நம்மிடம் இருப்பதைக் கொண்டு மகிழ்ச்சியாக இருப்பதுதான் உண்மையான மகிழ்ச்சி. எளிமையாக இருந்து இருப்பதைக் கொண்டு வாழ்ந்தால் மனநிறைவு பெறும். பொதுவாக நாம் விரும்புகின்றவற்றை அதிக அளவில் கைவசம் படுத்தவும், நமக்கு விருப்பமில்லாத வற்றைக் குறைவாகவும் பெற விரும்புகிறோம். குறிப்பிட்ட ஏதோ ஒன்று நம்மிடம் இருப்பதுதான் மகிழ்ச்சியின் மூல காரணம் என்றும், அது இல்லையென்றால் மகிழ்ச்சியின்மைக்கு மூலகாரணம் என்று நினைக்கிறோம்.
உணவு, உடை, உறைவிடம் போன்ற தேவைகள் நிறைவேறாதபோது அது மகிழ்ச்சியின்மைக்கு வழி வகுக்கும். மோசமான உடல்நிலை இன்னொரு காரணம். ஒரு நல்ல கார் நம்மிடம் இல்லாதது, வாழ்க்கை நடத்த போதுமான பணம் இல்லாதது, விருப்பமானவற்றைச் செய்ய நேரம் இல்லாதது போன்ற நிறைவேறா ஆசைகளும் மகிழ்ச்சியின் மைக்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
நாம் விரும்புகின்ற அந்த விஷயங்களைப் பெற்றால் கூட அவை மகிழ்ச்சிக்கு வழி வகுக்கும் என்று உறுதியாக கூற முடியாது. மேற்கூறிய விஷயங்களைப் பெற்றவர்களை கூட பலர் மகிழ்ச்சியின்றி இருக்கின்றனர். அப்படியானால் மகிழ்ச்சிக்கு மூலக் காரணம் எது?.அது நம் அகத்தில்தான் குடியிருக்கிறது.
நம் வாழ்வின் சூழ்நிலைகளுக்கு நாம் அளிக்கின்ற செயல் விடைகளில் இருந்துதான் மகிழ்ச்சி உருவாகிறது. மகிழ்ச்சி நமக்குள் இருந்துதான் வருகிறது. நம் வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் எல்லாவற்றையும் தாக்குப்பிடிக்க நமக்கென்று ஒரு தனிப்பட்ட தததுவம் இருக்கவேண்டும் என்பது குறித்து பயிலரங்கு ஒன்று நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்டவர்கள் தங்கள் வாழ்க்கை முறைகளை மாற்றிக் கொண்டனர்.
தங்கள் திறன்களுக்கு அப்பாற்பட்டதாக கருதிய பல விஷயங்களை சாதித்தனர். தங்கள் பயங்களிலிருந்து விடுபட்டனர். தங்கள் இலக்குகளை அடைந்தனர். வாழ்வில் அமைதியையும் மகிழ்ச்சியையும் கண்டு கொண்டனர். சோதனைகள், துயரங்கள், பிரச்னைகள் ஆகியவற்றை எதிர்கொண்டு சமாளித்து அதிலிருந்து மீண்டு வெளிவருவதற்கு, தனிப்பட்ட ஒரு தத்துவம் இன்றியமையாதது. நிறைவான வாழ்க்கையை வாழ்பவர்கள் அப்படிப்பட்ட ஒரு தனித்ததுவத்தை உருவாக்கிக் கொண்டதால்தான் அப்படி வாழ முடிகிறது.
உண்மையின் அடிப்படையில் அமைந்த ஒரு வலிமையான தத்துவம் சக்தி வாய்ந்தது என்பதையும், அது மகிழ்ச்சியைக் கொண்டு வரும் என்பதையும் காலம் நமக்குக் கொண்டுவரும் சோதனைகளை வெற்றிகரமாக கையாள முடியும் என்பதை நாம் உணரலாம். பயிலரங்கில் தோற்றவர்கள் ஒரு பலவீனமான அல்லது தவறான தத்துவத்தால் நிகழ்கிறது என்பதையும் உணரலாம். அவர்கள் புதிய தத்துவத்தை ச்வீகரித்துக் கொண்டு அதைத் தங்கள் வாழ்வில் செயல்படுத்திய போது அவர்களின் வாழ்க்கை அடியோடு மாறியது. அவர்களுடைய கண்ணோட்டம் மாறியதால் சூழல்களும் மாறின. வாழ்க்கைப் பயணத்தின்போது நீங்கள் நடந்து கொள்ளுகின்ற விதம்தான் உங்கள் வாழ்க்கை எவ்விதத்தில் மலரும் என்பதை தீர்மானிக்கிறது.