குழந்தை எதிரில் பெற்றோர் சண்டை!

குழந்தை எதிரில் பெற்றோர் சண்டை!

ருண் தன் எதிரே உள்ள பாடப் புத்தகங்களைப் பார்க்கிறான். “ராத்திரி பதினோரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. பத்து மணிக்கே படுக்கப் போயிருக்க வேண்டும். அப்போதுதான் மறுநாள் காலையில் புத்துணர்ச்சியோடு எழுந்திருந்து பள்ளிக்குப் போக முடியும்.

அடுத்த அறையில் அப்பா, அம்மாவிடம் சொல்வது அவன் காதில் விழுகிறது. “நடு ராத்திரி ஆகிறது. இன்னும் அருண் தூங்காம படிக்கிறான். அவன் ஸ்கூலில் இருந்து வந்த உடனே ஹோம்வொர்க் செய்யச் சொல்லியிருக்க வேண்டியதுதானே?”

அதற்கு அம்மாவின் பதில்: “அவனும்தான் எவ்வளவு நாழி புஸ்தகத்தையே கட்டிக்கொண்டு அழுவான்? நான்தான் பாவம்னுட்டு பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பிறகு கொஞ்ச நாழி ரெஸ்ட் எடுக்கச் சொன்னேன்.

மாறி மாறி அவர்கள் இருவரும் பேசப் பேச, அவர்கள் பேச்சில் சுருதி ஏறிக்கொண்டே போகிறது. அருண் பக்கத்து அறையிலிருந்து இவர்கள் பேச்சைக் கொட்டுக் கொண்டிருக்கிறான்.‘என்னால்தானே இவர்கள் சண்டை போடுகிறார்கள்?’ என்று அவனுக்குத் தோன்றுகிறது. அந்தப் பிஞ்சு மனசு வருத்தப்படுகிறது.

கணவனும் மனைவியும் குழந்தை வளர்ப்பு விஷயத்தில் தங்களுக்குள் நிறைய அபிப்ராய பேதம் கொண்டிருக்கலாம். ஆனால் அதை குழந்தையின் காதுபட பரிமாறிக்கொள்ளும்போது பாதிக்கப்படுவது அந்தக் குழந்தைதான். அபிப்ராய பேதங்கள் வரும்போது பெற்றோர் சில விஷயங்களை கடைப்பிடிக்கலாம்.

உங்கள் வாழ்க்கை துணையின் கருத்துக்கு முதலில் மதிப்பு கொடுங்கள். நீங்கள் நினைப்பது மட்டும்தான் சரி என்று நினைக்க வேண்டாம். நீங்கள் வளர்க்கப்பட்ட சூழ்நிலை உங்கள் கணவருடையதிலிருந்து நிச்சயம் மாறுபட்டிருக்கும். பொதுவாக உங்கள் பெற்றோர் நடந்து கொண்ட மாதிரியேதான் நீங்களும் நடக்க முயல்வீர்கள். அதே மாதிரிதானே அவரும்? அதனால் கருத்து வேறுபடுவது இயற்கைதான் என்று புரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் இருவரும் சேர்ந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தபின் குழந்தை எதிரில் அதை மாற்றாதீர்கள். ‘நீ ஐஸ்கிரீம் கூடாதுன்னுதான் சொல்லி அனுப்பியிருந்தே. ஆனா அவன் ஆசையா கேட்டபோது வேண்டாம்னு சொல்ல மனசு வரலை’ என்று கணவன் குழந்தை எதிரிலேயே சொல்லக் கூடாது. ‘அந்த டிவி ஷோ எனக்கும் பிடிக்கும்டா கண்ணா! ஆனா டாடிக்குப் பிடிக்காதே! ம்... அவரோட டேஸ்ட்டே தனி...’ என்று அவரது ரசனையைப் பற்றி குறைவாக குழந்தையிடம் சொல்லாதீர்கள்.

சில விஷயங்களில் நீங்கள் இருவரும் compromise பண்ண வேண்டியிருக்கும். பாட்டு கிளாஸ்தான் முக்கியம் என்று நீங்கள் நினைக்கலாம். விளையாட்டு அதைவிட முக்கியம் என்று கணவர் நினைக்கலாம். சரி வாரத்தில் மூன்று நாள் விளையாட்டும், மூன்று நாள் பாட்டு சாதகம் என்று திட்டம் போடுங்களேன். உங்கள் இருவருடைய விருப்பங்களும் நிறைவேறும். அல்லது குழந்தையிடமே அவனுக்கு எது விருப்பம் என விட்டு விடலாம். உங்கள் குழந்தைக்கும் தன் மேல் ஏகப்பட்ட எதிர்ப்புகள் திணிக்கப்படுவதாக தோன்றாது.

சில சமயங்களில் ஒருவர் சொல்வதை முதலில் சில நாட்கள் நடத்திப் பார்க்கலாம். அதற்குப் பிறகு இன்னொருவருடைய யோசனைபடி செய்யலாம். அப்படி செயல்படும்போது அவற்றில் எது ப்ளஸ் எது மைனஸ் என்று விவாதித்து இரண்டு முறையிலுமே நல்லதை எடுத்துக்கொண்டு அதையே பின்பற்றலாம்.

கடைசியாக ஒரு வார்த்தை. குழந்தை தப்பு செய்தால் தண்டிப்பது தவறில்லை! ஆனால் தண்டனையை எப்போதும் ஒருவரே கொடுக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அந்தக் குழந்தைக்கு தண்டனை கொடுப்பவரிடம் மனக்கசப்பும், கொடுக்காதவர் மற்றவரைவிட தன்னிடம் அன்பு செலுத்துவதாகவும் தறவாக நினைத்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com