நேர்மறை எண்ணத்தை வெளிப்படுத்துவது எது தெரியுமா?

positive thinking...
positive energy
Published on

ரு சிறுமி அவள் சித்தியின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வந்தாள். அப்பாவின் இரண்டாவது மனைவி அவர். அந்தச் சிறுமி காலையில் எழுந்து வாசல் பெருகி கோலம் இடுவது முதல் சித்திக்கு வேண்டிய உதவிகளை செய்வது, தண்ணீர் பிடித்து தருவது என்று எல்லாவற்றிலும் உதவியாக இருந்தாள். அதை கவனித்து வந்த பக்கத்து வீட்டுப் பெண்மணி, அந்தச் சிறுமியை அழைத்து உன் சித்தி என்ன உன்னை மிகவும் கொடுமைப் படுத்துகிறாளா? அளவுக்கு அதிகமாக வேலை வாங்குகிறார்கள். அப்படி இருந்தும் சாப்பாடு வயிற்றுக்கு போடுவதில்லைதானே என்று வீட்டில் பிரச்னையை ஏற்படுத்தும் தூண்டலான சில கேள்விகளை அப்பெண் சிறுமியிடம் கேட்டார்.

அதற்கு அந்தச் சிறுமி அத்தை நீங்கள் இப்படி எல்லாம் பேசக்கூடாது. எங்கள் சித்தி மிகவும் நல்லவர். நான் அவருக்கு உதவியாக இருப்பதால்தான் என்னையும் சரியான சமயத்திற்கு பள்ளிக்கு அனுப்பி வைக்க முடிகிறது. இதனால் அவரும் ஆபீஸிற்கு நேரத்துடன் செல்ல முடிகிறது. அப்பாவை கவனிக்க முடிகிறது. மேலும் சித்திக்கு நான் உதவுவதால்  அது எனக்கு நல்ல உடற்பயிற்சியாக இருக்கிறது. இதனால் சுறுசுறுப்பாக இருக்கிறேன். நன்றாக படிக்கிறேன். ஆதலால் சித்திக்கு என் மீது பாசம் வளர்கிறது.

எனக்கும் ஒரு தாய் கிடைத்த மகிழ்ச்சியில் சந்தோஷம் நிலவுகிறது. சாப்பாடு எல்லாம் குறையே கிடையாது. அப்படியே அளவோடு சாப்பிட்டாலும் நல்லதுக்குத்தான். இப்பொழுது நிறைய சாப்பிடுவதால்தான் பிற்காலத்தில் நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுவதாக கூறுகிறார்கள். ஆதலால் சித்தி எனக்குப் பார்த்து பார்த்து எதை எப்படி கொடுக்க வேண்டுமோ அப்படி கொடுக்கிறார்கள். நீங்களாக எதையாவது யூகித்துப் பேச வேண்டாம் என்று நேர்முறையாக பதிலை கூறினார். அதன் பிறகு அவர்களின் குடும்பம் பற்றி அந்தச் சிறுமியுடன் வாயாடுவதை அந்தப் பெண்மணி நிறுத்திக்கொண்டார். 

இதையும் படியுங்கள்:
மன உறுதியை மேம்படுத்தும் 5 குறிப்புகள்!
positive thinking...

இதை உள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்த அவளின் சித்தி ஓடிவந்து அந்தச் சிறுமியைக் கட்டிக்கொண்டு முத்தம் கொடுத்தார். சிறுமியே ஆனாலும் வயதுக்கு அதிகமான மனமுதிர்ச்சியை அவளிடம் காண முடிந்தது. அதே சமயத்தில் அவள் வீட்டைப் பற்றி யாரும் குறை கூறுவதையும், எதிர்மறையாக பேசுவதையும் அவள் அறவே தவிர்த்து நேர்மறையாக மட்டுமே சிந்தித்து வார்த்தைகளை தெள்ளத் தெளிவாக அளந்து பேசினாள். குடும்ப ஒற்றுமைக்கு அவசியம் தேவையானதும் இந்த நேர்மறை எண்ணங்கள் கொண்ட வார்த்தைகள்தானே! அந்த வார்த்தைகள்தானே எண்ணத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி. 

ஆதலால் நாம் எதையும் நேர்மறை எண்ணத்தோடு பார்ப்போம். வார்த்தைகளுக்கும் உயிர் உண்டு. அதனால்தான் சில வார்த்தைகள் ஆனந்தத்தையும், சில வார்த்தைகள் அழுகையையும் சில வார்த்தைகள் ஆறுதலையும் தருகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com