சிலரிடம் பொன், பொருள் எல்லாம் நிறைந்து கிடக்கும். ஆனால் அவர்களிடம் சந்தோஷததைக்காண முடியாது. சிலரோ வீட்டில் இருப்பதை வைத்து மனநிறைவுடன் இருப்பர். யார் வந்தாலும் கலகலவென்று பேசி அன்பாக இருப்பதை சமைத்து, பரிமாறி தானுமுண்டு நல்லபடியாக வழி அனுப்பி வைப்பர். வீட்டை விட்டு போகும்போது விருந்தினர்கள் எல்லாம் மகிழ்ச்சியுடன் வாழ்த்திவிட்டு வந்தால் இதுபோன்று இருப்பவர்கள் வீட்டிற்கு வர வேண்டும். அடிக்கடி வந்து போகிறேன் என்று பெருமிதத்துடன் கிளம்புவார்கள். இந்தக் காட்சிகளை பார்ப்பதற்கும் பழகுவதற்கும் இன்பம் உடையதாக இருக்கும்.
இன்னும் பலரோ வீட்டில் இல்லை என்று சொல்வதற்கு எந்த குறையும் இல்லாது இருந்த போதிலும் உம்மென்று இருப்பர். யார் வந்தாலும் போனாலும் அதில் ஒரு சந்தோஷமோ நிறைவு தரும்படியோ நடந்து கொள்ள மாட்டார்கள். இன்னும் கொஞ்சம் பிரயாசை பட்டிருந்தால் அந்த பொருளை அடைந்திருக்க முடியுமே! இதில் சேமித்து வைத்திருக்க முடியுமே என்று அதிலேயே கணக்கு பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது ஒரு ரகம். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதை பிடிக்க ஓடுபவர்கள் இவர்கள்தான்.
அரசன் ஒருவன் பெரிய படை திரட்டி பக்கத்து நாட்டை வெல்வதற்கு பனி படர்ந்த மலைகளின் வழியே சென்று கொண்டிருந்தான். அங்கே ஓரிடத்தில் உடலில் உடை ஏதும் இல்லாமல் இருந்த துறவி ஒருவரைப் பார்த்தான். ஆளைக் கொல்லும் இந்த குளிரில் ஆடை இல்லாமல் இவர் இருக்கிறாரே என்று விலை உயர்ந்த தன் போர்வையை கழற்றி அவரிடம் தந்தான்.
ஆனால் அவர் ஏற்றுக்கொள்ள மறுத்து, இந்தக் குளிரைத் தாங்க இறைவன் எனக்கு போதுமான உடைகளைத் தந்து இருக்கிறான். என்னால் ஆடை இல்லாமல் இந்த குளிரைத் தாங்க முடியும். யாராவது ஏழைக்கு இந்தப் போர்வையை தாருங்கள் என்றார்.
அவர் உடலில் எந்த ஆடையும் இல்லை. சொந்தமாக எந்த பொருளும் இல்லை. இவரை விட ஏழையை எங்கே தேடித் கண்டுபிடிப்பது என்று நினைத்து, அவன் ஐயா! உங்களை விட ஏழையை நான் எங்கே கண்டுபிடிக்க முடியும்? என்று கேட்டான்.
அரசே நீ எங்கே செல்கிறாய்? என்றார் அவர்.
பக்கத்து நாட்டை வென்று என் நாட்டுடன் சேர்த்துக் கொள்வதற்காக படையெடுத்துச் செல்கிறேன் என்றான்.
சிரித்த துறவி ஒரு நாட்டிற்கு அரசனாக இருந்தும் நீ நிறைவு அடையவில்லை. உன் உயிரையும் பல ஆயிரக்கணக்கான வீரர்களின் உயிரையும் பணயம் வைத்து பக்கத்து நாட்டை உன் நாட்டுடன் சேர்க்க முயற்சி செய்கிறாய். என்னை விடப் பெரிய ஏழை நீ தான். இந்தப் போர்வையை நீயே வைத்துக்கொள். உனக்குத்தான் அதிகம் தேவைப்படுகிறது என்றார் அவர்.
தலைக் கவிழ்ந்த அரசன் அவரை வணங்கினான். "ஐயா என் கண்களைத் திறந்துவிட்டீர். 'உள்ளம் நிறைவு அடையாத நிலையில் உள்ளவர்களே ஏழை' என்ற உண்மையை உணர்ந்து கொண்டேன். இனி எந்த நாட்டின் மீதும் படையெடுக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டுத் தன் படைகளுடன் நாடு திரும்பினான்.
இதுவரை நடந்ததை எண்ணி யோசிப்பதை விட இனி எப்படி நடக்க வேண்டும் என்று யோசிப்பவர்களே வாழ்க்கையை வாழத் தெரிந்தவர்கள்.