உங்களிடம் இருப்பதை நீங்கள் உணர்வதில்லை!

Motivation article
Motivation articleImage credit - pixabay
Published on

ப்போதும் அடுத்தவர்களைப் பார்த்து, 'அதுபோல இல்லையே' என்று எங்கும் பலருக்குத் தங்களிடம் இருக்கும் சிறப்புகளும் வசதிகளும் தெரிவதில்லை. 'நாம் வசதியாக இல்லையே' என்று பணம் வைத்திருப் பவர்களைப் பார்த்து ஏங்குவார்கள் பலர். தங்களிடம் இருக்கும் வசதிகளை அவர்கள் உணர்வதில்லை. கீழ்க்காணும் விஷயங்கள் உங்களிடம் இருந்தால், நீங்களும் வசதியானவர்தான்! என்பதை இப்பதிவை படித்தால் நீங்கள் உணர்வீர்கள்.

உங்களுக்கே உங்களுக்கென்று செலவழிக்க நிறைய நேரம் உங்களிடம் இருக்கிறதா? அந்த நேரத்தைப் பயன்படுத்தி உங்கள் வாழ்க்கையை உங்களால் உயர்வாக மாற்றிக்கொள்ள முடியுமா? அப்படியானால் நீங்களும் வசதியானவர்தான்.

ஆரோக்கியமாகவும் உடல் வலிமையுடனும் இருக்கிறீர்களா? இரவில் வெறும் தரையில் படுத்தாலும் தூக்கம் வந்து நிம்மதியாகத் தூங்கி மறுநாள் காலை உற்சாகமாக எழுகிறீர்களா? இந்த வசதி நிறைய பேரிடம் இல்லை. கவலை, பயம். மன அழுத்தம், குடும்பச்சூழல், வேலை தரும் மனஉளைச்சல் என்று பல காரணங்களால் தூக்கமின்றிப் பலர் தவிக்கிறார்கள்.

எளிமையாக இருந்தாலும், குறைந்தபட்ச வசதிகளுடன் இருந்தாலும், பாதுகாப்பாக வசிப்பதற்கு வீடு இருக்கிறதா? பணம் குறைவாக இருந்தாலும், அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள யாரிடமும் கடன் வாங்க வேண்டிய சூழல் இல்லாமல் இருக்கிறதா? இதெல்லாம்கூட நிறைய பேரிடம் இல்லை.

காரணமே இல்லாமல் உங்களை நேசிக்கும் குடும்ப உறவுகள் இருக்கிறார்களா? அக்கறையுடன் நலம் விசாரிக்கும் உறவுகள் உள்ளார்களா? எப்படிப்பட்ட சூழலிலும் உங்களை விட்டுக்கொடுக்காத நண்பர்கள் இருக்கிறார்களா? இந்த வசதிகள் நிறைய பேரிடம் இல்லை

அவ்வப்போது குடும்பத்துடன் வெளியில் செல்லவும், சுற்றுலாக்கள் செல்லவும் வாய்ப்பிருக்கிறதா? அதன் மூலம் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியைத் தர முடிகிறதா? இதுவும் நிறைய பேருக்கு வாய்க்கவில்லை என்பதே உண்மை.

நீங்கள் நினைத்த ஒரு துறையில் இணைந்து உங்களால் வேலை, தொழில் அல்லது வியாபாரத்தில் ஓரளவேனும் பிரகாசிக்க முடிகிறதா? இந்த வசதியும் நிறைய பேருக்குக் கிடைக்கவில்லை.

குழந்தைகளுக்கு அவர்கள் கேட்கும் உடைகள், பொம்மைகள், கல்வி என்று அவர்கள் விரும்பும் பலவற்றையும் எந்தத் தயக்கமும் இல்லாமல் செய்துவிட முடிகிறதா? உண்மையில் உங்களைவிட வசதியானவர் யாருமில்லை.

நீங்கள் பேசும் விஷயங்களைச் சுவாரசியமாகக் கேட்பதற்கும், உங்களைச் சிரிக்க வைத்து மகிழ்வதற்கும் உங்களைச் சுற்றிலும் அக்கறையான மனிதர்கள் இருக்கிறார்களா? உண்மையில் நீங்கள் ரொம்பவே கொடுத்து வைத்தவர்.

மனம் நிம்மதியாக இருக்கிறதா? அவ்வப்போது எழும் சின்னச்சின்னக் கவலைகளைத் தாண்டி வாழ்க்கையில் மகிழ்ச்சி நிரம்பியிருக்கிறதா? அப்படியானால் நீங்களும் வசதியானவர்தான்.

கடுமையாக உழைப்பதற்கென்று ஒரு வேலையோ, தொழிலோ கைவசம் இருக்கிறதா? அந்த வேலை உங்களுக்குத் திருப்தியான ஒரு வாழ்வைத் தந்திருக்கிறதா? வேலையை முடித்துவிட்டு வந்து நிறைவாக ஓய்வெடுக்க முடிகிறதா? நீங்கள் உண்மையிலேயே வசதியாக வாழ்கிறீர்கள் என்று அர்த்தம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com