கோயில்கள் என்றாலே அதிசயம் நிறைந்ததுதான். அதிலும் சிவன் கோயில் என்றால் சொல்லவே வேண்டாம். அப்படி ஒரு வித்தியாசமான பல ஆச்சர்யங்களை தன்னுள் கொண்டுள்ள சிவன் கோயில்தான் மஹாராஷ்ட்ரா மாநிலம், அஹமத் நகர் மாவட்டத்தில் ஹரிஸ்சந்திரா காட் கோட்டையில் அமைந்துள்ள கேதரேஸ்வர் குகை கோயில். இந்தக் கோட்டை புனேவிலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பையிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
கேதரேஸ்வர் கோயிலை 6ம் நூற்றாண்டில் காலசூரி வம்சத்தை சேர்ந்தவர்கள் கட்டினார்கள். ஹரிஸ்சந்திரா காட் கோட்டை மலையேற்றத்திற்கு மிகவும் புகழ் பெற்றதாகும். இங்கே வருடா வருடம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள். இயற்கை அழகு கொஞ்சும் இவ்விடத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலை தரிசிப்பதற்கும் பக்தர்கள் வருகை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கேதரேஸ்வர் குகை கோயில் எப்போதும் தண்ணீர் சூழ்ந்திருக்கும். இது, இக்குகை கோயிலை மற்ற கோயில்களை விட தனித்துவமாகக் காட்டுகிறது. இக்கோயிலில் ஐந்தடி உயரத்தில் சிவலிங்கம் உள்ளது. இந்த சிவலிங்கம் கோயிலின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்குச் சென்று சிவனை தரிசிக்க வேண்டுமானால் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி சென்றுதான் தரிசித்து விட்டு வர முடியும். கோடைக்காலத்திலும் இக்கோயிலில் நீர் வற்றாமல் அப்படியேதான் இருக்குமாம். மழைக்காலத்தில் நீர்வரத்து அதிகரித்திருக்குமாம்.
இங்கே அமைந்திருக்கும் சிவலிங்கம் சுயம்பு மூர்த்தம் என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் இருக்கும் இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், இங்கே சிவலிங்கத்தை சுற்றி அமைந்திருக்கும் நான்கு தூண்களேயாகும். ஒவ்வொரு தூணும் ஒவ்வொரு யுகத்தை குறிப்பதாகச் சொல்லப்படுகிறது.
கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் ஆகிய நான்கு யுகங்களாகும். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் ஒவ்வொரு தூண் விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்த குகை கோயிலில் ஒரேயொரு தூண் மட்டுமே மிச்சமுள்ளது. அந்தத் தூணும் கலியுகத்தின் முடிவில் விழுந்துவிடும் என்று மக்களால் நம்பப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், இக்குகையில் இருக்கும் தூண்கள் பிரம்ம தேவனின் பக்தியை பறைச்சாற்றுகின்றன. இங்கேதான் பிரம்ம தேவன் சிவனை நோக்கித் தவமிருந்து அவரை வழிபட்டதாகக் கூறப்படுகிறது. இந்தத் தூண்கள் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் என்னும் தத்துவத்தை குறிப்பிடுகிறது என்று நம்பப்படுகிறது. யுகங்கள் மாறும்போது இத்தூண்களின் உயரத்தில் மாற்றம் ஏற்பட்டுவதாகக் கூறப்படுகிறது. இக்குகையில் இருக்கும் தண்ணீர் கோடைக்காலத்தில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் கதகதப்பாகவும் இருக்குமாம். இக்கோயிலின் கிழக்கே அமைந்திருக்கும் சப்த தீர்த்த புஷ்கரணிக்கு எல்லாவித நோய்களைத் தீர்க்கக்கூடிய குணங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது.
எனவே, இக்கோயில் இறை வழிபாட்டுக்கு மட்டுமின்றி, மலையேற்றம் செய்ய நினைப்பவர்களையும், ஆன்மிக சுற்றுலா செல்ல நினைப்பவர்களையும், சாகசப் பிரியர்களையும் நிச்சயமாக ஏமாற்றமடையச் செய்யாது என்பது நிதர்சனமான உண்மை.