
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வேந்தன்பட்டி என்ற கிராமத்தில் அமைந்துள்ள நெய் நந்தீஸ்வரர் கோவிலில் இருக்கும் நந்திக்கு செய்யப்படும் நெய் அபிஷேகத்தில் ஈ, எறும்புகள் மொய்ப்பதில்லை. இத்தகைய சிறப்பு வாய்ந்தக் கோவிலைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
இக்கோவிலில் சொக்கலிங்கேஸ்வரரும், மீனாட்சியம்மனும் அருள்பாலிக்கிறார்கள் என்றாலும் நந்தியே இக்கோவிலில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதால், நந்தியின் பெயரிலேயே இந்த கோவில் அழைக்கப்படுகிறது.
புராணக்கதைப்படி, இக்கோவிலில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்த பக்தர் நந்தியை பிரதிஷ்டை செய்யாமல் விட்டுவிட்டார். ஒருமுறை அந்த பக்தருக்கு மாடுகள் விரட்டுவதுப்போல கனவு வந்திருக்கிறது. கடுமையான வயிற்றுவலியும் ஏற்பட்டுள்ளது.
நந்தியை சரியாக பிரதிஷ்டை செய்யாததே இதற்கு காரணம் என்று எண்ணி நந்தியை ஆலயத்தில் பிரதிஷ்டை செய்து அதற்கு நெய் அபிஷேகம் செய்ய, வயிற்றுவலி சரியானது. இதற்கு பிறகு இக்கோவிலில் நந்திக்கு நெய் அபிஷேகம் செய்வது பிரதான அபிஷேகம் செய்யும் வழக்கமாக மாறியது.
இக்கோவிலில் உள்ள நந்திக்கு லிட்டர் கணக்கில் நெய் அபிஷேகம் செய்துக் கொட்டிக் கிடந்தாலும் அங்கே ஈக்களும், எறும்புகளும் வருவதில்லை. கோவிலில் உள்ள நெய் கிணற்றில் ஈக்கள் வருவதில்லை. அபிஷேகத்திற்கு பயன்படுத்தும் நெய்யை பிறர் பயன்பாட்டிற்காக உபயோகப் படுத்துவதில்லை. அதை கோவிலில் உள்ள வாளாகத்தில் அமைந்துள்ள கிணற்றில் கொட்டி விடுகின்றனர்.
தற்போது இந்த கிணறு நெய் நிறைந்த நிலையில் உள்ளது. பொதுவாக நெய்யினுடைய வாசத்திற்கு ஈ, எறும்பு போன்ற உயிரினம் வரும். ஆனால் நந்திக்கு செய்யப்படும் அபிஷேக நெய்யில் இன்றுவரை அப்படி வந்ததில்லை.
இக்கோவில் ரிஷப ராசிக்காரர்களுக்கு பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிறது. கால்நடைகளுக்கு நோய் ஏற்படாமல் இருக்கவும், பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்ற வியாபாரம் செழிக்கவும் இக்கோவிலில் வந்து வழிப்பட்டு செல்கிறார்கள்.
இந்த பகுதியில் 90 வருடமாக இருக்கும் வேப்பமரத்தின் அடியில் தான் நெய் நந்தீஸ்வரர் சுயம்புவாக தோன்றியுள்ளார். இந்த சுயம்பு நந்தீஸ்வரரை 'வேப்பமரத்து நந்தீஸ்வரர்' என்றும் பெயரிட்டு வழிப்பட்டு வருகிறார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலுக்கு ஒருமுறை சென்று வழிப்பட்டு வருவது நன்மையைத் தரும்.