ஆடி அமாவாசையன்று அப்பருக்கு கயிலாயக் காட்சி கொடுத்த சிவபெருமான்!

திருவையாறில் அப்பருக்குக் கயிலைக் காட்சி
திருவையாறில் அப்பருக்குக் கயிலைக் காட்சி
Published on

ஞ்சை மாவட்டம், திருவையாறில் அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு அப்பருக்கு (திருநாவுக்கரசருக்கு) கயிலாய காட்சி திருவிழா நடைபெறும்.

ஆரூரில் பிறந்தால் முக்தியும், அண்ணாமலையை நினைத்தால் முக்தி, ஐயாறு மண்ணை மிதித்தால் முக்தி என்று சொல்லும் அளவுக்கு மிகவும் பெருமை வாய்ந்த தலம் திருவையாறு. சோழ நாட்டில் அன்னை காவிரியால் எழில் பெறும் கரைகள் வெறும் மண்ணகமல்ல, விண்ணகம். அதனால்தான் திருநாவுக்கரசர் இங்கேயே சுற்றிச் சுற்றி வலம் வந்தார். இறுதியில் அவருக்குக் கயிலையின் மீது நாட்டம் ஏற்பட்டது. எனவே, கயிலை நோக்கி சென்றார். யாத்திரையாக பல்வேறு தலங்களுக்கு சென்றபோது தென் கயிலாயமான திருக்காளத்தியப்பரை வணங்கினார்.

அதன் பின் வட கயிலாயங்களில் சிவபெருமானின் அருட்கோலங்களை தரிசித்து விட்டு, கங்கைக் கரையில் உள்ள வாரணாசியை அடைந்து, அதன் பின் மனிதர்களால் எளிதில் அடைய முடியாத  கயிலை மலையை நோக்கி நடந்து சென்றார். இரவு, பகலாக பழங்கள் மட்டுமே உண்டு, தனது பயணத்தை விடாமலும், பக்தியில் உறுதியுடன், வைராக்கியத்துடன், மார்பினால் ஊர்ந்தும், புரண்டும் சென்றார்.

அப்பரை சோதிக்க எண்ணிய சிவபெருமான், ஒரு முனிவர் வடிவில் தோன்றி, "இம்மானிட வடிவில் கயிலை செல்வது கடினம். முற்றிலும் இயலாது” என்றார். அதற்கு அப்பர் பெருமான், "ஆளும் நாயகன் கயிலையில் இருக்கக் கண்டு அல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்" என்று பதிலளித்து உறுதியுடன் தனது யாத்திரையைத் தொடர்ந்தார்.

அவரது வைராக்கியத்தை மெச்சிய சிவபெருமான் தனது சுய ரூபத்தைக் காட்டி, ‘‘இங்குள்ள பொய்கையில் மூழ்கி திருவையாற்றை அடைந்து, நாம் கயிலையில் இருக்கும் கோலத்தைக் காண்க" என்று அருளி மறைந்தார்.

அங்கு தடம் புனல் ஒன்று நாவரசர் முன் தோன்ற, அதில் மூழ்கிய இடமே, திருவையாற்றின் கோயிலுக்கு வடக்கே சமுத்திர தீர்த்தம், கோயில் குளம் என்றும் வழங்குகிறது. அப்பர் குட்டை (உப்பங்கோட்டை) திருக்குளத்தின் மூழ்கி எழுந்தவுடன் திருக்கயிலாயத்தில் சிவபெருமான், உமா தேவியுடன் வீற்றிருக்கும் காட்சி கண்டு நெகிழ்ந்தார்.

இதையும் படியுங்கள்:
நோயெதிர்ப்பு மண்டலத்தை பராமரிப்பதில் சர்க்கரைவள்ளிக் கிழங்கின் பங்கு!
திருவையாறில் அப்பருக்குக் கயிலைக் காட்சி

சிவமும், சக்தியுமாய் காட்சி தருவதை வியந்து நிறைய பாடல்களைப் பாடினார். ‘கண்டேன் அவர் திருப்பாதம் கண்டறியாதன கண்டேன்' என தான் கண்ட காட்சிகளை நமக்கும் தனது பதிகம் மூலம் சொல்கிறார். திருக்கயிலையே திருவையாற்றுக்கு வந்ததை பாடி பரவசமாகிறார்.

ஆடி அமாவாசை அன்று உப்பங்கோட்டையில் (குளத்தில்) அப்பர் எழுந்தருளி தீர்த்தவாரியும், இரவு 9 மணி அளவில் அப்பர் பெருமானுக்கு திருக்கயிலாயக் காட்சி கொடுக்கும் விழாவும் நடைபெறும். பக்திப் பரவசமான இக்காட்சியைக் காணக் கண் கோடி வேண்டும். இதனை திருவையாறுக்கு சென்று தரிசித்தால் மட்டுமே  கயிலையை தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருவையாறு திருத்தலம் சென்று கயிலை தரிசனம் பெற்று இறைவனின் அருள் பெறுவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com