நமக்கு என்னவோ அதையே ஏற்போம்!

happy life tips
Monk under the tree
Published on

நாம் அன்றாடம் தொடங்கும் காரியங்களில் வெற்றியை விட 99 சதவீதம் தோல்விகளே ஏற்படுகின்றன. இத்தகைய மனநிலையில் நாம் மிகவும் மனம் துவண்டு போகிறோம்; வாழ்க்கை மீது ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடுகிறது. நாம் வாழும் வாழ்க்கை நமக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

துறவி ஒருவர் ஒரு பெரிய மர நிழலில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அவர் தியானத்தின் போது வெயில் அவரை தாக்காதவாறு அந்த மரமானது குடை போன்று தன்னுடைய கிளைகளை பரப்பி அவரை காத்து வந்தது. நெடுங்காலங்கள் தவம் புரிந்த பின் தன்னுடைய தவத்தை முடித்துக் கொண்ட துறவி மரத்தை மிகவும் நன்றி உணர்ச்சியுடன் பார்த்தார். 'உன்னுடைய இந்த ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நிழலும் தான் என்னுடைய தவத்தை சிறப்பாக முடிப்பதற்கு ஒரு காரணம்!' என்று மரத்திற்கு நன்றி கூறினார். அவ்வாறு நன்றி கூறிவிட்டு, 'உனக்கு ஏதாவது வேண்டுமானால் கேள்! நான் தருகிறேன்' என்றார்.

அதற்கு அந்த மரமோ, 'நான் நிறைய பூக்களை பூக்கிறேன். ஆனால் அவை அனைத்தும் காயாக மாறுவது இல்லை. அப்படி காயாக மாறினாலும் அவை யாவும்  கனியாக மாறுவதில்லை. இது எனக்கு மிகவும் மனக்குறையாக உள்ளது. எனவே உங்களுடைய தவ வலிமையால் என்னுடைய பூக்கள் அனைத்தையும் காய்களாக மாற்றிவிடும் வல்லமையை தாருங்கள்!' என்று கேட்டது.

உடனே அந்த துறவி சிரித்துக் கொண்டே மரம் கேட்ட வரத்தை கொடுத்தார். மரத்தில் இருந்த பூக்கள் அனைத்தும் சில நாட்களில் பிஞ்சுகளாக மாறத் துவங்கின. அந்த வழி போவோர் வருவோரெல்லாம் பூத்துக் குலுங்கும் மரத்தை பார்த்து மிகவும் சந்தோஷப்பட்டனர். 

சிறிது காலத்தில் பிஞ்சுகள் எல்லாம் காய்களாக மாறத் தொடங்கின. மரம் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தது. ஆனால் அந்த மரத்தினுடைய சந்தோஷம் வெகு நாட்கள் நீடிக்க வில்லை. காய்கள் பெரிதாக பெரிதாக அவற்றின் எடை கூடிக் கொண்டே இருந்தது. மரத்தால் அத்தனை காய்களின் எடையையும் தாங்கிப் பிடிக்க முடியவில்லை. கழுத்தே  முறிந்து விடும் அளவுக்கு கடுமையான வலியை அந்த மரம் அனுபவித்து வந்தது. இத்தகைய வேளையில் ஒரு நாள் திடீரென மழையும் வந்தது. மழை பெய்தவுடன் மரத்தின்  இலைகளில் தங்கியுள்ள நீர்த்துளிகளால் அதன் எடை இன்னும் அதிகமானது. தன்னுடைய கிளை முழுக்க காய்களையும், மழைத்துளிகளையும் சுமந்து கொண்டிருந்த மரம் அதிகப்படியான எடையை தாங்க முடியாததால் திக்கி திணறியது. 

அந்த நேரம் பார்த்து, அந்த வழியாக வந்த துறவி, மழைக்கு ஒதுங்குவதற்காக அந்த மரத்திற்கு அடியில் ஒதுங்கினார். மரத்தைப் பார்த்து, 'நன்றாக இருக்கிறாயா? இப்பொழுது உனக்கு சந்தோசம் தானே?' என்று கேட்டார்.

உடனே மரம் 'ஐயா,  தெரியாமல் நான் உங்களிடம் வரத்தை கேட்டு விட்டேன்! இறைவனின் படைப்பில் எது எப்படி படைக்கப்பட்டதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்வதே புத்திசாலித்தனம் என்பதை நான் புரிந்து கொண்டேன். என்னிடம் பூத்த அத்தனை பூக்களும் காயாக மாறும்போது, அதன் எடையை தாங்கும் சக்தி எனக்கு இல்லை! எனவே இறைவனின் படைப்பின் இயல்பு எதுவோ அதனையே நான் ஏற்றுக் கொள்கிறேன்! அதுவே எனக்கு  மிக்க மகிழ்ச்சி. எனவே தயவு செய்து என்னை பழையமாதிரி மாற்றி விடுங்கள்!' என்று கூறியது.

இதையும் படியுங்கள்:
மனசாட்சியே நம் உண்மையான முகம்!
happy life tips

மரத்தின் மனமாற்றத்தை அறிந்த துறவி அதனை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றினார்.

இந்த மரத்தை போல் தான் நாமும் நம்முடைய வாழ்க்கையில் தொடங்கும் ஒவ்வொரு செயலையும் வெற்றிகரமாக முடிய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் தொடங்குகிறோம். அது சூழலால் சில நேரம் வெற்றியடைந்தும் சில நேரம் வெற்றி அடையாமலும் முடிந்து விடுகிறது. எப்படி இருந்தாலும் நாம் தொடங்கிய ஒரு செயல் வெற்றியடையும் போது நமக்கு மகிழ்ச்சியையும் தோல்வியடையும் போது நமக்கு பயிற்சியையும் விட்டு செல்கிறது என நினைத்து மன திருப்தியுடன் வாழ கற்றுக் கொள்ள வேண்டும்! அப்பொழுதுதான் மீதமுள்ள நம்முடைய வாழ்நாளை நம்மால் மிகவும் சுவாரசியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ முடியும்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com