நாம் வாழும் இந்த சமூகத்தில் படைப்பாளர்களுக்கு மிகப்பெரிய முக்கியத்துவம் உண்டு. அதிலும் குறிப்பாக எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் சமூகத்தில் உள்ள மற்ற பொறுப்புகளை வகிப்பவர்களை விட மிகுந்த பொறுப்பும் சமூக அக்கறையும் உண்டு. ஏனெனில் ஒரு சமூகத்தின் அவலங்களை விமர்சிப்பதிலும் புதுமைகளை படைப்பதிலும் பிரச்சினைகளுக்கு தீர்வை தேடி கண்டறிவதிலும் படைப்பாளிகள் எப்பொழுதுமே ஒரு முக்கியத்துவம் பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
நாட்டின் முக்கிய பிரதிநிதிகளுக்கும், நாட்டில் வாழும் எளிய மக்களுக்கும் தேவையான வாழ்வியல் நெறிமுறைகளை வகுத்தெடுப்பதில் எழுத்தாளர்களுக்கு மாபெரும் பங்கு உண்டு. ஒவ்வொரு காலகட்டத்திலும் அங்கு வாழும் பல்வேறு மனிதர்களில் வாழ்வியல் முறைகளையும் அவர்கள் எதிர்கொள்ளும் சிக்கலையும் மொத்த சமூகத்துக்கும் வெளிச்சம் போட்டு காட்டும் மாபெரும் பணியை அந்தந்த கால கட்ட கவிஞர்களும் எழுத்தாளர்களும் கச்சிதமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் நம்முடைய சமூகத்தில் உள்ள மாபெரும் படைப்புகள் எல்லாம் எளிய மக்களின் வாழ்வியல் முறைகளை அடிப்படையாகக் கொண்டே பிறக்கின்றன என்று கூட சொல்லலாம்.
கம்பராமாயணத்திலே பல்வேறு எளிய மக்களின் புழக்கத்தில் உள்ள சொற்களை தன்னுடைய மாபெரும் படைப்பில் கொண்டு வந்து சேர்த்தவர் கம்பர். அவ்வாறு சேர்க்கப்பட்ட ஒரு சொல்லை கேட்ட மற்ற புலவர்கள், 'இப்படி ஒரு சொல்லே உலகத்தில் இல்லை, நீங்கள் சுவை நயத்தை மேம்படுத்துவதற்காக வேண்டும் என்றே இந்த சொல்லை சேர்த்துள்ளீர்கள்' என்று கூறி ஒரு விவாதம் எழுந்ததாம். ஆனால் கம்பரோ, 'இல்லை, இந்த சொல்லை நானாக பயன்படுத்தவில்லை; மக்களின் புழக்கத்தில் இருந்து எடுத்தே நான் கையாண்டுள்ளேன்' என்று கூற, அந்த சொல்லை பேசும் மக்கள் யார் என்று அறிவதற்காக நெடுநாட்கள் தேடி அலைந்தார்களாம்! இறுதியாக அன்றைய காலகட்டங்களில் குடிசையில் நெல் புடைத்துக் கொண்டிருந்த ஒரு மூதாட்டியின் வாயிலிருந்து அந்த சொல் வெளிப்பட்டதை அறிந்து கொண்டார்களாம்! இவ்வாறாக மக்களின் வாழ்வியலை தாங்கிப் பிடிப்பதற்காக கம்பர் போன்ற மாபெரும் புலவர்கள் சொல் தேடி அலைந்த கதைகள் எல்லாம் நம்முடைய இலக்கியத்தில் நிறைய உண்டு.
கம்பருக்கு அடுத்தபடியாக நம்முடைய இலக்கியத்தில் மாபெரும் ஆளுமையாக போற்றப்பட வேண்டியவர் திருவள்ளுவர். சுருங்க சொல்லி விளங்க வைப்பதில் திருவள்ளுவருக்கு நிகரான ஒரு படைப்பாளி இந்த உலகத்திலே இல்லை என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு மனிதர்களின் அத்தனை கோணங்களையும் அலசி ஆராய்ந்து குறுக தரித்த குரலாக வாழ்வியலை எளிமைப்படுத்திக் கூறியவர் திருவள்ளுவர்.
எனவே இன்றைய காலகட்டங்களில் எழுத்தாணியை கையில் எடுத்துக்கொண்டு அமர்ந்திருக்கும் நம் அனைவருக்கும் ஒரு மிகப்பெரிய சமூகப் பொறுப்பு உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்! நம்முடைய எழுத்துக்கள் சமூகத்தின் அவலங்களை சுட்டிக் காட்டுவதோடு இல்லாமல் சமூகத்தில் மாற்றங்களை நோக்கியதாக இருக்க வேண்டும்.
படைப்புகள் என்பது தனி மனிதனின் உள்ளுணர்வினால் மட்டுமே உருவாகவில்லை, இந்த சமூகம் நமக்கு முன் எத்தகைய காட்சிகளாக விழுகிறதோ அதை பொறுத்தே ஒவ்வொரு மனிதனின் படைப்புகளும் வெளி வருகிறது. இன்றைய காலகட்டங்களில் எழுத்தாளர்களாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் 'நான் ஏன் எழுத வேண்டும்?' என்ற ஒரு கேள்வி அடிக்கடி வரலாம்! நான் பார்த்த வியந்த ஒரு புத்தகத்தில் அதற்கான விடை இருந்தது. 'அழுத்திக் கொல்கிற உப்பு சப்பற்ற வாழ்க்கையில் ஒளியை பாய்ச்சுவதற்காக நான் எழுதுகிறேன்' என்பதே அது.
இன்றும் கூட நம்முடைய அன்றாட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறோம். அதிலிருந்து மீண்டு வருவதற்கு நமக்கே பல நேரங்களில் பல ஆலோசனைகள் தேவைப்படுகிறது. இதைத் தாண்டி எளிமையான சிந்தனைகளால் மக்களையும் தேற்ற வேண்டிய அவசியமும் உள்ளது. எனவே ஒரு படைப்பாளி என்பவர் பலதரப்பட்ட மக்களை சந்திப்பவராக இருக்க வேண்டும். அவர்களின் வாழ்வியலை ஆராயக்கூடிய மனப்பக்குவமும், முதிர்ச்சியான அறிவும் கொண்டவராக இருக்க வேண்டும்! எப்படி இருப்பினும் ஒரு எழுத்தாளரின் இலக்குகள் சுபிட்சமான வாழ்வியலை நோக்கிய சமூக மாற்றத்தை கொண்டதாக இருக்க வேண்டும்! இத்தகைய மேம்பட்ட சிந்தனைகளால் மட்டுமே எழுத்துலகில் தானும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு மற்றவர்களின் வாழ்க்கையிலும் ஒளியை பாய்ச்சும் ஒரு மாபெரும் ஆளுமையாக வலம் வர முடியும்!