
பொங்க வைப்போம் - அம்மன் பாடல்
பொங்க வைப்போம்! பொங்க வைப்போம்
குலவபோட்டு பொங்க வைப்போமே!
கோலவிழி அம்மனுக்கு பொங்க வைப்போம்!
ஆலயம்மன் கோவிலுக்கு பொங்க வைப்போமே!
வேலன்தாய் காலடியில் பொங்க வைப்போம்!
வேண்டும் வரம் பலித்திட பொங்க வைப்போமே!
கோட்டமாரி அம்மனுக்கு குங்குமப்பூ சேல வைச்சு
நாட்டரசன் அம்மனுக்கு நம்மஊர் மாரிக்கும்
காட்டெல்ல பண்ணாரி அம்மனுக்கு பொங்க வைப்போம்
நாட்டமுடன் பொங்க வைப்போம்! நல்லபடி வைப்போமே!
வேப்பிலைக் கட்டிக்கிட்டு வேற்காட்டு அம்மனுக்கு
காப்புக்கட்டி ஊருக்குள்ள காவல் காக்கும்
தோப்புக்குள்ள குளக்கரையில் பொங்க வைப்போம்
பூப்பந்தல் போட்டு பூக்குழி இறங்கி வைப்போமே
தில்லைக்காளி அம்மனுக்கு திருவக்கரை ஆத்தாளுக்கு
அல்லல்தீர்க்கும் அங்காளிக்கும் பொங்க வைப்போம்!
பொல்லாவினை யறுக்கும் பகைமுறிக்கும் அம்மனுக்கு
நல்லபடி பாலும்பச்சரிசி கலந்து பொங்க வைப்போமே!