நம் பாரத தேசத்தில் நதிகளை பெண் தெய்வங்களாக உருவகித்து வழிபடுவது வழக்கம். வடக்கே கங்கா, யமுனா, நர்மதா போன்ற நதிகள் இருப்பது போல, தமிழகத்தில் காவிரி நதி பிரசித்தமானது. இந்த நதியை காவிரி அம்மன் என்றே வழிபடுவது வழக்கம். அதுவும் ஆடி மாதம் 18ம் நாள் ஆடி பதினெட்டாம் பெருக்கன்று, வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து வரும் காவிரியை மக்கள் பெரும் விழா எடுத்து வழிபாடு செய்வது வழக்கம்.
தட்சிணாயன புண்ய காலமாகிய ஆடி மாதம் தொடங்கினாலே கிராமங்களில் கோயில் திருவிழாக்கள் களைகட்ட ஆரம்பித்துவிடும். ஆடி மாதத்தில் அம்மன் வழிபாடு மிகவும் விசேஷமானது. ஆடிப்பெருக்கு குறித்து சிலப்பதிகாரத்திலேயே குறிப்புகள் காணப்படுகின்றன. அதேபோல சங்க இலக்கியங்களிலும் ஆடி 18ம் பெருக்கு வழிபாடு குறித்து குறிப்புகள் உள்ளன. ஆடி 18ம் நாள் அன்று நாம் சப்த கன்னியரை வழிபடுவதால் நாம் எதை நினைத்து வழிபட்டாலும் அது நிறைவேறும் என்பது ஐதீகம்.
சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய மாதங்களில் சுட்டெரித்த வெயில் குறைந்து இந்த மாதத்தில் பருவ மழை பெய்வதும், ஆறு, குளங்கள் நீரால் நிரம்பி பயிர்கள் செழிக்கக் கூடிய மாதம் என்பதால் இந்த மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. புது வெள்ளம் பெருகுவதால் ஆடிப் பெருக்கு என முன்னோர்கள் இந்த நாளை மிகவும் கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.
நம்முடைய இயற்கை செல்வமாகிய நீர் வளத்தை காவிரி அம்மன் வடிவத்தில் மக்கள் வழிபடுகின்றனர். நீர் வளம் பெருகும் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு விவசாய வேலைகளுக்கு உகந்த நாளாகவும் கருதப்படுகிறது. இது இயற்கையன்னைக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு விழாவாகவும் கொண்டாடப்படுகிறது. ஆடிப் பெருக்கு, ஆடி பதினெட்டாம் நாள் வருவதால் பதினெட்டாம் பெருக்கு என்றும் இது கூறப்படுகிறது.
கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் சனி பகவானுக்குரியது. சூரியன் சனியின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு புதன் அதிபதியாக இருக்கும் ஆயில்யம் நட்சத்திரத்துக்கு மாறும் நாள்தான் ஆடி பதினெட்டாம் நாள். சூரியனும் புதனும் நட்பு கிரகங்கள். சூரியனின் கதிர்கள் ஆடி பதினெட்டாம் நாள், அதுதான் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளன்று, ஒரு புது சக்தியைப் பெருகிறது. சூரியனின் இந்த சக்தி நிறைந்த கதிர்களால் ஆடி மாதத்தில் விதைக்கப்படும் விதைகளுக்கு ஒருவித புத்துணர்ச்சியும், வலிமையும் கிடைத்து, பச்சை பசேல் என்று சிறப்பாக வளருகிறது. ஆகையால், ‘ஆடிப்பட்டம் தேடி விதை’ என முன்னோர்கள் சொல்வது வழக்கம்.
ஆடி 18ம் பெருக்கு அன்று கிராமங்களில் காவிரியம்மனுக்கு ஆற்றங்கரையில் வழிபாடு செய்து அன்று தேங்காய் சாதம், புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம் போன்ற பலவிதமான சித்திரான்னங்களை அம்மனுக்குப் படைத்து காவிரி ஆற்றுக்கு மலர் தூவி, தூப, தீப ஆராதனை செய்து வழிபடுவர். இந்த அற்புத தினத்தில் காவிரி படித்துறையில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து விளக்கேற்றி வழிபடுவர். இதை ஒரு நோன்பாக பாவித்து அன்று மஞ்சள் சரடு கட்டிக்கொள்ளும் பழக்கமும் உண்டு. புது வெள்ளமாக ஓடும் காவிரி ஆற்றில் நீராடி அம்மனை வணங்குவதால் காவிரியன்னை பெண்களுக்கு மாங்கல்ய பலத்தை அருளுவாள் என்பது ஐதீகம். சரடு கட்டிக்கொண்டதும் சுமங்கலிப் பெண்கள் ஒரு ஐந்து பெண்களுக்காவது மங்கலப் பொருட்களான வெற்றிலை, பாக்கு, மஞ்சள், குங்குமம், வளையல் போன்றவற்றை தானமாக அளித்தால் மாங்கல்ய பலன் பெருகும் என்றும் நம்பப்படுகிறது.
ஆடிப்பெருக்கு பண்டிகை தமிழ்நாட்டில் , ஈரோடு, பரமத்தி, குளித்தலை, திருச்சி, தஞ்சாவூர், திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை, பூம்புகார் ஆகிய மாவட்டங்களில் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. சில கிராமங்களில் இந்த நாளில் 'முளைப்பாரி' உத்ஸவமும் கொண்டாடப்படுகிறது. கிராமங்களில் பெண்கள் தங்கள் தலையில், முளைவிட்ட தானியங்களை மண் பானைகளை சுமந்துகொண்டு ஆற்றை நோக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைப்பது வழக்கம். கிராம தேவதையும் அழகாக அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவார். இந்த சடங்கு மற்றும் ஊர்வலம் மூலம் மழை, விவசாயம், குடும்ப நலன் ஆகிய எல்லாவற்றுக்கும் மக்கள் பிரார்த்தனைகள் செய்து கொள்வார்கள். இன்றைய தினம் ஆடிப் பெருக்கு. நாமும் காவிரிக் கரைக்குச் சென்று காவிரி அன்னையை வழிபட்டு வாழ்வில் எல்லா நலங்களையும் பெறுவோம்.