செவ்வாய் தோஷ நிவர்த்தி தரும் ஆடி கிருத்திகை விரதம்!

செவ்வாய் தோஷ நிவர்த்தி தரும் ஆடி கிருத்திகை விரதம்!

முருகப்பெருமானுக்கு மிக உகந்த கார்த்திகை விரதம் மேற்கொண்டால், ஆறுமுகனைப் போலவே அழகான பிள்ளைப் பேறு வாய்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கிருத்திகை நட்சத்திரத்தில் விரதம் அனுசரித்து தானம் செய்பவர்களும் அவரது வம்ச பரம்பரையினரும் அளவற்ற நன்மைகளை அடைவர் என்று புராணங்கள் கூறுகின்றன. தட்சிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும் தை மாத உத்தராயண புண்ணிய காலத்தில் வரும் கார்த்திகை நட்சத்திரமும் முருகப்பெருமான் ஆலயங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. முருகப்பெருமானுக்காக உப்பில்லா உணவை எடுத்துக்கொண்டு கார்த்திகை விரதம் இருப்பது சிறப்பானதாகும். கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத் துணை, நல்ல குணமுள்ள பிள்ளைகளைப் பெறுவர் என்பது ஐதீகம்.

செவ்வாய் தோஷம் மற்றும் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் திருமணத் தடை, இதனால் ஏற்படும் கர்ம புத்திர தோஷம், மண் மனை சொத்து வழக்குகளில் பிரச்னைகள், சகோதர சங்கடங்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஆடி கிருத்திகை தினத்தில் முருகனை நினைத்து விரதம் இருந்தால் அத்தனை கவலைகளும் பிரச்னைகள் நீங்குவதோடு, வாழ்வில் மகிழ்ச்சி உண்டாகும். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து அக்னி ரூபத்தில் உதித்தவர் ஆறுமுகப் பெருமான். சரவணப் பொய்கை தாமரை மலரில் விடப்பட்ட ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். இந்த கார்த்திகை பெண்களை சிறப்பிக்கும் விதமாக முருகப்பெருமான் கார்த்திகேயன் என்று அழைக்கப்படுகிறார்.

இன்றைய நாளில் கந்த சஷ்டி கவசம் படிப்பது சிறப்பு. கார்த்திகை விரதத்தை தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் கடைபிடிப்பதால் வாழ்க்கையில் பெரும் வெற்றிகளைக் காணலாம். கார்த்திகை விரதத்தினை தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் பின்பற்றி நாரதர், ‘தேவரிஷி’ பட்டத்தைப் பெற்றதாக வரலாறு. ஆடி கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் யாவும் கிடைக்கும். தை மாத கார்த்திகையை விட, ஆடி கார்த்திகையே சிறப்பானதாகச் சொல்லப்படுகிறது. ஆடி மாதத்தில் தொடங்கி, ஆறு மாதங்கள் கார்த்திகை விரதம் இருந்து, தை மாத கார்த்திகையில் விரதத்தை நிறைவு செய்யலாம்.

முருகப்பெருமானுக்குரிய அறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோயிலில் ஆடி கிருத்தியை திருவிழா ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படும். இன்று முருகப்பெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்குக் காட்சி அளிப்பார். மூலவர் முருகப்பெருமானுக்கு இன்று சிறப்பு அபிஷேகம் செய்து தங்கக் கவசம், வைர கிரீடம், பச்சைக்கல் மரகத மாலை அணிவிக்கப்படுவது சிறப்பம்சம். இந்நாளில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகள் சுமந்து வந்து வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமானை தரிசனம் செய்வர். ஆடி கிருத்திகை தினமான நாளை புதன்கிழமை தொடங்கி, மூன்று நாட்கள் இந்தக் கோயிலில் தெப்பத்  திருவிழா சிறப்பாக நடைபெறும். மாலை 7 மணி அளவில் காவடி மண்டபத்திலிருந்து வள்ளி தெய்வானை முருகப்பெருமான் உத்ஸவர் தேர் வீதி வலம் வந்து படிக்கட்டுகள் வழியாக மலையடிவாரத்தில் உள்ள சரவணப் பொய்கை குளத்துக்கு எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்டிருக்கும் தெப்பத்தில் எழுந்தருளுவார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com