யார் இந்த தத்துவஞானி பிளேட்டோ..! உலகிற்கு அவர் கூறியதென்ன?

 பிளேட்டோ...
பிளேட்டோ...
Published on

கிரேக்க நாட்டின் ஏதென்ஸ் நகர உயர் குடியில் பிறந்த பிளேட்டோ தன்னுடைய இருபதாவது வயதில் சாக்ரடீசைக் கண்டு அவரது சீடராக மாறியவர். உலகின் தலை சிறந்த தத்துவ ஞானிகளில் ஒருவரும், கணிதவியல் வல்லுனரும்,  அரிஸ்டாட்டிலின் குருவும்தான் பிளேட்டோ (Plato). கிரேக்கத்தில் பல தத்துவஞானிகள் தோன்றியிருந்தாலும் அவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராகவும் மிகவும் புகழ்மிக்க அறிஞராகவும் திகழ்கிறார் பிளேட்டோ. இவர்  எழுதிய "குடியரசு" எனும் நூல்  உலகப்புகழ்பெற்றது. இதை பல அரசியல்வாதிகள், மற்றும்  ஆட்சியாளர்கள்   பின்பற்றி பலவற்றை  சாதித்துள்ளனர்.

ஒரு நாட்டை ஆள்கிறவருக்கு நல்ல திறமையும், பயிற்சியும் வேண்டும். அதேபோல ஒரு நாட்டை ஆள்வதற்கு ஆட்சியாளர்கள், அவர்களின் உதவியாளர்கள், ராணுவம், தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவுகளில் ஆட்கள் இருக்க வேண்டும் என்று முதன்முதலாக கூறியவர் பிளேட்டோதான். அரசின் ஒவ்வொரு பிரிவிலும் தணிக்கை முறை வேண்டும் என்று கூறியவரும் அவர்தான்.

தத்துவ அறிஞரான பிளேட்டோவின் புகழ் பெற்ற கருத்துகள்...

"நமது கண்களால் நாம் பார்க்கும் அனைத்துப் பொருள்களும் நிழல்களைப் போன்ற வெறும் தோற்றங்களே. அவைகள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு அடிப்படையாகக் கருத்து உள்ளது".

பிளேட்டோவின் எழுத்துக்கள் அனைத்தும் உரையாடல் வடிவிலானது. அதில் அவர் தனி மனித முன்னேற்றம் மற்றும் மனத்தின் செல்வாக்கு ஆகிய இரண்டிற்கும் முக்கியமான இடங்களைக் கொடுத்துள்ளார். அவற்றின் தொகுப்பில் சில இங்கே…

காணப்படும் உலகம் வேறு. அறியப்படும் உலகம் வேறு.

கற்காமல் இருப்பதைவிட ஒருவன் பிறக்காமல் இருப்பதே மேல், ஏனெனில் ஒருவனின் அறியாமையேதான் சகலவிதமான துன்பத்திற்கும் அடிப்படையாக உள்ளது.

உலகத்தில் நல்லவர்கள் வெகு சிலரே. தீயவர்களும் அப்படியே உலகத்தில் உள்ள பெரும்பாலானவர்கள் இரண்டிற்கும் மத்தியில் ஊசலாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மனித மனங்களை ஆளும் திறமை பெற்றது பேச்சுக் கலை.

ஆடம்பரமான வாழ்க்கை அடிக்கடி  மருத்துவரை வீட்டிற்கு வரவழைக்கும்.

அறிவு என்றால் அது அபிப்பிராயம் இல்லை. அபிப்பிராயம் என்பது நிலைக்கு ஏற்ப மாறக்கூடியது. ஆனால் அறிவு என்பதோ எந்தச் சந்தர்ப்பத்திலும் மாறாது இருப்பது.

நீதியுடன் நடந்து கொள்ளும் மனிதன் நிம்மதியாகவும், அநீதியாக நடந்து கொள்ளும் மனிதன் கவலையுடனும் வாழ்கிறான்.

அறிவின் முன்னே அறியாமை தலை வணங்குகிறது.

எந்த மனிதனும் தான் பிறரால் ஏமாற்றப்படுவதை விரும்புவதில்லை.

ஒவ்வொரு மனிதனும் துணிச்சல் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்; கண்ணியம் உள்ளவனாகவும் இருக்க வேண்டும்.

அரசியல் வேண்டாமென்று நீங்கள் விலகி நின்றால், யாரை வெறுக்கிறீர்களோ அவருடைய ஆட்சியின் கீழ் வாழ நேரிடும்.

பொதுவாக சரியான பதிலை விட சரியான கேள்வி மிகவும் முக்கியமானது. மனித நடத்தை மூன்று முக்கிய மூலங்களிலிருந்து ஊற்றெடுக்கின்றது: ஆசை, உணர்ச்சி மற்றும் அறிவு.

ஒரே நேரத்தில் மிகுந்த செல்வந்தராகவும் நல்லவராகவும் இருப்பது சாத்தியமில்லை.

வறுமை வருவது செல்வம் குறைவதால் அல்ல, ஆசைகள் அதிகரிப்பதால்தான். அதிகாரத்தை விரும்பாதவனே அதை அடையத் தகுதியானவன்.

எவ்வளவு மெதுவாக இருந்தாலும், தொடர்ந்து முன்னேறும் எவரையும் ஒருபோதும் நம்பிக்கை இழக்கச் செய்யாதீர்கள். அந்த ஒருவர் நீங்களே என்றாலும்.

அழகு என்பது பார்ப்பவரின் கண்களில் உள்ளது. ஒரு கெட்ட நண்பனை விட ஒரு நல்ல எதிரியே மேலானவன்.

தனக்கு என்ன தெரியாது என்பதை அறிந்தவனே புத்திசாலி. கற்றலின் முதல் படி மனிதனின் அகந்தையை அழிப்பதாகும். கட்டாயத்தினால் பெறப்பட்ட அறிவு மனதில் பதியாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com