும். அதோடு மன நிம்மதி, சந்தோஷம், திருப்தியான வாழ்க்கையைப் பெற முடியும். எனவே, திருப்தியான வாழ்க்கையைப் பெற வேண்டும் என்றால் ஒரு குறிக்கோளுடன் பயணிப்பது மிக அவசியம்.