

ஆடி, சித்திரை, ஐப்பசி போன்ற மாதங்களில் பிறக்கும் குழந்தைகளைப் பற்றி பரவியுள்ள சொற்றொடர்கள் ஆன்மீக, அறிவியல் அடிப்படையற்ற மூடநம்பிக்கைகள் என இந்த கட்டுரை விளக்குகிறது. காலநிலை, விவசாய வேலைப்பளு காரணமாக ஆடி மாதப் பிறப்புக்கு பயம் உருவான வரலாற்றைச் சுட்டிக்காட்டி, ஜாதக கிரக நிலை மற்றும் நல்ல வளர்ப்பே குழந்தையின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் என வலியுறுத்துகிறது.
ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்கும். ஞாயிற்றுக்கிழமை குழந்தை பிறந்தால் நாய் படாதபாடு பட வேண்டும். சித்திரையில் பிறந்தால் பெத்தவனுக்கு ஆகாது. ஆனியில் பிறந்தால் கூனி போகும். ஐப்பசியில் பிறந்தால் பசியால் வாடும் போன்ற சொற்றொடர்கள் அதிகமாக உலா வருகின்றன. ஆன்மீக ரீதியாக இந்த சொற்றொடர்கள் அனைத்தும் அறிந்தும் உணர்ந்தும் சொல்லப்பட்டவையா என்பது குறித்து தெளிவான விளக்கத்தை இப்பதிவில் காண்போம்.
ஆடி மாதம் ஆகாத மாதமா?
தட்சணாயன புண்ணிய காலம் தொடங்கும் மாதமான ஆடி மாதத்தில் தேவர்களின் இரவு பொழுது துவங்குகிறது. அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில்தான் பூமாதேவி ஆண்டாளாக அவதரித்தாள்.
ஒவ்வொருவரும் ஆடி மாதத்தில்தான் குலதெய்வ கோவிலில் பொங்கல் வைத்து வருடம் தோறும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றி வழிபடுகின்றனர்.
ஆடி மாதத்தில் வரும் செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை பௌர்ணமி, அமாவாசை கிருத்திகை என அனைத்து நாட்களும் வழிபாட்டுக்கு உரிய நாட்களாக சிறப்பிடம் பெற்றுள்ளன. மேலும் சிறப்பான முறையில் ஆடி மாதத்தில்தான் விரதங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுப காரியங்கள் ஆடி மாதத்தில் விலக்கி வைக்கப் பட்டாலும் கூழ்வார்த்தல் திருவிழா ஆடி மாதத்திற்கே உரிய பிரசித்தி பெற்ற விழாவாக தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது. ஆன்மீக காரணங் களுக்காகவும் அறிவியல் காரணங்களுக்காகவும் திருமணமான புதிய தம்பதியரை ஆடி மாதத்தில் பிரித்து வைக்கின்றனர். இதனால் ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு ஆகாது என்ற கருத்து பெரும்பாலான மக்களிடம் மையம் கொண்டுள்ளது.
ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தை ஆட்டிப்படைக்குமா?
அம்மனுக்கு உரிய மாதமான ஆடி மாதத்தில் தெய்வீக பண்டிகைகள் தொடங்குகிறது. ஆடி மாதத்தை ஜோதிட சாஸ்திரத்தில் கர்கடக மாதம் என்று அழைப்பார்கள். குருவின் நட்சத்திரமான புனர்பூசம் நான்காம் பாதத்தில் சூரியன் நுழையும் நேரத்தில் கடக ராசியில் சூரியன் செல்வதே ஆடி மாத துவக்கம் ஆகும்.
நம் முன்னோர்கள் அந்தந்த கால பருவ சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் திருவிழாக்களையும், உற்சவங்களையும் ஏற்படுத்தி வைத்துள்ளனர். மேலும் விரத வழிபாடுகளும் அவ்வாறே கடைபிடிக்கப்படுகிறது.
எதுகை மோனையுடன் புதிய புதிய சொற்றொடர்களை கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள். அதன்படிதான் `ஆடியில் பிறந்தால் ஆட்டிப்படைக்கும் `என்ற சொற்றொடரும் உள்ளது. இந்த சொற்றொடர்களுக்கு எந்த ஆதாரமும் கிடையாது. முற்றிலும் பொய்யானவை. குழந்தை எந்த மாதத்தில் எந்த நேரத்தில் பிறந்து இருந்தாலும் அவர்களின் ஜாதகத்தில் அமைந்துள்ள கிரக நிலையின் படியே வாழ்க்கை அமையும் என்பதுதான் உண்மையான கூற்று.
`ஆடியில் பிறந்தால் ஆகாது `சொல்ல காரணம்
சித்திரை, வைகாசி மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும். அந்த நிலையில் இருந்து மாறி ஆடி மாதத்தில் காற்று அடிக்க ஆரம்பித்து காலநிலை மாறிவிடும். இதனால் நோய்கள் பரவும் அபாயம் உண்டு. ஆகவே ஆடி மாதத்தில் பிறக்கும் குழந்தைக்கு நோய் தொற்று அதிகம் ஏற்படும் என நம் முன்னோர்கள் கணித்திருக்கலாம். அதன் அடிப்படையிலேயே பிறக்கும் குழந்தைகள் பாதிக்க அதிக வாய்ப்பு உண்டு என நினைத்திருப்பதால் ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆகாது என கூறியிருக்கலாம்.
`ஆடிப்பட்டம் தேடி விதை` என்பது பழமொழி. அதன்படி விவசாய பணிகள் வாழ்வியல் ரீதியாக துவங்கும் ஆடி மாதத்தில் வீட்டில் உள்ள அனைவரும் விவசாய வேலைக்கு சென்று விடுவார்கள். இந்நேரத்தில் குழந்தை பிறந்தால் தாயையும் சேயையும் கவனிக்க ஆள் இல்லாமல் கஷ்டப்படுவார்கள் என்பதால் கிராமங்களில் இதுபோன்ற சொல் வழக்கு வந்திருக்கலாம்.
மாற்றம் ஒன்றே மாறாதது. இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தை வளர்ப்பு முற்றிலும் மாறிவிட்டது. ஆகவே எதுகை மோனை உடன் கூடிய நம் முன்னோர்கள் கூறிய சொற்றொடர்களின் உண்மையான காரணங்களை அலசி ஆராய்வதோடு அனைத்தும் இன்றைய வாழ்விற்கு ஒத்துப் போகிறதா என்பதை முழுமையாக அறிந்தே எந்த ஒரு கூற்றையும் நம்பவேண்டும்.
இவை எல்லாவற்றிற்கும் மேலாக வீட்டிற்கு புதிதாக வரும் நல்வரவான குழந்தைகள் எந்த மாதத்தில் பிறந்தாலும் அவர்களை நல்ல மனிதர்களாக வளர்ப்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு அதற்கு ஏற்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.
இந்தப் பதிவைப் படிப்பதன் மூலம் ஆடி மாதக் குழந்தை பிறப்பு குறித்து தலைமுறை தலைமுறையாக நிலவும் தேவையில்லாத பயம் மற்றும் மூடநம்பிக்கைகளில் இருந்து முற்றிலுமாக விடுபடுவீர்கள். உங்கள் குழந்தையின் எதிர்காலத்தை ஜோதிட மற்றும் ஆரோக்கிய ரீதியான தெளிவான பார்வையோடு அணுகும் மனதிடத்தைப் பெறுவீர்கள்.