இந்தியக் கோயில்கள் பலவும் பக்தியை தாண்டி, அதிசயங்களையும் மர்மங்கள் பலவற்றையும் தன்னுள் தாங்கி நிற்கின்றன. அவற்றை அறியும்போது உண்மையிலேயே ஆச்சர்யமாகவும் அதிசயமாகவுமே உள்ளது. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான கோயில்தான் குஜராத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ ஸ்தம்பேஸ்வரர் மகாதேவ் கோயில். இக்கோயில் ஒரே நாளில் இருமுறை மறைந்து தோன்றக்கூடிய அதிசய நிகழ்வை சத்தமில்லாமல் தினமும் நிகழ்த்தி கொண்டிருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
இந்தக் கோயில் வடடோராவிலிருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ள கவி காம்பாய் என்ற கிராமத்தில் உள்ளது. இந்த சிவன் கோயில் மிகவும் பழைமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தத்கது. கந்த புராணத்தில் இந்தக் கோயிலைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
தாரகாசுரன் எனும் அரக்கனை வதம் செய்த முருகன், அவனுக்கு சிவபெருமானின் மீது உள்ள பக்தியை கண்டு அதை மெச்சும் வகையில் இந்தக் கோயிலை எழுப்பினார் என்பது புராணம்.
தாரகாசுரன் எனும் அசுரன் ஒரு சிவ பக்தன். அவன் சிவபெருமானிடம் கடுமையாக தவமிருந்து ஒரு வரத்தை பெற்றான். சிவபெருமானின் மகனைத் தவிர வேறு யாராலும் தன்னை கொல்ல இயலாது என்பதே அந்த வரம். இதனால் ஆணவம் கொண்ட தாரகாசுரன் தன்னை அழிக்க யாரும் இல்லை என்ற கர்வத்தில் மூன்று உலகிலும் நிறைய அழிவுகளை ஏற்படுத்தினான். இதனால் சிவபெருமான் தன்னுடைய நெற்றிக்கண்ணில் இருந்து முருகப்பெருமானை உருவாக்கினார். பின்பு முருகப்பெருமான் அவனை அழித்ததாக கதை.
ஸ்ரீ ஸ்தம்பேஸ்வரர் மகாதேவ் கோயில் அரபிக்கடலின் கரையில் அமைந்துள்ளது. அதனால் அதிகப்படியான அலைகள் வரும் வேலையில் இந்தக் கோயில் கடலில் மூழ்கிவிடும். குறைவான அலைகள் இருக்கும்பொழுது கோயில் வெளியே தெரிய வரும். குறைவான அலைகள் இருக்கும் சமயங்களில் பக்தர்கள் கோயிலுக்குச் சென்று சுவாமியை தரிசனம் செய்து விட்டு வருவார்கள். அதிக அலை இருக்கும் சமயம் கோயிலின் கருவறை முழுவதுமே மூழ்கி விடும். கோயிலின் கோபுரம் மட்டுமே வெளியில் இருந்து பார்க்கும் பொழுது தெரியும். இப்படி ஒரு நாளில் இக்கோயில் இருமுறை கடல் நீரில் மறைந்து தோன்றுகிறது.
இந்த அதிசய நிகழ்வை காண்பதற்காகவும், சிவபெருமானை தரிசிப்பதற்காகவும் உலகம் முழுவதும் இருந்த ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து தரிசனம் செய்துவிட்டுச் செல்கின்றனர்.