நாம் ஒவ்வொருவரும் நாம் வாழும் வாழ்கையில் முன்னேற துடித்துக் கொண்டுதான் இருக்கின்றோம். ஆனாலும் நம்மில் பலருக்கு அது எட்டாக்கனியாகவே இருக்கிறது. இதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி நாம் அறிந்துகொண்டால் நாமும் தொடர்ந்து பல வெற்றிகளைக் குவிக்கமுடியும் என்பது உறுதி.
வாழ்க்கையில் முன்னேறவில்லையே என்று நினைப்பவர்கள் முதலில் முன்னேறும் ஆசை தங்களுக்கு இருக்கிறதா என்று தங்களிடமே கேட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். பலர் தற்போது செய்யும் வேலையே போதும் என்று நினைப்பவர்கள்தான்.
தங்களையே சரியாக எடை போட முடியாதவர்கள்தான் வாழ்க்கையில் தோல்வியடைகிறார்கள். உங்களுடைய நல்ல குணம், கெட்ட குணம் இரண்டையும் உண்மையாக உணர்ந்து சீர்தூக்கிப் பார்க்கும்போது உங்கள் செயல்திறன் பன்மடங்கு அதிகமாகிறது.
உங்கள் வாழ்க்கையே உங்களுக்கு வெறுத்துவிட்டது போலத் தோன்றுகிறதா? தவறு வேறு யாரிடமும் இல்லை. எல்லாவற்றுக்கும் காரணம் நீங்கள்தான். வேறு ஒருவரைப் பற்றி உங்களை எழுதச் சொன்னால் எப்படி விருப்பு வெறுப்பு இல்லாமல் எழுதுவீர்களோ, அப்படி எடை போட்டு உங்களைப் பற்றி நீங்களே எழுதுங்கள். சில மணி நேரம் கழித்து நீங்கள் எழுதியதைப் படித்துப் பாருங்கள். நீங்களே இது வரை தெரிந்து வைத்திராத ஒரு மனிதரைப் பார்ப்பீர்கள். உங்களுக்கு உங்களது நிறையும், குறைகளும் துல்லியமாகத் தெரியும். குறைகளைக் கழியுங்கள். நிறைகளைக் கூட்டுங்கள். உற்சாகம் ததும்பும் ஒரு புதிய மனிதனாக நீங்கள் உருவெடுத்து விடுவீர்கள். இது வருங்காலத்தை பற்றிய சந்தேகங்களைக் குறைக்க வெகுவாக உதவும்.
மனக்குறையும், மனம் சம்பந்தமான பிரச்னைகளையும் கொண்டவர்கள் தங்களைப் பற்றிய குறைவான அபிப்பிராயம் கொண்டவர்களாக இருப்பார்கள் என்கிறார்கள் மனோதத்துவ நிபுணர்கள். அலைபாயும் மனதால் செயலில் கவனம் செலுத்த முடியாது. நம்முடைய செயல் முழுமையாக நிறைவடைய மனதை அமைதிப்படுத்துவது இன்றியாமையாதது.
வாழ்க்கையில் உங்களுக்கு என்று ஒரு குறிக்கோள் வேண்டும். அதை நோக்கி நகர்ந்து செல்ல வேண்டும். உடனே உங்களது குறிக்கோள் நிறைவேறாது. கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அதை அடையமுடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வாழ்க்கையில் முன்னேற்றம் காணவேண்டும் என்று நினைப்பவர்களிடம் இருக்கவேண்டிய ஒரு அம்சம் நகைச்சுவை உணர்வு. உங்கள் செயல்களைக் கண்டு உங்களால் சிரித்துவிட்டு கடந்துபோகும் பக்குவம் உங்களிடம் இருந்தால் உங்களை நீங்கள் நன்றாக புரிந்துகொண்டீர்கள் என்று அர்த்தம்.
முயற்சித்து பார்ப்பதில் ஒரு நன்மை உண்டு. இது நம்மால் முடியாது என்பது புரிந்துவிடும். ஒரு விஷயத்திற்காக முயற்சிப்பதுதான் முறையானது. ஆனால், அது தொடர்ந்து உங்களுக்கு தோல்விகளைத் தந்தால், தவறு உங்களிடம்தான். அந்த முயற்சியை நீங்கள் மறுபரிசீலனை செய்யவேண்டும். முடியாத பட்சத்தில் அதை கைவிட்டு விடுவது நல்லது.
வெற்றிகரமான வாழ்க்கைக்கு வேண்டியது கடுமையான உழைப்பு. அதற்கு நீங்கள் தயாரா? முன்னேறியவர்களில் முக்கால்வாசிப் பேர் கடுமையான உழைப்பாளிகள்தான். முன்னேற வேண்டும் என்ற உள்ளுணர்வும், கடுமையான உழைப்பும்கொண்டவன் முன்னேறாமல் இருக்கமுடியாது.
தன்னைப் புரிந்துகொண்ட பின் வாழ்க்கையைக் கண்டு அஞ்ச வேண்டியது இல்லை. தாழ்வு மனப்பான்மைதான் முன்னேற்றத்திற்கு முதல் முட்டுக்கட்டை. அதை முதலில் தகர்த்தெறியுங்கள்.
எந்த ஒரு கடினமான சூழலை எதிர்கொள்ள வேண்டியிருந்தாலும் நாம் நாமாக இருப்பது மிகவும் அவசியம். நாம் எதிர்கொள்ளும் கடினமான சூழல் நம்மை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லவே வருகிறது என்பதை உணரும்போது நம்மில் நிலையான வளர்ச்சி எப்போதும் இருக்கும். தொடர்ச்சியாக பல வெற்றிகளைக் குவிக்கவும் முடியும்.