தெலங்கானாவில் ஒரு பத்ரிநாத் ஆலயம்!

தெலங்கானாவில் ஒரு பத்ரிநாத் ஆலயம்!

ந்துக்களின் புகழ் பெற்ற நான்கு புனித யாத்திரை திருத்தலங்கள் பத்ரிநாத், துவாரகா, பூரி ஜகந்நாத் மற்றும் ராமேஸ்வரம். இந்த யாத்ரீகத் தலங்களுக்கு புனித யாத்திரையாக தமது வாழ்நாளில் ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். இந்த நான்கு க்ஷேத்ரங்களுக்குச் சென்றால் மோட்சம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. இதில் மகாவிஷ்ணுவின் இருப்பிடமாகவும், விஷ்ணு தவம் செய்த புனிதத் தலமாகவும் வடக்கே உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத்துக்கு செல்லும் யாத்திரை சற்று கடினமானது. இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக பத்ரிநாத் ஆலயம் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும். இதனால் வயதானவர்கள் மற்றும் சிறுவர்களை அழைத்துக் கொண்டு பத்ரிநாத் பயணத்தை மேற்கொள்வது சிரமமானது.

பத்ரிநாத் பயணம் செல்ல முடியாதவர்களுக்காகவே உத்தரகாண்டில் உள்ள அசல் பத்ரிநாத் கோயிலைப் போல தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் ஸ்ரீ பத்ரி விஷால் தாமின் பிரதியாக தென் பத்ரிநாத் கோயில் அமைந்துள்ளது. ஹைதராபாத்தில் இருந்து 50 கி.மீ. தொலைவில் மேட்சல் என்ற இடத்திற்கு அருகில் உள்ள பண்ட மைலாரம் என்ற கிராமத்தில் இக்கோயில் உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத் கோயிலைப் போலவே 6,750 சதுர அடியிலும், 50 அடி உயரத்திலும் இரண்டு தளமாக இக்கோயில் கட்டப்பட்டு உள்ளது. தரை தளத்தில் 350 பேர் அமரக்கூடிய மண்டபம் உள்ளது. இந்த பத்ரிநாராயணன் கோயில் உத்தரகாண்ட் கல்யாண்காரி சன்ஸ்தானால் கட்டப்பட்டுள்ளது. நான்கு தலைமுறைகளாக உத்தரகாண்டிலிருந்து வியாபாரம் மற்றும் தொழில் நிமித்தமாக இடம் பெயர்ந்த மக்கள் ஹைதராபாத்தில் வசித்து வருகின்றனர். அவர்கள் உத்தரகாண்ட் கல்யாண்காரி சன்ஸ்தான் என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்றை உருவாக்கி இக்கோயில் பணிக்காக நிதி திரட்டினர். பல நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் இக்கோயில் கட்டும் பணியில் உதவினர். இதற்கான நிலத்தை வாங்கி சுமார் 13 ஆண்டுகள் பல்வேறு கட்டங்களை முடித்த பின் பத்ரிநாத் கோயில் இந்த வருடம் ஜூன் 29ம் தேதி பொதுமக்களின் தரிசனத்திற்காகத் திறக்கப்பட்டது. இக்கோயில் ஆண்டு முழுவதும் திறந்திருக்கும்.

முதல் தளத்தில் பத்ரிநாத் திருவுருவ சிலை உள்ளது. அருகில் விநாயகர், குபேரர்,  உத்தவர், லட்சுமி, நர-நாராயணர், நாரதர் மற்றும் கருடன் ஆகியோரின் உருவ சிலைகளும் உள்ளன. வளாகத்தில் மஹாலட்சுமி, ஹனுமான், ஆனந்த பைரவி, கணேஷ் மற்றும் சிவன் பார்வதிக்கு தனித்தனி சன்னிதிகள் கட்டப்பட்டுள்ளன. பூஜை நடைமுறை, அலங்காரம் அனைத்தும் பத்ரிநாத் க்ஷேத்ரத்தை ஒத்திருக்கும்.

இங்குள்ள கருவறையில் ஒரு அதிசயத்தைக் காணலாம். பெரும்பாலான பக்தர்கள் பத்ரிநாத் கோயிலில் அணையாமல் எரிந்து கொண்டிருக்கும் அகண்ட தீபத்தை தரிசித்து விட்டுதான் வருவர். அதேபோல இங்கும் பூலோக வைகுண்டமான பத்ரிநாத்  க்ஷேத்ரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட அகண்ட தீபத்தை 13 பேர் கொண்ட குழுவினர் சாலை மார்க்கமாக சென்று உத்தரகாண்ட் மாநிலத்தில் இருந்து 2010 கி.மீ., தொலைவு பயணித்து தீபம் கொண்டு வந்தனர். பத்ரிநாத் க்ஷேத்ரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட தீபம் என்பதால் இந்த அணையா தீபத்தை பக்தர்கள் பக்தியுடன் வணங்குகின்றனர்.

ஹைதராபாத் பத்ரிநாத் கோயிலுக்கு பிற மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்தவண்ணம் இருக்கின்றனர். தரிசன டிக்கெட்டுகள், விஐபி தரிசனங்கள் இங்கே இல்லை. எனவே, தற்போது கூட்டம் அதிகமாக இருப்பதால் காலை 9 மணிக்குள் சென்றால் பத்ரி நாராயணரை நிதானமாக தரிசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com