ஸ்ரீ கோதண்டராமரை விபீஷணன் வணங்கும் அபூர்வ கோயில்!

ஸ்ரீ கோதண்டராமரை விபீஷணன் வணங்கும் அபூர்வ கோயில்!

பெரும்பாலும், அனைத்து பெருமாள் கோயில்களிலும் கருவறையில் அனுமன் பெருமாளை வணங்கிய நிலையில் இருப்பதைக் காணலாம். ஆனால், அபூர்வமாக கருவறையில் விபீஷணன் ஸ்ரீ கோதண்டராமரை வணங்கிய நிலையில் உள்ள தலம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டதாகக் கருதப்படும் அருள்மிகு கோதண்டராம ஸ்வாமி திருக்கோயில் வங்காளவிரிகுடா மற்றும் மன்னார் வளைகுடா கடலால் சூழப்பட்ட ஒரு சிறிய தீவில் அமைந்துள்ளது. 1964ம் ஆண்டில் புயலால் இந்தத் தீவு பாதிக்கப்பட்டபோதும், கோயிலுக்கு மட்டும் எந்தவித பாதிப்பும் அடையாமல் இருந்துள்ளது ஆச்சரியமான விஷயம்.

சீதா தேவியை, அசுரன் ராவணன் இலங்கைக்குக் கடத்திய பின்னர், ராவணனின் தம்பி விபீஷணன் சீதா தேவியை ஸ்ரீராமரானிடமே ஒப்படைக்குமாறு ராவணனுக்கு அறிவுறுத்துகிறான். ஆனால், ராவணன் விபீஷணனின் அறிவுரையினை ஏற்காதது மட்டுமின்றி, விபிஷணனை காலால் மிதிக்கச் சென்றான். இதனால் வெறுப்புற்ற விபீஷணன், இலங்கையிலிருந்து புறப்பட்டு ஸ்ரீராமபிரானிடம் சரணடைந்து அவரது படையில் தன்னை இணைத்துக் கொள்ளுமாறு வேண்டினான். வானரப் படையினர் விபீஷணன் ராவணனின் தம்பி என்பதால் சந்தேகமடைந்து அவரை ஏற்க வேண்டாம் என்று ஸ்ரீராமபிரானிடம் கோரிக்கை விடுக்க, அதற்கு ராமபிரான் தன்னிடம் சரணடைந்தவர்களைக் காப்பது தமது கடமை என்று கூறினார். மேலும் அனுமன், ‘விபீஷணன் மிகவும் நல்லவன்’ என்று நற்சான்றிதழை ராமபிரானிடம் தெரிவிக்க, அவரும் விபீஷணனை ஏற்றுக் கொண்டார். விபீஷணனின் நற்குணத்தைக் கருத்தில் கொண்டு இலங்கையை வெற்றி பெறும் முன்பாகவே முறைப்படி ராமபிரான் விபீஷணருக்கு இலங்கையின் அரசனாக இப்பகுதியில் பட்டாபிஷேகம் செய்ததாக ஐதீகம்.

ஒரு சிறிய குன்று போன்ற மேடான பகுதியில் வித்தியாசமான அமைப்போடு திகழும் ஒரு சிறிய தலம் இது. சுமார் இருபது படிக்கட்டுகளைக் கடந்து கோயிலுக்குள் சென்றால், கருவறையில் ஸ்ரீராமர் வில்லுடன் கோதண்டராமராகக் காட்சி தருகிறார்.  எனவே, இத்தலத்துக்கு ஸ்ரீ கோதண்டராம ஸ்வாமி கோயில் என்று பெயர்.  கருவறையில் ஸ்ரீ கோதண்டராமர், லட்சுமணர், சீதா தேவி, அனுமன் மற்றும் விபீஷணன் ஆகியோர் காட்சி தருகிறார்கள். வழக்கமாக கோதண்டராமர் கோயில்களில் அனுமன் ஸ்ரீராமரை வணங்கிய நிலையில் காட்சி தருவார். ஆனால், இக்கோயிலில் விபீஷணன் ஸ்ரீராமபிரானை வணங்கிய கோலத்தில் காட்சி தருவது வேறெங்கும் காணக் கிடைக்காத காட்சியாகும். கருடாழ்வார் மற்றும் ராமானுஜருக்கு இத்தலத்தில் தனி சன்னிதிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் வளர்பிறை நவமி தினத்தன்று இத்தலத்தில் விபீஷண பட்டாபிஷேக முடிசூட்டு விழா உத்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது.  புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று இத்தலத்தில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.

அனைத்து திசைகளிலும் கடல் நீரால் சூழப்பட்டு காட்சி தரும் இத்தலத்தின் தீர்த்தம் ரத்னாகர தீர்த்தமாகும். ஸ்தல விருட்சம் அத்திமரம். இக்கோயிலில் வைகானஸ ஆகமம் கடைபிடிக்கப்படுகிறது.

அமைவிடம்: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி செல்லும் சாலையில் ராமேஸ்வரத்திலிருந்து 13 கி.மீ. தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

தரிசன நேரம்: காலை 7 முதல் மாலை 5 மணி வரை தொடர்ச்சியாக பக்தர்களின் வழிபாட்டுக்காகத் திறந்திருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com