இந்த பூமி தோன்றிய காலத்திலேயே இயற்கை சார்ந்த ஹிந்து மத வழிபாடுகளும் தோன்றிவிட்டன. பஞ்ச பூதங்கள், விலங்குகள் , தாவரங்கள், பறவைகள், ஊர்வன என அனைத்தும் மூலமாக கொண்டு உருவானது தான் சனாதன தர்மம். இது தோன்றிய காலம் எவரும் அறிய முடியாது. இயற்கையில் இருந்து இயல்பாகத் தோன்றியதால் , இயற்கையை பாதுகாக்கும் வகையில் மற்ற உயிர்களுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த தர்மம் உள்ளது. அதில் ஒரு படியாக விலங்குகளும் இந்து மதத்தில் புனிதமானவைகளாக போற்றப்படுகின்றன. அதில் ஆன்மீகத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்த 9 புனித விலங்குகளை பற்றி அறிந்து கொள்வோம்.
பால் கொடுக்கும் பசு, தாயாக தெய்வமாக பார்க்கப்படுகிறது. கேட்டதை கொடுக்கும் காமதேனுவின் மறு அவதாரமாக பசு உள்ளது. பசுவின் உடலில் 33 கோடி தேவர்களும் மும்மூர்த்திகளும் முப்பெரும் தேவியர்களும் வசிப்பதாக நம்பப்படுகிறது. பசுவின் சாணத்தில் இருந்து தான் திருநீறு, ஊதுபத்தி உள்ளிட்ட சில பூஜை பொருட்கள் செய்யப்படுகின்றன. பசுவின் கோமியம் புனித நீராக கருதப்படுகிறது. பசுவின் ஆண் வடிவமான நந்தி , சிவபெருமானின் வாகனமாக உள்ளது.
முழுமுதற் கடவுள் ஆன விநாயகருக்கு யானையின் தலை பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் ஆனைமுகன் , களப விநாயகர் , கள்ள விநாயகர் , வேழ முகத்தான் போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
யானை அறிவின் அடையாளமாகவும் , விலங்குகளில் மிகப்பெரியதாகவும் பல கடவுள்களின் வாகனமாகவும் உள்ளது. முக்கியமாக இந்திரன் வெள்ளை யானையில் வலம் வருகிறார்.
கடவுள் விஷ்ணு தர்மத்தினை காக்க ஹிரனியகசிபுவை அழிக்க சிங்க முகத்துடன் நரசிம்மராக அவதரித்தார். சிங்கம் என்பது நரசிம்மரின் வடிவமாக உள்ளது. மேலும் அம்பிகையின் வாகனமாகவும் உள்ளது.
புலி துர்க்கையின் வாகனமாக இருக்கிறது. புலியின் மீது அமர்ந்த அம்பிகையை புலீஸ்வரி அம்மன் என்றும் ஷேரவாலி அம்பே என்று வட நாட்டிலும் அழைக்கின்றனர். மேலும் புலி ஐயப்பனின் வாகனமாகவும் இருக்கிறது.
ராம அவதாரத்தில் விஷ்ணுவிற்கு உதவுவதற்காக குரங்கு உருவத்தில் அனுமான் பிறந்தார். வலிமையின் அடையாளமாக விளங்கும் ஹனுமான் , ராம அவதாரம் முடிந்த பின்னும் மகாவிஷ்ணுவின் கல்கி அவதாரத்தில் உதவுவதற்காக இன்றும் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். ராம நாமம் ஜெபிக்கும் இடத்தில் எல்லாம் அவர் இருக்கிறார்.
நன்றியுள்ள விலங்கின் அடையாளமாக காணப்படும் நாய் தீய சக்தியை கண்டறியும் தன்மையுடையதாக மக்கள் கருதுகிறார்கள். சிவபெருமானின் காலபைரவர் உருவத்தின் ஏவல் விலங்காக நாய் உள்ளது. பல ஊர்களில் நாய்களுக்கு கோயில்கள் உள்ளன.
அசுரன் ஹிரன்யாட்சன் பூமியை ஒளித்து வைத்து, மக்களை துன்புறுத்திய போது மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து எடுத்து அசுரனை அழித்து பூமியை வெளிக்கொணர்ந்தார். அதுபோல ஏழு பெண் தெய்வங்களில் ஒன்றான வராகியும் வராஹ முகத்தோடு காட்சி அளிக்கிறார்.
ராம அவதாரத்திலும் கிருஷ்ண அவதாரத்திலும் கரடிகளின் தலைவனான ஜாம்பவான் கரடி குறிப்பிடப்பட்டிருக்கிறது. இலங்கை போரில் ராமருக்கு ஜாம்பாவான் உதவி செய்தார் . கிருஷ்ணருக்கு தனது மகள் ஜாம்பவதியை மணமுடித்து வைத்தார் .
குதிரை முகத்துடன் ஹயக்கிரிவர் என்கிற கல்விக் கடவுள் ஹிந்து மத வழிபாட்டில் இருக்கிறார். அவர் தான் சரஸ்வதி தேவிக்கு ஞானத்தை போதித்தவர்.
மகாவிஷ்ணுவின் இறுதி அவதாரமான கல்கி அவதாரத்தில் அவருக்கு வாகனமாக குதிரை இருக்கும்.
ஆன்மீகத்தில் ஒவ்வொரு விலங்கும் கடவுளின் ஒரு அவதாரமாகவும் அல்லது அவரின் வாகனமாகவும் எதற்காக படைக்கப்பட்டது என்றால் , மனிதர்கள் ஒவ்வொரு விலங்கிற்கும் உரிய முக்கியத்துவம் கொடுத்து , அவற்றிற்கு தீங்கு செய்யாமல் வாழ வேண்டும் என்பதற்காக தான்.