
முதலில் உங்களை ஒத்த எண்ணம் கொண்டவர்கள் அல்லது உங்களை விட சிறப்பாக இருப்பவர்களிடம் உரையாடலை நிகழ்த்துங்கள். உண்மையில் அது ஆகச் சிறந்த உரையாடலாக அமையப்பெறும். உங்களின் பல எண்ண முடிச்சுக்களை அவிழ்க்க அந்த உரையாடல் ஏதுவாக அமையும்.
ஒரு மனிதன் ஒரு விஷயத்தைப் பற்றி எப்படி சிந்திக்கிறானோ, அதுவே அவன் வாழ்வில் பல மாற்றங்களைக் கொண்டுவர துணையாக அமைகிறது. எதிர் காலத்திற்கு ஏற்றார் போல நமது சிந்தனைகளை உருமாற்றம் செய்து கொண்டால், நிச்சயமாக அது நம்மை சிறப்பாக மாற்றக்கூடும்.
பலதரப்பட்ட மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உண்மையிலேயே அவர்களுடனான உரையாடல்கள், உங்களது குறைகளைக் கண்டறியவும், நீங்கள் எதில் கவனம் செலுத்த வேண்டும் என்பதனையும் சிறப்பாக உணரச் செய்யும்.
நாம் அனைவருமே நம்முடைய இலக்குகளை எட்டிப் பிடிக்க முடியவில்லையே என்று புலம்புகிறோம். அதனால் ஏற்படும் மன உளைச்சல் காரணமாக, நமக்கு பிடித்தமானதாக இருக்கும் ஒரு சிலவற்றைகா கூட கைவிட்டு விடுகிறோம். அந்த வழிகளைக் கண்டு பயம் கொள்ளும் மனம், இவை அனைத்துமே ஏதோ ஒரு கட்டத்தில் நாம் வெற்றி அடைவதற்கான செயல்கள் தான் என்பதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது.
பிறரோடு ஒப்பீடு செய்து நம்முடைய செயல்களின் மீது சந்தேகிக்கிறோம். அச்சந்தேகத்தின் காரணமாக, எந்த செயல்களுமே செய்யாத நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதைப் பற்றிய ஒரு புரிதலை நாம் ஏற்படுத்திக் கொண்டாலே, நம் செயல்களின் முக்கியத்துவம் நமக்கு புலப்படும்.
நம் முன்னேற்றத்திற்காக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சிறிய அடியும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதனை புரிந்து கொள்வோமாக.
எத்தனையோ கோடி மக்கள் எவ்வித முயற்சிகளுமின்றி சராசரியாக வாழ்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஒரு சில முயற்சிகளின் அனுபவங்களை நாம் பெற்றுள்ளோம் என்பதே சிறப்பான விடயம் தான்.
நாம் நம் செயல்களை சிறப்பாக எண்ணவில்லை என்றால், யார் தான் நமக்கான ஊன்றுகோலாக இருப்பார்கள்..
உங்கள் மீது நம்பிக்கை கொண்டு, உங்கள் செயல்களை சந்தேகிக்காமல் தொடர்ந்து செயல்படுங்கள். நிச்சயம் ஒருநாள் அதற்கான பிரதிபலன் கிட்டும்.
பலதரப்பட்ட அனுபவங்களே உங்களை சிறப்பான இடத்தை நோக்கி பயணிக்க தூண்டும். எதுவும் எளிதில் கிடைத்து விட்டால், சுவாரஸ்யம் இருக்காது தானே? உண்மையான அனுபவங்களைப் பெற முயலுங்கள்.