பெற்றோர்களுக்கும் தேவை உளவியல் ஆலோசனை!

பெற்றோர்களுக்கும் தேவை உளவியல் ஆலோசனை!

“விளையாடிக்கிட்டேஇருக்காதே. ஒழுங்காப் படி” என்று தாய் திட்டியதால் பதிமூன்று வயது சிறுமி தற்கொலை.” செய்தியைப் படிக்கும்போதே நெஞ்சு பதைபதைக்கிறது. நன்றாகப் படி என்று சொல்லக் கூட பெற்றோருக்கு உரிமையில்லையா?  இன்றைய இளைய சமுதாயம் எங்கே போய்க் கொண்டிருக்கிறது?

“எதற்கு படிப்பு? YOU TUBE வழியாக சம்பாதித்து விடுவேன்” பன்னிரெண்டு வயது சிறுவனின் பதில். சம்பாதிப்பதை சரியாக கையாளுவதற்கு படிப்பு வேண்டாமா? இளம் பருவத்திலேயே எதற்கெடுத்தாலும் ஈகோ. பிறர் சொல்லி ஏன் கேட்க வேண்டும். தான் செய்வதே சரி என்ற மனப்பான்மையில் வளர்கிறார்கள்.

சரி பள்ளியிலும் மாணவர்களின் தவறை ஆசிரியர்கள் திருத்த முடியாத நிலையில்தான் உள்ளார்கள். இக்காலத்தில் குடும்பத்துக்கு ஒன்றிரண்டு குழந்தைகள் இருப்பதால்தான், தன் குழந்தைகள் தவறே செய்தாலும் பெரும்பாலான பெற்றோர்கள் அதை ஒப்புக் கொள்வதில்லை. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் இளம் பிள்ளைகளை அவர்களால் கண்காணிக்க முடிவதில்லை. எங்கள் எதிர் வீட்டில் எட்டாம் வகுப்பு படிக்கும் பையன் டீச்சரை மோசமாக தகாத வார்த்தைகளால் திட்டியதால் விசாரணைக்குப் பின் சஸ்பெண்ட் செய்யப்பட்டான். பெற்றோர்கள் அவனுக்கு எடுத்து சொல்லியும் டீச்சரிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சொல்கிறான். இப்படியே இவர்கள் வளர்ந்தால் நல்ல வாழ்க்கையைத் தொலைத்து பெரும் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளலாம்.

இன்று பொறுமை, சகிப்புத்தன்மை, உழைப்பு குறைந்து கொலை, கொள்ளை வன்முறை போன்ற குற்றங்கள் பெருகி வருவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம். பிள்ளைகள் பெரும்பாலும் பெற்றோர்களைப் பார்த்து தான் வளர்கின்றன. அவர்களில் சிலர் வேண்டாத மீடியா வலையில் சிக்கி சின்னா பின்னமாகிறார்கள். தம்பதியரிடையே சிறிய கருத்து வேறுபாடுகளுக்கு கூட  பிரிந்து விடுகிறார்கள். உடனே டைவர்ஸ். பிள்ளைகள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் நான் கிழக்கு ஆப்பிரிக்காவில் சிறிது காலம் வசித்தபோது அங்குள்ள சிறு பிள்ளைகள் எங்கள் வீட்டிற்கு வருவார்கள்.

அவர்களைப் பற்றி கேட்டபோது  “நான் இரண்டாது அம்மாவின் மகன். இவன் ஐந்தாவது அம்மாவின் மகன் என்று சர்வ சாதாரணமாக சொல்வதைக் கேட்டு முதலில் அதிர்ச்சியாக இருந்தது.  அவர்களின் குடும்ப அமைப்பு கட்டுப்பாடில்லாததாக எப்படியும் இருக்கலாம் என்ற வாழ்க்கை முறையில் இருப்பதைப் பார்த்தபோது  நம் இந்திய கலாச்சாரம் கட்டுப்பாடான குடும்ப  அமைப்பை நினைத்து  பெருமையாக இருந்தது. ஆனால் இன்றைய குடும்ப உறவு, மனநலம் சிதைந்து  வருவதைப் பார்க்கும் போது அச்சமாக இருக்கிறது.

என் தந்தை மதுரையில் காவல் துறையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தார். மிகவும் கண்டிப்பானவர். தாய் மஹா பொறுமைசாலி. நாங்கள் ஐந்து சகோதரிகள் மூத்த சகோதரர் என ஆறு பேர். அப்பாவின் லத்தியால் பல முறை அடிகள் வாங்கியிருக்கிறேன். ஆனால் சிறிது நேரத்தில் எங்களை சமாதானப்படுத்தி விடுவார். கல்வியால் இன்றைய எங்களின் உயர்வுக்குக் காரணாமாயிருந்த  அப்பாவின் கண்டிப்பு எங்களின் மீதிருந்த அன்பு, அக்கறையால்தான் என்பதை நினைத்துப் பார்க்கிறோம்.

பெற்றோர்களின் கண்டிப்பு நம்மை திருத்தி நல்வழிப் படுத்துவற்குத்தான் என்பதை பிள்ளைகள் உணர வேண்டும். அதற்கு முதலில் பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் சிறிது சகிப்புத் தன்மை, பொறுமை, விட்டுக் கொடுத்து அனுசரித்துப் போனால் வாழ்க்கை நிச்சயமாக மகிழ்ச்சியாக  வெற்றிகரமாக அமையும். மேலும் பிள்ளைகளைக் கருத்தில் கொண்டு சுயநலமாக டைவர்ஸ் போன்ற முடிவுகளை எடுக்கும் முன் அதன் பின் விளைவுகளையும் சிந்திக்க வேண்டும்.  பள்ளிகளில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வல்லுனர்களை வரவழைத்து அவ்வப்போது உளவியல் ஆலோசனைகள் வழங்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com