தூணிலும் இருப்பது துரும்பிலும் இருப்பது எது?

Motivation image
Motivation imagepixabay.com

கிழ்ச்சி எங்கேயிருக்கிறது? என்று கேட்பவர்களுக்கு இதுதான் இந்தப் பதில்: தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்என்று சொல்வது கடவுளுக்கு மட்டும் பொருந்துவதில்லை மகிழ்ச்சிக்கும் பொருந்தும்.

ஏன் கடவுளை தூணிலும் இருக்கிறார், துரும்பிலும் இருக்கிறார் என்று கூறுகிறோம்?

கடவுள் என்பவர் நாம் செய்யும் செயலிலே இருக்கிறார், நாம் மற்றவர்களை நடத்தும் விதத்திலேயிருக்கிறார், நம்முள்ளேயே நிறைந்திருக்கிறார் என்பதை உணர்த்தக்கூடிய மாபெரும் தத்துவமே அது.

இது நாம் தேடும் மகிழ்ச்சிக்கும் பொருந்தக்கூடியதே! மகிழ்ச்சி என்பது நம்முள்ளே உள்ளது. நம்மை சுற்றியுள்ளவற்றை நாம் பார்க்கும் விதத்திலுள்ளது. மகிழ்ச்சியை உருவாக்கும் ஆற்றலும் நம்மிடமே இருக்கிறது. பிறகு வெளியிலே அலைந்து அலைந்து மகிழ்ச்சியைத் தேடினால் எப்படி கிடைக்கும்?

நம்முடைய மகிழ்ச்சியை எப்போதும் ஒரு பொருள் மீதோ அல்லது ஒரு நபர் மீதோ வைப்பது மிகவும் தவறாகும். ஒரு நாள் அந்தப் பொருளோ, நபரோ நம் வாழ்வில் இல்லை என்றால், நம்மிடமிருந்த மொத்த மகிழ்ச்சியும் நம்மைவிட்டு போய்விட்டதாக ஒரு மாயபிம்பத்தை நாம் உருவாக்கிக்கொள்வோம்.

நம்முடைய அன்றாட வாழ்வில் சின்ன சின்ன விஷயங்களில்கூட மகிழ்ச்சியை உணரமுடியும். ஆனால், அதை யாரும் பெரிதாகக் கவனிப்பதுமில்லை, அதன் மதிப்பை உணர்வதுமில்லை. காரணம் அது சிறிதாக உள்ளது என்பதாலா? அதனால் அதை ரசிக்க, அனுபவிக்கத் தவறி விடுகிறோமா?

நீங்கள் இனி நன்றாக கவனித்துப் பாருங்களேன். மதிய வேளையில் வெயிலில் அலைந்துவிட்டு வீடு வந்து சேர்ந்ததும் சில்லென்று குளிர்ந்த நீரைக் குடித்துப் பாருங்களேன். அதுவல்லவா ஆனந்தம்!

நமக்கென்று மட்டும் தனியாக நேரம் ஒதுக்கி ஒரு பத்து நிமிடம் 'டீ டைம் மை டைம்’ என்று வைத்துக்கொள்வதுகூட மகிழ்ச்சிதானே!

கோயிலில் பிரசாதம் கொடுக்கும்போது கூட்டத்தின் மத்தியிலே நமக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்கி நிற்கும் தருணத்தில்  அது கிடைத்துவிட்டால், இது ஒரு வித மகிழ்ச்சி.

நண்பர்களுடன் ஒன்றாக சேர்ந்து உணவு சாப்பிடும்போது, கடைசியாக இருக்கும் உருண்டையோ, உணவோ நமக்கு கிடைத்தால்...

நாளைக்கு ஞாயிற்று கிழமை என்று தெரியும்போது இன்று சற்று அதிகமாக தூங்கும் சுகம் இருக்கிறதே! அதை ரசித்ததுண்டா?

வீட்டிலிருந்து கிளம்பும்போது ‘பார்த்து போயிட்டு வா கண்ணு’னு சொல்லும் உறவு...

‘பிரச்னைன்னா சொல்லு; நாங்க இருக்கோம்’னு சொல்கிற நட்பு.

வீட்டிற்கு திரும்பி வரும்போது, வாலாட்டிக்கொண்டே வாசலில் நமக்காக காத்திருக்கும் ஜீவன்.

ரோட்டில் வண்டி ஓட்டிக்கொண்டு செல்லும்போது  முகம் தெரியாத ஒரு நபர் ‘சைட் ஸ்டேன்டை எடுத்துவிட்டு போங்க’ன்னு அக்கறையுடன் சொன்னால், அதுகூட ஒரு குட்டி சந்தோஷம்தான்.

இதையும் படியுங்கள்:
சத்துள்ள சணல் விதைகளைப் பற்றித் தெரியுமா?
Motivation image

இப்போ சொல்லுங்க நம்ம வாழ்க்கையில் மகிழ்ச்சி ஆங்காங்கே சிதறி கிடக்க செய்கிறதுதானே? வாழ்க்கை எப்போதும் இன்பம் நிறைந்ததாக இருக்கும் என்பதும் உண்மையில்லை. துன்பமே தொடரும் என்பதும் சாத்தியமில்லை.

நமக்கு சிறு பிரச்னை வரும்போது அதை பெரிதாக பார்க்கும் நம் மனமானது,  கிடைக்கும் சிறு சந்தோஷத்தை, மகிழ்ச்சியை ஏன் பெரிதாக நினைப்பதில்லை என்பது விந்தையாகவே உள்ளது.

ஆகவே, ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் இன்பங்களை  சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். சிறிது சிறிதாக சேர்க்கப்படும் இன்பங்கள் வாழ்வில் பெரும் மகிழ்ச்சியை கொடுக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com