கண்ணகி ஏன் கோவலனை எரிக்கவில்லை?

motivation
motivationImage credit - commons.wikimedia.org

-மரிய சாரா

களாய், சகோதரியாய், மனைவியாய், மருமகளாய், தாயாய் தியாகங்கள் பல செய்து வலிமையுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எம் பெண் இனமே முதலில் வாழ்த்துகள். அனைத்திலும் நாம் இன்று சாதித்துக்கொண்டிருக்கிறோம். இருந்தாலும் நிரப்பப்படாத வெற்றிடம் இருக்கத்தான் செய்கிறது. பெண் என்பவள் இன்னும் அனுதினமும் வேள்விக்குள் இறங்கிக்கொண்டுதான் இருக்கிறாள்.

இறைவன் படைப்பில் ஆணும் பெண்ணும் சமமென அவன் படைத்தாலும் ஆண் எனும் ஆதிக்கச் சமூகம் பெண்ணை அதற்கு கீழ் என்று பணிந்து நடக்க பல வழிகளை வகுத்துள்ளது. அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பொறுமை, தன்னடக்கம், பாசம் என்பதெல்லாம் பெண்ணிற்கானவை. வீரம், திமிர், தலைமைத்துவம், ஆளுமை என்பவையெல்லாம் ஆணுக்குரியவை. இதுதானே ஆதிகாலம் முதல் நடைமுறையில் இருக்கும் எழுதப்படாத சட்டங்கள்?

ராமனை பெரிதாய்க் கொண்டாடும் இந்தச் சமுதாயம், கற்புக்கரசியாய் சீதையையும் கொண்டாடுகிறது. ஆனால், சுயநலமின்றி கணவனின் நலனே தனது நலனென வாழ்ந்த சீதையை, ஊராருக்கு அவள் கறைபடியாதவள் என நிரூபிக்க தீயில் இறங்கச் சொல்கிறார் ராமர். தன் மக்கள்தான் தனக்கு முக்கியம் என நினைப்பவன் நல்ல அரசன்தான். ஆனால், தனது மனைவியின் மானத்தைக் காக்கும் கடமையும் ஒரு கணவனாய் ராமனுக்கு இருந்தது. ராமாயணத்தில் நல்ல அரசனாய் ராமன் வென்றுவிட்டார். ஆனால் நல்ல கணவனாய் தோற்றுவிட்டாரே?

கண்ணகியின் கற்பைப் போற்ற எழுதப்பட்ட காவியம் சிலப்பதிகாரம். அவள் கற்புக்கரசி என நிரூபிக்க கணவன் தனது கற்பைக் காக்கவில்லையென்றாலும் அவனை ஏற்றுக்கொள்வதாய்தானே எழுதப்பட்டுள்ளது. கற்பின் அரசி, கற்பு நெறி தவறிய கணவனுக்காக மதுரையை எரித்தாளாம். உண்மையில் நெறி தவறி திரும்பி வந்தது கோவலன்தானே? ஆனால், கண்ணகி எரித்தது என்னவோ மதுரையை! கோவலனை அல்லவே! பெண்ணுக்கு மட்டுமே கற்பு உண்டு… ஆணுக்கு இல்லை என்பது போல்தானே உள்ளது சிலப்பதிகார கதை?

பஞ்சபாண்டவர்களான 5 சகோதரர்களுக்கு ஒரே மனைவி! அவளை சபையில் வைத்து சூதாடி இழக்கின்றனர். தருமர் தோற்றதற்காக, துரியோதனனால் அவமானம் நிகழ்த்தப்பட்டது என்னவோ பாஞ்சாலிக்குதான். அந்த அவமானத்திற்காக, பாஞ்சாலிக்காக நிகழ்ந்தது பாரதப் போர். உண்மையில் மனைவியை வைத்து விளையாட அவள் என்ன உயிரற்ற பொருளா? பாஞ்சாலி தான் தன்னை பனையப் பொருளாய் வைத்து விளையாடி தோற்ற தனது கணவனுக்கு எதிராக போர் தொடுத்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
தாமரை இலைத் தண்ணீரும், பஞ்சு திரியும்!
motivation

இப்படி இதிகாசங்கள், காவியங்கள், புராணங்கள் என ஆண்களால் எழுதப்பட்ட பலவற்றில் நாம் ஆராய்ந்து பார்த்தால், உண்மையில் ஆண்மை உயர்த்தப்பட்டு, பெண்மை வஞ்சப்புகழ்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது தெளிவாய் தெரியும். ராணி லட்சுமிபாய், சாவித்திரி பாய் பூலே, சரோஜினி நாய்டு, விஜய லட்சுமி பண்டிட், கேப்டன் பிரேம் மாத்தூர், கல்பனா சாவ்லா, இந்திரா காந்தி, எம்.எஸ் சுப்புலட்சுமி, அன்னை தெரசா இப்படி பலர் இந்த ஆணாதிக்கக் கோட்பாடுகளை பற்றிக்கொண்டு இருக்காமல் தங்களுக்கான சரித்திரத்தை மிகத் திடமாய் எழுதியவர்கள்தான்.

இவர்களைப்போல ஒவ்வொரு பெண்ணுமே தனக்கான சரித்திரத்தை எழுதும் திறன் பெற்றவர்கள்தான். அவர்களுக்கு தேவைப்படுவது ஒரே ஒரு உந்துசக்தி மட்டுமே. தான் யாருக்கும் சமமும் இல்லை, உயர்ந்தவளும் இல்லை, தாழ்ந்தவளும் இல்லை. தான் தனிப்பெரும் சக்தி என உணரும் அந்த உந்துசக்திதான் அது. பெண்ணே நீ உணர்வாய், எழுதுவாய் உன் கைகளால் உன் சரித்திரத்தை!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com