உன்னையே நீ அறிவாய்! அறிவாயா?
பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது இரு பள்ளிகளுக்கு இடையேயான கலைக்கழக போட்டி. என் மீது நம்பிக்கை வைத்த எனது வகுப்பாசிரியை பியூலா அவர்கள், என்னை வைத்து ஓர் ஓரங்க நாடகம் உருவாக்கினார். அதில் நான் சாக்ரடீஸ். அதாவது சிறையில் அடைக்கப்பட்ட சாக்ரடீஸ் கையில் விஷக்கோப்பையுடன் ஏதென்ஸ் நாட்டு மக்களிடம் தனது இறுதி பேரூரையை ஆற்றுவதுதான் அந்த நாடகத்தின் கருப்பொருள். அதற்கான பயிற்சி ஒத்திகை எனது பள்ளி வளாகமான வால்டர் ஸ்கடர் மேனிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது. அப்பொழுதுதான் நான் அந்த வார்த்தையை முதல் முதலாக உச்சரித்தேன். "உன்னையே நீ அறிவாய்!”
“உன்னையே நீ அறிவாய். ஏதென்ஸ் நாட்டு மக்களே!” என்று ஆரம்பிக்கும் அந்த வசனம், ஏறக்குறைய வீரப்பாண்டிய கட்டப்பொம்மன் பரங்கியரிடம் பேசும்தொனியில் அமைந்திருக்கும். சாக்ரடீஸ் அப்படி பேசினாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால், அதற்கு முன்வடிவமாக வீரப்பாண்டிய கட்டபொம்மன் நாடகம் இருந்ததினால் அதே வடிவத்தை இதிலேயேயும் புகுத்தியிருக்க கூடும்.
இந்த சம்பவம் ஒருபுறம் கிடக்கட்டும். நம்மில் எத்தனை பேர் நம்மை, நாமே அறிந்துவைத்திருக்கிறோம்? ‘எனக்கு எல்லாம் தெரியுமப்பா!’ என்று பெருமையாக பீற்றிக்கொள்ளும் நம்மில் பலரும் நம்மையே நாம் அறிந்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
ஆச்சரியமான விஷயம் என்னவெனில் நாம் அன்றாடம் ஒரு தானியங்கி இயந்திரம்போல் இயங்கி கொண்டிருக்கிறோம். நீங்கள் உங்களையே பரிசோதனை செய்துபார்த்தால் அது புரியும். உங்களைச் சுற்றி நிகழும் உங்களுக்கு தேவையான பல விஷயங்கள் உங்கள் பார்வைக்குத் தெரியாமலே கடந்து சென்று கொண்டிருக்கின்றன.
ரமேஷும் சுரேஷும் ஒரே நிறுவனத்தில் வேலைப் பார்ப்பவர்கள். ஐந்தாண்டுகளாக சிறுசேரியில்தான் வாழ்க்கை. இருவருக்கும் ஒரே நேரத்தில் கல்யாணம். குழந்தை. பள்ளிகூடம். அப்பார்ட்மெண்ட் வாங்கியது இத்தியாதிகள். சம்பளமும் மாதாந்திர தவணையும் ஏறக்குறைய ஒரே நிலைதான். ஐந்தாண்டுகள் கழித்து திடீரென்று சுரேஷ் சின்னதாக ஒரு துணிக்கடை திறக்கிறேன். என் மனைவி பார்த்துகொள்ள போகிறாள் என்றதும் ரமேஷுக்கு ஆச்சர்யமும் அதிர்ச்சியும். இருவரும் ஒரே நிலை. ஆனால் சுரேஷ் கூடுதலாக ஒரு தொழிலில் மனைவியின் பெயரில் இறங்கப் போகிறான்.
“என்ன மச்சி திடீர்னு? சொல்லவே இல்லை?” ரமேஷ் வினவ, “இல்லைடா உனக்கு தெரியாதா? ப்ரியா பேஷன் டிசைன் முடிச்சவள்னு....”
"ஆமாம்!"
"நான்கூட ஒரு மியூச்சுவல்பண்ட்ல பணம் போட ஆரம்பிச்சேன். உன்னிடம் சொன்னேன்... நீ விரும்பல."
"ஆமாம்! ஏதோ மாசாமாசம் பணம் போடணும்னு இல்லே சொன்னே?"
"அப்படி மாதம் சேமிச்ச காசு அஞ்சு வருஷத்துல கணிசமா சேர்ந்துச்சு...ப்ரியாவும் பேஷன் முடிச்சு ஒரு ஸ்டார்ட் அப் முயற்சிப் பண்ணா. அதுதான் இந்த பொட்டிக்!"
ரமேஷுக்கு கொஞ்சம் தலைசுற்றுவதுபோல் இருந்தது. இவற்றையெல்லாம் சுரேஷ் பல நேரங்களில் தன்னிடம் சொல்லி வந்ததுதான். ஆனால், ரமேஷுக்கு தெரிந்தும் தெரியாதது போன்ற சூழல் எற்பட்டதன் காரணம் என்ன? சுரேஷ் துல்லியமாக வாழ்க்கையின் அடுத்த வெற்றி இலக்கை நிர்ணயித்து நகர்வதன் காரணம் என்ன?
அதே ‘உன்னையே நீ அறிவாய்!’
இன்றைய தொழிலதிபர்கள் யாரும் ஒரே நாளில் தொழிலதிபராக உருவெடுத்தவர்கள் இல்லை. சிறுக சிறுக சேமித்து, தன்னுடைய திறன்களை வளர்த்துக் கொண்டு பின்னர் அதனை வாழ்க்கையில் பரிசோதனை செய்து அதில் வென்றவர்கள்.
ஆற அமர உட்கார்ந்து உங்களைப்பற்றி யோசியுங்கள்.
உங்களின் பலம் என்ன? பலவீனம் என்ன? என்பதை பட்டியலிடுங்கள்.
உங்களுக்கு தெரிந்த திறன் என்ன? தெரிந்துகொள்ள வேண்டிய திறன் என்ன? என்பதை அடையாளம் காணுங்கள்.
இவற்றையெல்லாம் ஒவ்வொன்றாக நேரம் ஒதுக்கி செயல்பாட்டுக்கு கொண்டு வாருங்கள்.
அதாவது உங்களுக்கு இருக்கும் 24 மணிநேரத்தில்.
8 மணிநேரம் பணி
8 மணிநேரம் ஓய்வு
மீதமுள்ள எட்டுமணிநேரத்தில் என்னதான் நீங்கள் கதை சொன்னாலும் குறைந்தது 1 மணி நேரமாவது உங்களை அறிந்துகொள்ள நேரம் இருக்கும்; கிடைக்கும். அந்த ஒரு மணிநேரத்தை முழுமையாக பயன்படுத்தினால் மாதம் முப்பது மணிநேரம்.
நேரத்தையும் அறிவையும் ஒருங்கே பயன்படுத்தும்போது வாழ்வெல்லாம் வெற்றிதான்!