பீஷ்மகன் என்ற அரசன் விதர்ப்ப நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு ஐந்து பிள்ளைகளும் ஒரு பெண்ணும் பிறந்தனர். ருக்மி, ருக்மகேஷன், ருக்மபாகு ,ருக்மன் ருக்மமாலி என்பவை புதல்வர்களின் பெயர்கள். ருக்மணி என்பது ஒரே பெண்ணின் பெயர்.
ருக்மணி கிருஷ்ணனை பற்றிய அவளுடைய அந்தப்புரத்திற்கு வந்த பல அரச பரம்பரையினர் சொல்லக் கேட்டிருந்தாள். மன்மதனுக்கு மன்மதனாய் நீலமேக சியாமளவர்ணன், செல்வம், குணம், வீரம் முதலிய அம்சங்களில் ஈடு இணையற்றவன் அவன் என்பதை தெரிந்து கொண்டாள் .எனவே, கண்ணனையே தனது மணாளனாக மனதில் ருக்மணி வரித்துக் கொண்டாள். அதுபோலவே கிருஷ்ணனும் அழகு, அறிவு, குணம், சீலம் நிறைந்த ருக்மணியை மணப்பது என்று தீர்மானித்தான்.
ருக்மணியின் பெற்றோரும் அவளை கண்ணனுக்கே திருமணம் செய்து வைக்க விரும்பினார்கள். ஆனால், அவளுடைய அண்ணன் ருக்மி கம்ஸனுக்கு நெருங்கிய நண்பன். கம்சனை கண்ணன் வதம் செய்தது, ஜராசந்தனை பல தடவை போர்க்களத்தில் தோல்வியுறச் செய்து ஓட ஓட விரட்டியதெல்லாம் அவனுக்கு பிடிக்கவில்லை. ஆகவே, தனது தங்கை ருக்மணியை சேதி நாட்டு மன்னனான சிசுபாலனுக்கு திருமணம் செய்து கொடுத்து விட வேண்டும் என்பதில் அவன் மிகவும் பிடிவாதமாக இருந்தான். அண்ணனின் மனப்போக்கு அறிந்த ருக்மணி ஆழ்ந்து யோசித்து தனக்கு ஆப்த நண்பரான ஊர் அந்தணரைக் கொண்டு கண்ணனுக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினாள். அவள் எழுதிய கடித விபரம் என்ன தெரியுமா?
"புவன சுந்தரரே! கேட்பவர்களின் காதுகளின் வழியாக உள் புகுந்து அவர்கள் தாகத்தைத் தீர்க்கும் தாமரைக் கண்ணரே! கண் படைத்ததன் பயன் உம் லாவண்யத்தைக் கண்டு களிப்பதே. இப்போது என் மனம் வெட்கத்தை விட்டு உம்மிடம் சொல்கிறது.
"என் இதயத்திற்கு இனிமை தருபவரே! அடியாள் தங்களையே எனக்கு ஏற்ற மனாளன் என வரித்து விட்டேன். பிரபுவே! என் ஆவியை உங்கள் வசம் ஒப்புவித்து விட்டேன். என்னை வந்து தாங்கள் உங்கள் மனைவியாக ஆக்கிக்கொள்ள வேண்டும். கண்ணபெருமானே! சிங்கத்தின் உணவை நரி கவர்ந்தாற்போல வீரராக விளங்கும் நீங்கள் அடைய வேண்டிய என்னை, சிசுபாலன் என்ற சிறுநரி வந்து தீண்டாமல் பார்த்துக்கொள்வது உங்கள் கடமை.
"அடியாள் எத்தனையோ புண்ணியம் முன்பு செய்திருந்தால் நிச்சயம் அச்சுதன் என்னை கைவிடான். சிசுபாலனும் தீண்ட முடியாது. எவராலும் ஜெயிக்க முடியாதவரே! நாளைய தினம் நடக்க உத்தேசித்திருக்கும் திருமணத்திற்கு நீங்கள் எங்கள் விதர்ப்ப நாட்டிற்கு காவலுடன் ரகசியமாக வாருங்கள். சிசுபாலன், ஜராசந்தன் முதலியோருடைய படைகளை விரட்டி, வீரியத்தையே விரும்பும் என்னை பலாத்காரமாக கவர்ந்து இராட்சஷ விதிப்படி திருமணம் செய்து கொள்ளவும்.
"உன் பந்துக்களை கொள்ளாமல் என்னை எப்படி மனம் செய்து கொள்வது என்று எண்ணினால் அதற்கும் உபாயம் சொல்லுகிறேன். எங்கள் குல நியதிப்படி திருமணத்திற்கு முந்தின நாள் எங்கள் குல தேவதையை பூஜிப்பதற்காக மணப்பெண் ஆடம்பரமாக ஊருக்கு வெளியில் இருக்கும் கௌரி ஆலயத்திற்குப் போவதுண்டு. அச்சமயம் அடியாளை கவர்ந்து செல்லலாம்.
"தாமரைக் கண்ணா! எவருடைய திருவடிப் பொடியில் ஸ்நானம் செய்து அஞ்ஞானத்தை போக்க வேண்டும் என உமாபதி போன்ற உலக நாயகர்கள் விரும்புகிறார்களோ, அப்படிப்பட்ட உமது திருவருளை நான் அடையாமல் போனால் , நான் பற்பல நோன்பு விரதங்களால் உடலை நலியச் செய்து என் உயிரை விட்டு விடுவேன் !"
இந்தக் கடிதத்தைப் பிராமணர் கொடுத்துவிட்டுக் கூறினார், "யதுகுல திலகரே! இதுவே நான் கொணர்ந்த ரகசிய செய்தி. இனி தாங்கள் எது செய்ய உசிதமோ அதை நன்றாக ஆலோசித்து செய்யுங்கள்" என்றார்.
கண்ணன் உடனே தனது தேர்பாகன் சாருகனை அழைத்து ரதத்தைப் பூட்டிக்கொண்டு விதர்ப்ப நாட்டிற்கு வந்து சேர்ந்தார்.
ஸ்ரீ கிருஷ்ணர் எங்கு போனாலும் தாய், தந்தையர் அனுமதி இன்றி போக மாட்டார். ஆனால், அப்போது கல்யாணத்திற்கு யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் புறப்பட்டு, ருக்மியிடம் போரிட்டு வென்று பிறகு ருக்மணியை பகவான் துவாரகையில் திருமணம் செய்து கொண்டார்.
அப்போது யது நாயகனிடம் பக்தி கொண்ட துவாரகை மக்களின் ஒவ்வொருவர் வீட்டிலும் பெரிய திருவிழாவாக அந்த திருமணத்தைக் கொண்டாடினார்கள். அப்போது அந்தப் பட்டணம் தோரணமாலை அலங்காரங்களுடன் ஜொலித்தது. அப்போது அலங்கார பூஷிதர்களாய் ஊர் மக்கள் எல்லாம் கல்யாணப் பரிசுகளை கொண்டு வந்து கண்ணன் ருக்மணிக்கு காணிக்கை செலுத்தினார்கள். மகாலக்ஷ்மி, மகாவிஷ்ணு அவதாரமான கிருஷ்ணன் - ருக்மணியை புகழ்ந்து பாடி துவாரகை மக்கள் ஆனந்தப் பரவசம் அடைந்தார்கள்.
இப்படி ருக்மணி கண்ணனுக்கு எழுதிய காதல் கடிதம் கல்யாணத்தில் முடிந்தது.