வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்ல முடியாது!

Motivation articles
Motivation articlesImage credit - pixabay
Published on

காயங்கள் இல்லாமல் நம்மால் கனவு காணமுடியும். ஆனால் வலிகள் இல்லாமல் வாழ்க்கையை வெல்வது கடினம். வாழ்க்கை என்பது அழகானது அதை ரசிக்க தெரிந்தவர்களுக்கு. வலிகளையும் தோல்விகளையும் சந்திக்காமல் இங்கு உயர்ந்தவர்கள் யாருமில்லை. வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. ஆனால் எனக்கு மட்டும்தான்  வலிகளே வாழ்க்கையாக உள்ளது என்று புலம்புவர்கள் சிலர். ஆங்கிலத்தில் No pain No gain என்று ஒரு பழமொழி உண்டு. வலிகள் இல்லாமல் வாழ்க்கையில் வெற்றிபெற முடியாது.

எதிர்பார்ப்புகளுடன் துவங்கும் ஒவ்வொரு நாள் காலையும் நம்பிக்கையுடன் இரவில் உறங்கச் செல்கிறது. வாழ்வில் வெற்றி பெறவேண்டும் என்றால் வீட்டில் உட்கார்ந்து கனவு கண்டால் மட்டும் போதாது. வெளியில் வந்து செயலில் இறங்க வேண்டும். தடைகளை உடைத்து, நம்பிக்கையை விதைத்து செயல்பட வெற்றி கிடைக்கும். 

தொட முடியாத உயரத்தில் நம் கனவுகள் இருந்தாலும் நம்பிக்கையுடன் போராடி விட வெற்றிக்கனியை எளிதில் பறித்து விடலாம். பெரும் சாதனையாளர்களின் வெற்றி அவர்கள் தாண்டி வந்த தோல்விகளாலும், வலிகளாலும்தான். விதைகள் கீழ் நோக்கி எறியப்பட்டால்தான் விருட்சங்கள் மேல் நோக்கி வளரும். 

விதைகள் மண்ணைப் பிளந்து கொண்டு மேல் எழும்பி வருவது போல் வாழ்வில் போராடி, தோல்விகளையும் வலிகளையும் தாண்டி வந்தால்தான் வெற்றிகிட்டும். வலிகள், அவமானங்கள், கஷ்டங்கள் கற்றுக் கொடுக்கும் பாடம் மிகவும் மதிப்பு மிக்கது. கடந்து வந்த, எதிர்கொண்ட தோல்விகள் எதனால் ஏற்பட்டது என்று சிந்தித்து அதை தவிர்க்க முயன்றாலே வெற்றி நிச்சயம்.

வாழ்க்கை என்பது நம் ரசனைக்கேற்ப ரசித்து வாழ வேண்டியது. ஏதோ ஒன்று என்று வாழ்ந்து சாகாமல் இப்படித்தான் வாழ வேண்டும் என்றெண்ணி முயற்சித்து எதிர்ப்புகளையும், இடர்களையும், தோல்விகளையும், வலிகளையும் சந்தித்து போராடி வெற்றி பெறுவதே நாம் சிறப்பாக  வாழ்ந்ததற்கான அர்த்தமாகும்.

வலிகள் இல்லாமல் உயர்வு இல்லை. வியர்வை சிந்தாமல் வெற்றியில்லை. முயற்சிகள் எடுத்து வாய்ப்பை உருவாக்கி, கிடைத்த வாய்ப்பை போராடி தக்க வைத்துக் கொண்டு முன்னேற தன்னம்பிக்கையும், தைரியமும் அவசியம். 

இதையும் படியுங்கள்:
நிகழ்காலத்திலேயே இருந்தால் மகிழ்ச்சி நிலைக்கும்!
Motivation articles

யாருடைய எதிர்மறைச் சொற்களாலும், கண்டனங் களாலும் துவண்டு விடாமல் முன்னோக்கி செல்ல வேண்டும். வலிகள் இல்லா வாழ்க்கைக்கு  சுயவிமர்சனம் மிகவும் அவசியம். நம் தவறுகளை நியாயப்படுத்த முயற்சிக்காமல் எங்கு தவறு நடந்தது, அதை எப்படி சரி செய்வது, அடுத்த முறை அது நடக்காமல் எப்படி பார்த்துக் கொள்வது என்று யோசித்து செயல்படுவது முக்கியம்.

சுயவிமர்சனம் என்ற பெயரில் குற்ற உணர்ச்சியை சுமந்து கொண்டு அதில் மூழ்கி விடாமல் இருப்பது அதைவிட முக்கியம். வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என்றால் நம்மைச் சுற்றியுள்ள அசௌகரியங்களை நமக்கு ஏற்ற மாதிரி மாற்றிக் கொள்வதும், மாற்ற முடியவில்லை என்றால் எதிர்த்து போராடி வெற்றி பெறுவதும்தான் வழி.

வாழ்க்கையில் நாம் திட்டமிட்டதுபோல் எல்லாமே நடக்குமா என்றால் பதில் இல்லை. ஆனால் எதையுமே திட்டமிடவில்லை என்றால் சரியாக நடக்காது. வலிகள் நமக்கு ஏராளமான பாடங்களை கற்றுத்தரும். வாழ்வில் ஜெயிப்பதற்கான வழிகளை காட்டிக் கொடுக்கும். அந்த வழிகளைத் தேடி பயணம் செய்வோம். வலிகள் இல்லா வாழ்க்கையை வாழ்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com