புதுக்கோட்டை மாவட்டம், பேரையூரில் அமைந்துள்ளது அருள்மிகு நாகநாத சுவாமி திருக்கோயில். நாகராஜன் வணங்கி வழிபட்ட தலம் என்பதால் இத்தல இறைவன் நாகநாதர் எனப்படுகிறார். லிங்க சொரூபராக அருளும் நாகநாதருக்கு செய்யப்படும் பால் அபிஷேகம் அவரது உடலில் பட்டவுடன் நீல நிறமாக மாறுவது அதிசயம். கிருத யுகத்தில் புண்ணிய நதிகளை ஒன்று சேர்த்து பிரம்மன் இக்கோயில் திருக்குளத்தில் நீராடி, சிவபெருமானை வழிபட்டு தரிசித்தத் திருத்தலம்.
சர்ப்ப தோஷத்தால் தான் இழந்த ஒளியை மீண்டும் பெற சூரிய பகவான் இத்தல இறைவனை வழிபட்டு பேறு பெற்றார். இந்திரன் சாப விமோசனம் பெற்றது, வருணனின் மகன் தவமியற்றி கலி நீங்கியது, நாகராஜன் பணிந்தேத்தும் திருத்தலம், பஞ்சமாபாதகம் செய்த ஒருவன் இத்தல இறைவனின் பூஜைக்குச் சாம்பிராணி தந்ததால் அவனது எம வாதை குறைக்கும் தலம் என பல பெருமைகளைக் கொண்டது இந்தத் திருத்தலம்.
ராகு தோஷ பரிகாரத்துக்கு திருநாகேஸ்வரத்துக்கும், கேது தோஷ நிவர்த்திக்கு திருக்காளஹஸ்திக்கும் செல்வதற்குப் பதில் பேரையூர் நாகநாதரைத் தரிசித்தால் இந்த இரு கிரகங்களின் தோஷங்களும் ஒன்றாக நீங்கும். இவ்விரு தோஷத்தின் காரணமாக, திருமணம் தடைபடுவோருக்கு தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடக்கும். குழந்தைப் பேறு உண்டாகும். மாங்கல்ய தோஷம் அகலும். அதேபோல், இத்தல நாகநாதரை வழிபட்டால் எண்ணியவை எண்ணியபடி நிறைவேறும். பிரார்த்தனை கைகூடியவர்கள் கல்லில் ஆன நாகர் சிலையை நேர்த்திக்கடனாக இக்கோயிலில் செலுத்துவது வழக்கம்.
இக்கோயில் கருவறையில் அருளும் சிவபெருமான் சுயம்பு மூர்த்தமாவார். கருவறை, அர்த்தமண்டபம், மகாமண்டபம் என்ற அமைப்புகளுடன் கோயில் அமைந்துள்ளது. கருவறையை விட்டு வெளியே வந்தால் நடராஜரும் சிவகாமியும் தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றனர். கருவறையின் வெளிப்புறப் பின்சுவரில் அண்ணாமலையாரும், வடபுறம் பிரம்மாவும், மேற்கே கஜலட்சுமியும், சுப்ரமணியரும் காட்சி தருகிறார்கள். வடக்குப் பிராகாரத்தில் சண்டிகேஸ்வரர் மற்றும் துர்கை சன்னிதிகள் உள்ளன. பிராகாரத்தை வலம் வந்து வலப்புறம் திரும்பினால் அம்பிகையின் சன்னிதியை தரிசிக்கலாம். அபய வரத ஹஸ்தங்களுடன் கருணை பொங்கும் முகத்துடன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார் அன்னை பிரகதாம்பாள்.
கோயிலின் எதிரே அமைந்துள்ளது திருக்குளம். உள்ளே பெரிய மண்டபம் காணப்படுகிறது. கிழக்கிலும், மேற்கிலும் இருவாசல்கள் உள்ளன. இரு வாசல்களிலும் கோபுரங்கள் காணப்படுகின்றன. அங்கு காணப்படுகிறது, ‘ஓம்’ வடிவ புஷ்கரணி. இந்தப் புண்ணிய புஷ்கரணி ஒரு சுனை நீர் ஆகும். இதிலிருந்தே சுவாமி அபிஷேகத்துக்கு தீர்த்தம் எடுக்கப்படுகிறது. பங்குனி மாதம் மீன லக்னத்தில் இந்த சுனையிலிருந்து பேர நாதம் (மிருதங்க முழக்கம்) எழுவதால் இக்கோயில், ‘பேரேஸ்வரம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்தப் பெயரே காலப்போக்கில், ‘பேரையூர்’ என்று மருவியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சுனையின் நீர்மட்டம் குறையும்பொழுது, சுனையின் பக்கச்சுவரில் திரிசூலக் குறியொன்று காணப்படுகிறது. சூலத்துக்கு சரிமட்டத்தில் நீர் அமைந்திருக்கும்போது, அதுவும் பங்குனி மாதம் மீன லக்னத்தில் இந்த சுனையிலிருந்து மிருதங்க ஓசை எழுவது ஆச்சரியம். மற்ற நேரங்களில் நீர்மட்டம் சூலத்துக்கு சரிமட்டமாக இருந்தாலும் அந்த மிருதங்க முழக்கம் கேட்பதில்லை.
சுனையைப் பார்த்தபடி விநாயகர் விக்ரகங்கள், இக்கோயில் பிராகாரத்தில் பிரார்த்தனையாகச் செலுத்தப்பட்ட கல்லால் ஆன நாகர் சிற்பங்கள் உள்ளன. அதையடுத்து சமயக்குரவர்கள் நால்வரும் சேக்கிழார் பெருமானும் காட்சி தருகின்றனர். அவர்களுக்கு எதிரே சின்முத்திரை கோலத்தில் தட்சிணாமூர்த்தி தென்முகமாக அமர்ந்துள்ளார். மேற்கு பிராகாரத்தில் காசி விஸ்வநாதரும், விசாலாட்சியும் காட்சி தருகின்றனர். இக்கோயிலில் இறைவன், இறைவி இருவருக்கும் தனித்தனியே கொடிமரங்கள் அமைந்திருப்பது விசேஷம். இந்த இரு சன்னிதிகளின் எதிரேயும் நந்தி பகவான் வீற்றிருக்கிறார்.