"உச்சியில் ஏறுவதைத் தொடருங்கள். நீங்கள் தேர்ந்தெடுப்பதைச் செய்ய உங்களால் முடியும், நீங்கள் யாரென்று உணர்ந்தும், நம்மால் முடியும் வலிமையையும் தாண்டி வேலை செய்யும் மனவிருப்பமும் கொண்டிருந்தால். - Ella Wheeler Wilcox. அமெரிக்க எழுத்தாளர் மற்றும் கவிஞர்.
வெற்றி என்பது அவ்வளவு எளிதில் வருவது அல்ல. அதற்குத் தேவையான மனவலிமையுடன் மனவிருப்பமும் இருந்தால் மட்டுமே ஒருவரால் வெற்றியை நோக்கிச் செல்ல முடியும். வெறுமனே வெற்றி வேண்டுமென்று கனவு கண்டு கொண்டு இருந்தால் மட்டும் போதாது. நமக்கானதை தேர்வு செய்து அந்தக் கனவை நிஜமாக்கும் செயல்முறைகளை அறிந்து அதைப் பின்பற்ற வேண்டும்.
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஹரி எனும் இளைஞருக்கு வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருந்தவர். படித்தது இன்ஜினியரிங் என்பதால் அதை சார்ந்து கணிணியை அசெம்பிள் செய்வதில் ஆர்வம் காட்டினார். மகன் படிப்பில் கவனம் செலுத்தாமல் இரவு பகல் பாராமல் எதையோ செய்து கொண்டிருக்கிறானே என்ற கவலை பெற்றோருக்கு இருப்பினும் தங்கள் மகன் எதை செய்தாலும் அதில் ஏதோ ஒரு மதிப்பு மிக்க விஷயம் இருக்கும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உண்டு என்பதால் மகனின் செயல்களை ஊக்கப்படுத்தவே விரும்பினர். ஹரி கடைசியில் வெற்றி பெற்றார்.
பல கட்டங்கள் தாண்டி புதுமையான கணினியை வடிவமைத்தார். அவர் சும்மா இருக்கவில்லை. உச்சியில் ஏற விரும்பினார். தன்னுடைய படைப்பை வெளி உலகத்துக்கு அறிமுகப்படுத்த வேண்டுமே? யாரிடம் செல்வது என யோசித்தபோது அவர் நினைவில் வந்தவர் அவரின் கல்லூரி தாளாளர்தான். ஏனெனில் இதுபோன்ற மாணவர்களின் முயற்சிகளுக்கு பெரும் ஆதரவாக இருப்பவர் அந்த தாளாளர் என்பதை அனைவரும் அறிவார்கள்.
நேராக அவரிடம் சென்றார் ஹரி. தான் வடிவமைத்த கணினியை பற்றி கூறி இதை நம்முடைய கல்லூரியில் பயன்படுத்திக் கொண்டால் இன்னும் எனக்கு பெருமை என்கிறார். கல்லூரி தாளாளருக்கோ மிகவும் வியப்பு. தன் கல்லூரியில் படிக்கும் மாணவருக்கு இவ்வளவு பொறுப்பு மற்றும் கண்டுபிடிக்கும் திறனா என்று. அந்த கணினியை பற்றிய விபரங்களைப் பார்த்தவர் ஆச்சரியப்பட்டு ஹரியிடம் கணினி ஒன்றுக்கு ஆர்டர் தந்தார்.
அந்த கணினி உண்மையில் ஹரி கூறியது போலவே செயல்பாடுகளில் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தது. தாளாளருக்கு ஆச்சரியம். ஹரியின் சுறுசுறுப்பையும், செயலையும், ஆர்வத்தையும் பார்த்த தாளாளர் இந்த இளைஞரை ஊக்கப்படுத்தினால் நம்முடைய கல்லூரியில் இருந்து இன்னொரு பில்கேட்ஸ் கூட உருவாக வாய்ப்புண்டு என்று அந்த மாணவருக்கு தேவையான சலுகைகளை வழங்கினார். மேலும் அந்த கணினி வடிவமைப்புக்கான உதவிகள் மற்றும் கணினி ஆர்டர்கள் என கணினியை பிரபலப்படுத்தினார் .
ஹரி இன்று வெற்றிகரமான கணினி விற்பனையாளராக வெற்றி பெற்ற இளைஞராக வலம் வருகிறார். ஹரியின் வெற்றிக்கு கிடைத்த இரண்டு வரங்கள் அவருடைய செயலுக்கு ஆதரவு தந்த பெற்றோர் மற்றும் கல்லூரி நிர்வாகம்.
தன் திறமை எதுவென்று அறிந்து தேர்ந்தெடுத்து அதில் விருப்பம் கொண்டு விடாமுயற்சியுடன் வெற்றிக் கொடியை பறக்க விட்ட ஹரி போல நாம் தேர்ந் தெடுப்பதைச் செய்ய நம்மாலும் முடியும் என்ற நம்பிக்கையுடன் வேலை செய்யும் மனவிருப்பமும் கொண்டு வெற்றி இலக்கை அடைவோம்.